மக்கள் மறந்த சிலுவை!
ஆலயத்தின் வாசலில்
அனாதையாய் கிடந்தது
கோரச்சிலுவை ஒன்று..!
இயேசு சொன்னார்...
ஒருவன்
என்னைப் பின்பற்ற விரும்பினால்
அவன்
தன்னைத் தான் வெறுத்து
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு
என்னைப் பின்பற்றக்கடவன்
இது யார்
சுமந்து வந்த சிலுவையோ...
இங்கே
தொலைத்திருக்கிறார்கள்..!
ஆராதனை அவசரத்தில்
போவோரும் வருவோரும்
திரும்பிக்கூட பார்க்கவில்லை
உரியவரிடம் சேர்க்க
வேண்டுமே
உள்ளுணர்வில்
உத்வேகம் உந்தித்தள்ள
ஓடிச்சென்று கையிலேந்தினேன்..!
காரில் வந்திறங்கிய
கல்வி சீமானிடம் கேட்டேன்
ஐயா இது தங்களுடையதா...
ச்சீ... ச்சீ
அதோ
ஆலய உச்சியில் இருக்கிறதே...
"அதுதான் நான் அன்பளித்தது"
பட்டுச் சேலையணிந்த
சீமாட்டியைக் கேட்டேன்
தாயே... இது தங்களுடையதா...
கழுத்தில் தொங்கிய
தங்க சிலுவையை
தடவிப் பார்த்துவிட்டு சொன்னார்
என்னுடையது
என்னிடமே இருக்கிறது..!
அம்பு வேகத்தில் பாய்ந்து
ஆயரிடம் கேட்டேன்
ஆயர் சொன்னார்...
சிலுவை சுமக்கும் பழக்கம்
"சபையில் யாருக்கும் இல்லை..."
முன்னணியத்தில் இருந்த
மூப்பரிடம் சென்று
கையிலிருந்த
சிலுவையைக் காட்டினேன்
யாரோ தொலைத்திருக்கிறார்கள்
காணிக்கைப் பெட்டியில்
போட்டுவிடுங்கள்
சொல்லிவிட்டு
காணிக்கை
எண்ணப்போய்விட்டார்
வெள்ளையணிந்து நின்ற
பெந்தெகொஸ்தே
போதகரைக் கேட்டேன்
ஐயா... இது உங்க சிலுவையா
என் சிலுவையை
இயேசு சுமந்துவிட்டார்
இனி நான் சுமக்கத் தேவை இல்லை
ஈமெயில் வேகத்தில்
கல்லறைத்தோட்டம் நுழைந்தேன்..
மேல்வானம் தொட்டு
கீழ்வானம் எதிரொலிக்க கூவினேன்
"இந்த சிலுவை யாருடையது
வந்தால் தருகிறேன்"
கிரானைட் சிலுவை
நெற்றியில் நட்டபடி
நீட்டி நிமிர்ந்து கிடந்தனர்...
யாரும் வாய் திறக்கவில்லை..!
இனியும் பொறுக்கமுடியாது
இரட்சகர் இயேசுவைக் கேட்டேன்
இது யார் தொலைத்த சிலுவை..?
இயேசு சொன்னார்...
மகனே அது மக்கள்
மறந்த என் இரட்சிப்பின் சிலுவை..!