தனியாய் ஓர் இரவில்

இருபது வருடங்களுக்கு முன்பு....

அது ஒரு நவம்பர் மாதம்...

பெங்களூருவிலிருந்து 58 மணி நேர ரயில் பயணத்தை அப்போது தான் முடித்திருந்தேன்....

பத்து நண்பர்களுடன் ரயில்வே ஸ்டேசனில் இறங்கி, வேலை பார்க்கும் இடத்தினை முதல்முதலாக அடைந்த பொழுது... கருங்கும்மென்று இருட்டியிருந்தது....

அங்கேயிருந்த நண்பர்களிடம்,

"மணி ஒரு ஏழு இருக்குமா?", என்று கேட்டேன்...

"என்னப்பா இப்படி சொல்லீட்ட... இப்பத்தான் சாயங்காலம் நாலரை மணி ஆச்சு", என்றார்கள்...

"என்ன????....",

என்பதுடன் எனது முதல் அதிர்ச்சி ஆரம்பமாகியது..

"நம்ம ஊர்ல எப்பவுமே ஆறு, ஆறரைக்கு அப்புறம் தானே இருட்ட ஆரம்பிக்கும்.. இங்க என்ன இப்படி..?", என்றால்...

"வடகிழக்கு மாநிலங்களில் இப்படித்தாம்பா... இந்த மாதங்களில் சீக்கிரமாக இருட்டிடும்",

என்ற பதில் கிடைத்தது...

அன்று இரவு உணவு உண்டு வந்த களைப்பிற்கு நன்றாக தூங்கிக்கொண்டிருந்த பொழுது... சுள்ளென்ற சூரிய ஒளி கண்ணைக் கிள்ளி எழுப்பி விட்டது...

விழித்துப் பார்த்தால்.. தூக்கம் கண்ணுக்குள் இன்னும் குடி கொண்டிருந்தது... அறை நண்பர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்...

சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தேன்... நேரம் காலை 4 மணி 15 நிமிடம்...

"...ஆ..."

என்றவாறு எனக்கு இரண்டாவது அதிர்ச்சியைக் கொடுத்தது.. அந்த அதிகாலைச்சூரியன்...

அந்த ஊரினை அடைந்து ஒரு வாரம் ஆகியிருந்தது...

கொஞ்சம் தூரமிருந்த அடர்ந்த காட்டிற்கு மத்தியில் இருந்த ஒரு கட்டிடத்தில் தான் எனது பணி...

அப்பொழுது தான் புதிதாய் சைக்கிள் (பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆர்) வாங்கியிருந்தேன்...

தங்கியிருக்கும் அறையிலிருந்து ஒரு இருபது, இருபத்தைந்து நிமிட சைக்கிள் பயணத்திற்குப் பின்பே, அந்தக் கட்டிடத்தினை அடைய முடியும்... கட்டிடத்தின் ஆரம்பத்தில் ஒரு வாயில் இருக்கும்.. அங்கு எப்போதுமே காவலுக்கு ஆள் இருக்கும்... அவர்கள் வாயிற்கதவினைத் திறந்தால் தான் உள்ளேயே போக முடியும்...

வாயில் உள்ளே சென்றாலும், ஒரு ஐந்து நிமிட தூரத்தில் தான் கட்டிடம் இருக்கும்...

பகலெல்லாம் நிறையப் பேர் இருப்பார்கள்.. அங்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய கருவியும் மிகுந்த சத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கும்...

அன்று என்னை இரவுப் பணிக்கு வரும்படி சொல்லியிருந்தார்கள்... இரவுப்பணி என்றால் நான் மட்டுமே தனியாகப் பார்க்கவேண்டும்...

இரவு ஏழு மணி அளவில் தங்கியிருந்த அறையிலிருந்து கிளம்பினேன். நாலு மணிக்கே இருட்டிவிடுவதால் ஏழு மணிக்கு நள்ளிரவு பனிரெண்டு மணி போல இருளடித்து இருந்தது...

ஒரு தூரம் வரைக்கும் தான் ஆள் நடமாட்டம் இருந்தது... அதற்குப் பின் சிறு சிறு மின்விளக்குகள் இருக்குமே தவிர ஆட்களைப் பார்க்க முடியாது. ஆனால் வழியெங்கும் நிறைய நரிகள், முயல்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் நீலமான்களைப் பார்க்கமுடியும்... பகல் நேரத்தில் மயில்களும், குரங்குகளும் கணக்கு வழக்கின்றி சுற்றிக் கொண்டிருக்கும்....

ஒரு வழியாக சைக்கிள் மிதித்து, இருட்டைக் கிழித்து... அதோ அங்கே சிறிது வெளிச்சமாக தெரிகிறது பாருங்கள்... நான் வேலை பார்க்கும் கட்டிடம்... அங்கு இருந்த வாயிலிற்கு வந்தடைந்தேன்.

"வாங்க.. வாங்க... இன்னைக்கு உங்கள நைட் டியூட்டிக்கு போட்டாங்களா?", என்ற படியே வரவேற்றார் அங்கிருந்த வாயிற் காவலர்..
பின் கதவினைத் திறந்து எனை உள்ளே போகவிட்டார்...

அடுத்த ஐந்து நிமிடப் பயணத்திற்குப் பின், எனது கட்டிடத்தை அடைந்தேன்... அங்கு மதியத்திலிருந்து ஒருவர் இருந்தார்.. நான் சென்றதும், என்னிடம் பணியை ஒப்படைத்துவிட்டு, அவரது பைக்கை எடுத்துக் கொண்டு அவர் சர்ரென்று சென்றுவிட்டார்...

