காற்றின் சதிராட்டம் - சந்தோஷ்

கடற்கரையில் உலாவிடும்போது
நானெனது பாதங்களை
மணற்துகள்களில் கழற்றிவிட்டு...
தொலைத்தூரக் கப்பலொன்றில்
பயணித்துக்கொண்டிருப்பேன்.

அவ்வாறாக ஒருமுறை
பயணித்தப்போதுதான்
எனக்காக வைக்கப்பட்ட
பெயரை
எனக்காக நான்
வாங்கிவைத்த
புகழ்ச்சியை
என்னைமீறி
வரம்புத்தாண்டிய
இகழ்ச்சியை
சொந்த துயரங்களை
இந்திரிய தோஷங்களை
யாவற்றையும் ஒவ்வொன்றாக
கழற்றி வீசியவாறே
ஏதுமற்ற நிர்வாணவாழ்வை
ஆலாபனை செய்தவனாய்
கடலின் விளிம்புவரை...
கற்பனையின் நுனிவரை
சென்றுத் திரும்பிவிடுவேன்.

மீண்டும்
கண்டுக்களித்த
எனது நிர்வாண வாழ்க்கைக்கு
நிஜஆடைகள்
எனது இயல்புகள்
அணிந்துவிடுகின்றன.
துயரங்களாகவும்
சந்தோஷங்களாகவும்..!

வாழ்க்கை என்பது
ஒன்றுமில்லை அன்பர்களே...!
ஒன்பது வாசல்கள் கொண்ட
நம் உடலுக்குள்
நுழைந்தக் காற்று
அரங்கேற்றும்
சதிராட்டம்..!


**

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (29-Sep-15, 10:30 am)
பார்வை : 122

மேலே