ஆட்டோ வாகனங்கள்

ஆட்டோ வாகனங்கள்


சென்னை நகரத்தின்

சின்னஞ் சிறு தெருக்களுள்ளே

சீறிப் பாய்ந்து செல்லும்

மஞ்சள் நிறத் தோல் போர்த்த

மூன்று கால் மிருகங்கள்!



முதுமொழிகள் சிலவற்றையும்

புது மொழிகள் பலவற்றையும்

முதுகிலே சுமந்து செல்லும்

நடமாடும் புத்தகங்கள்!



சின்னச் சின்ன இடைவெளியிலும்

மூக்கை நுழைத்து முன்னேறும்

மூக்கணாங் கயிறில்லா

மஞ்சு விரட்டுக் காளைகள்.!



பிரசவத்திர்க் கிலவசமென

பரைசாற்றி இருந்தாலும்

குலுங்கும் குலுக்கலாலே

பிரசவத்தையே இலவசமாக்கும்

மருத்துவ மனைகள்!



கால் தரையில் பாவாது

காற்றாய்ப் பறந்து செல்லும்

இறக்கை முளைக்காத

இயந்திரப் பறவைகள்



கட்டணம் காட்டி என்னும்

கெட்ட வார்த்தை ஒன்றை

பட்டணத்து அகராதியில்

வெட்டிவிட்ட வாகனங்கள்.



ஆடி மாதம் ஆனதுமே

அருகில் உள்ள அம்மனையே

தாயாகத் தத்தெடுத்து

திருவிழாக் கொண்டாடிப்

பார்க்கும் சாரதிகளின்

முச்சக்கர ரதங்கள்!



சட்டங்கள் இருந்தாலும்

சிவப்பு விளக்கு எரிந்தாலும்

சட்டையே செய்யாத

சுதந்திரப் பறவைகள்.



குழந்தைகளை


தவறாமல் தினம் வந்து

பள்ளிக் கழைத்துச் சென்று

மாலையில் திரும்பக் கொணரும்

அன்பான ஆயாக்கள்!



என்னதான் திட்டினாலும்

எரிச்சல்கள் பட்டாலும்

இவையின்றி நகர் வாழ்க்கை

இம்மியும் நகராதே !

எழுதியவர் : ரமேஷ்- கனித்தோட்டம் (28-Sep-15, 8:43 pm)
Tanglish : auto vakanangal
பார்வை : 53

மேலே