பெண்ணியம்
அன்பு சகோதரியே.......
ஊண், உடம்பு உயிர் கொண்ட
அனைத்தும் இவ்வுலகில் ஒன்றே...
அனைத்தும் இங்கு உயிரே..
நெருப்பில் போட்டால்
பிணம் கூட எழுந்து நிற்கும்,
காலமெல்லாம்,
அடிமை நெருப்பில் கனன்றும்,
விழித்துக்கொள்ள இன்னுமா தாமதம்..
சாதனைகள் புரிய உவப்பு இருப்பினும்,
சிகரங்கள் தொடும் தெம்பு இருப்பினும்,
நமது உணர்வுகளும், கனவுகளும்
தொண்டை குழிக்கும், நெஞ்சு குழிக்குமான
இடைவெளிகளில் அமிழ்ந்து போகும்
அநியாயம் இன்னும்
எத்தனை காலங்கள் தொடரும் ?
கலாச்சார பதிவுகளுக்காக
நமது காலடித்தடங்கள்
அழிக்கப்படுவதை இன்னும்
எத்தனை நாள் விட்டு வைத்திருப்போம்...
கை தூக்கி விட காத்திருந்தால்
காலம் நமக்காய் தாமதிக்காது...
நமக்கான பாதையை நாமே வகுப்போம்..
முட்களில் நடப்பது நமக்கென்றும்
புதிதல்ல...
எது நமது உரிமை,
எது நமது சுதந்திரம் என்ற
விழிப்புணர்வு அற்ற பெண்டிரே !!!
விழித்துக்கொள்வோம்,
எல்லாருக்கும் எல்லாம்
சமமாய், நிறைவாய்
கிடைப்பது தான் சுதந்திரம்.
அதை கேட்டுப்பெறுவது தான்
நமது உரிமை.
கேட்காமல் எதுவும் கிடைக்காது,
தட்டாமல் எதுவும் திறக்காது,
திறக்காத கதவுகளை உடைப்போம்.
மண்ணில் போட்டு நசுக்கினாலும்,
வேர் விட்டு விருட்சமாவோம்....
வாழ்வோ தாழ்வோ..
இனி நம் கையில்..