வெளிப்படு காட்சி
அதீத ஓசையின்
அசைவில்
ஆர்ப்பரித்துச் சென்ற
பெருமழையின்
பின்னான
சிறு சாரலின்
சாளரத்துள்
ஊடுருவும்
சாயங்கால
இள வெயில்
சட்டென்று
சிறு நொடியில்
நுட்பமென
உருக்குலைந்து
நிலை பிரிந்து
தாவும் வர்ணங்கள்
தாமாக நிரல் பட்டு
வானைச் சிறைப் பிடிக்க
வில்லாக மாறி நிற்க..
தேங்கிய மழை சேர்ந்து
தென்னைமரக் கீற்றினிடை
தீர்த்தமெனத் தீராது
வழிந்தோடித்
தெப்பக்குளம் அமைக்க
சில்லென்று உள்ளிறங்கும்
குளிர் நீரில்
சிறகமிழ்த்தும்
சிறுகுருவி குதுகலிக்க....
தொழுவத்து வாசனை
மாறாத திண்ணைகளில்
தொலைந்து போகாத
வெற்று வயல்களின்
பூரிப்பில்
தம்நிலை மறக்கும்
உழவர் தம் சந்தோச
முணு முணுப்புக்கள்...
இவற்றையெல்லாம்
திரும்பிப் பார்க்க
முடியாத் தூரத்தே
சிறைப் பிடிக்கப் பட்ட
காலத்தின் கடிகாரத்தில்
சிறு பூச்சியாய் ஒளிரும்
பிடிவாதமான ஒளியில்
நிறம் மாறா
வண்ணங்கள்
சேர்த்து வரைந்து
கொண்டிருக்கிறேன்
ஓவியம் ஒன்று...