உனக்காய் வலிகள் சுமப்பேன்
தூக்கம் போனால் சொல்லிச் செல்லு
தூங்கப் பாடல் தருவேன் - வலி
ஏக்கம் தந்தால் என்னைக் கொல்லு
எழுந்தென் உயிரைத் தருவேன் !
இன்பக் கானம் இசைக்கும் குயிலே
இதயம் துடிப்பதைக் கேளு - என்
அன்பின் கவிகள் அணைக்கும் வரையில்
அழுகை தவிர்த்தே வாழு !
காவியம் எழுதிய கம்பன் போலே
காதல் தந்தே மணப்பேன் - இல்லை
ஓவியம் வரையும் தூரிகை போலே
உனக்காய் வலிகள் சுமப்பேன் !
என்றன் வலிகளை எடுத்தே எறிந்தாய்
எப்படி நன்றி சொல்வேன் - தினம்
உன்றன் உயிரில் ஓரிடம் தந்தால்
ஒவ்வோர் பிறப்பையும் வெல்வேன் !
முத்துச் சரத்தின் முடிச்சும் அறுந்தால்
முற்றம் எல்லாம் சிதறும் - வாழ்வில்
நித்தம் உன்னை நினைக்க மறந்தால்
நெஞ்சம் வெடித்துப் பதறும் !
கொஞ்சம் கோபம் கொஞ்சம் மழலை
குழைத்த அன்புக் கோதை - மனம்
விஞ்சும் அளவில் விருப்பங் கொண்டால்
விடியும் என்றன் பாதை !
தென்னங் கீற்றில் தவழும் தென்றல்
தேவதை உன்றன் மூச்சு - இருள்
மின்னல் ஒளியில் மிளிரும் நிலவாய்
மேனகை உன்றன் பேச்சு !
ஒவ்வோர் நொடியும் உன்னால்க் கவிகள்
ஓடும் நதிபோல் பாயும் - உடல்
அவ்வோர் பொழுதிலும் ஆலயம் ஆகும்
அறிந்தால் அணைப்பாய் நீயும் !
விதைகள் எல்லாம் பூவாய் முளைக்கும்
விரைவாய் உன்குழல் செருக - உயிர்
வதைகள் பட்டும் வலியைப் பொறுக்கும்
வண்டமிழ் தன்னைப் பருக !