எழுத எழுத எல்லாம் மறைகிறது எழுத்தும் நீயாய் ஏனோ எழுகிறது

தலை சுற்றுகிறது
வாய் வழ வழக்கிறது
கரி இனிக்கிறது
சாம்பலும் பிடிக்கிறது

வயிற்றில் தேனோ????

நாளுக்கு நாள்
நாற்பது அறிகுறிகள்
நண்பி சொன்னது
நடக்கிறதே!!!!!!!.....

தேனே தான்
வெள்ளையுடை தேவதை
வெகு அழகாய்
ஆராய்ந்து அறிவித்தது....

திரையில் மங்கலாய்
தினம் வளர்ச்சி காண
பைத்தியம் எனக்குள்
பல வித கனவுகள்....

பிஞ்சுக் கால்கள்
பந்தாய் எண்ணி
தொப்பை வயிற்றை
தொட்டு உதைக்கின்றது...

முன்னூறே நாட்கள்
மூவாயிரம் நாட்கள்
முழுதாகச் சுமந்திட
முடியாதென வருத்தம் தான்....

இருட்டறையில் உன்னை
இன்னலில் வைக்காமல்
இறைவன் இனிதாய்
இறக்கிவைத்து விட்டான்.....

என் செல்லமே
எத்தனை பிரகாசம்
எத்தனை பிரகாரம்
உன் முன் தோற்கிறது...

பல் இல்லாமல்
சிரித்தாலும் நீ
பளிங்கு மாளிகையாட
கரும்புத் தூரிகையடா....

காதலின் காட்சி
காவலனின் சாட்சி
கடவுளின் ஊடே
கமழும் கமலமடி ....

தவழ்ந்து எம்மை
மயங்க வைக்கும்
அழகு பொம்மை
அறிவுக் கிள்ளையாட....

எண்ண எண்ண
எண்ணம் விரிகிறது
கண்ணில் புது
வண்ணம் மலர்கிறது....

எழுத எழுத
எல்லாம் மறைகிறது
எழுத்தும் நீயாய்
ஏனோ எழுகிறது.......

எழுதியவர் : க.நஞ்சப்பன் (29-Sep-15, 10:30 pm)
பார்வை : 224

மேலே