கட்டிடத்திற்கு உள்ளே சென்றேன்.... கட்டிடத்தின் நுழை வாயிலில் ஒரு பெரிய கதவு இருந்தது... அதனுள் நுழைந்து அதனை நன்றாக சாத்திவிட்டு, ஒரு நீளப்பாதையில் நடந்தால்.... அதன் நடுப்பகுதியில் சிறு கதவு இருக்கும்... அது தான் அந்த அறையில் நுழைய ஒரே வழி... அதனுள் சென்று அதனையும் நன்றாகப் பூட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தேன்...பகலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரம் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.... வேறு எந்த ஓசையிம் இல்லை...

எவ்வளவு பெரிய அறை...!!!! அறை மட்டுமே நீளவாக்கில் நாற்பது அடியும், அகல வாக்கில் பதினைந்து அடியும் இருக்கும்.... உள்ளே நான் மட்டுமே இருந்தேன்... எனக்குத் துணை தனிமை மட்டும் தான்.... சிறிய டீவிப்பெட்டி ஒன்று எனைப் பார்த்து நானும் இருக்கேன் எனக் கூறிக் கொண்டிருந்தது.... அதனை ஆன் செய்து அதன் முன் உட்கார்ந்தேன்... டி.டி. மட்டும் புள்ளிப் புள்ளியாக வந்து கொண்டிருந்தது.... அதில் வங்காள மொழித் தொடர் ஏதோ வந்து கொண்டிருந்தது... அதனை ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.... சிறிது நேரத்தில் அதனையும் அணைத்து விட்டேன்... நேரம் ஆக ஆக தனிமை எனை ஆக்கிரமம் கொள்ள ஆரம்பிக்க 'சரி தூங்கலாம்' என முடிவெடுத்தேன்... தூங்கவும் எந்த கட்டிலும் கிடையாது..... இரண்டு பெஞ்ச் இருந்தது... அதனை எடுத்து ஒன்றாகப் போட்டு ஒரு கட்டில் உருவாக்கினேன்..... எந்த மின்விளக்கையும் அணைக்காமல், மிதமாக ஓடும் ஒரு மின்விசிறியை ஆன் செய்து விட்டு படுத்த படியே எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன்....

நான் படுத்திருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு கண்ணாடி ஜன்னல் இருந்தது... அதனை திறந்து மூடும் வசதி இருந்தது... அது இரவு வேளையாதலால் நன்றாக மூடப்பட்டிருந்தது... அதனை பார்த்தபடியே படுத்துக்கொண்டிருந்தேன்... எப்போது தூங்கினேன் என்று தெரியாது.... நன்றாகத் தூங்கிவிட்டேன்....

அது கனவா, நினைவா என்றே தெரியவில்லை.... ஒரு சத்தம் மிக அருகில் காதை கிழிக்கும் படி எனக்கு கேட்க ஆரம்பித்திருந்தது...

"சாப் ஜி" "சாப் ஜி" "சாப் ஜி" "சாப் ஜி"

ஒன்றும் புரியாதவாறு ஆழ்ந்த தூக்கம் கலைந்து மெல்ல கண்களைத் திறந்தால், எனது படுக்கைக்கு அருகே ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது....

"ஆஆஆஆஆஆஆஆஆஅ.................................." வென கத்தியவாறே.... அந்த பெஞ்சிலிருந்து எழு முயற்சித்து கீழே விழுந்து விட்டேன்...

அந்த உருவம் தான் என்னைத் தூக்கிவிட்டது.... எழுந்து நிற்பதற்குள் இதயத்துடிப்பு மிக அதிகமாகிப் பின் ஆசுவாசமாகி விட்டது.....

அந்த உருவம்.... நான் கட்டிட வாயிலில் நுழைந்த போது, என்னை வாங்க வாங்க என்று வரவேற்ற அந்த வாயிற் காவலாளி தான்....

"சாப் ஜி" இந்தாங்க சாய் சாப்புடுங்க.... எங்களுக்கெல்லாம் காலைல நாலுமணிக்கே கொண்டு வந்து தருவாங்க..." என்ற படியே சுடச்சுட தேநீர் நிரம்பிய டம்ளரை என்னிடம் கொடுத்தார்......

நான் எனது மூன்றாவது மிகப் பெரிய அதிர்ச்சியிலிருந்து மீளாமல்.. அவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டபடியே,

"அதெல்லாம் சரி.... நான் தான் வெளிக்கதவையும், உள்கதவையும் நல்லா பூட்டிட்டுத்தானே உள்ளே வந்தேன்.... நீங்க எப்படி உள்ளே வந்தீங்க...", என்ற புரியாதப் புதிரான அக்கேள்வியைக் கேட்க...

அவரோ... எனது மிரட்சியையும், அதிர்ச்சியைம் கண்டு கக்கே புக்கே வென சிரித்த படியே...

"நீங்க தான் ஊருக்கு புதுசு... நாங்கலாம் எவ்வளவு நாளா இருக்குறோம்.... எல்லாத்துக்கும் ஒரு வழி வச்சுருக்கோம்... வெளிக்கதவை லேசா ஆட்டுனோம்னா மேல இருக்கற தாழ்ப்பாள் திறந்துக்கும்... அப்பறம் கதவை திறக்கறது ஈஸி.... "

"அப்ப உள்கதவ...."

"உள்கதவ ஏன் திறக்கணும்.... அது தான் கண்ணாடி ஜன்னல் இருக்கே.... இத திறக்கவும் வழி வச்சிருக்கோம்....", என்றார்.....

அவர் அன்பாக, பயமுறுத்திக் கொடுத்த டீயை பருக ஆரம்பித்த போது, அதுவரை திறக்கப் படாத உள்கதவு, எனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதாய் எனக்கு தோன்றியது...................

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Sep-15, 6:50 am)
Tanglish : thaniyaay or iravil
பார்வை : 708

மேலே