அன்பே நீ வந்தபோது --16நீ என் கற்கண்டு கனவுகள்
வழிந்தோடும்
என் திராட்சைரச இரவில்
நீ கற்கண்டு கனவுகளாய்
மிதப்பாய்!
உன் பெயர்
என்னுள்ளே போய்விட்டது
நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் தித்திப்பாய்
இருக்கிறது!
இனிப்பு என்பதை
ஒரு மொழியால் சொல்வதைவிட
உன் முத்தத்தால் சொல்!
உன்னைக் கண்ணீரால்
அபிஷேகம் செய்வேன்
உன் இதழ்கள்
எடுத்துத் தருவது
தீர்த்தம்தானே!
நான்கூட
வேறொரு மனிதன் செய்த
காற்றுக் கருவிதான்
ஆனால் நீ என்னை
கைதொட்டு எடுத்தபோது
என்னில் ஒரு
இன்ப கீதம் எழுந்தது!
தாகங்கொண்ட நதிகளை
கடல் மட்டுமா குடித்தது
உன் கண்களும்தான்!
நீ கோபங்கொண்டு
முனகிய உன் முனகல்
மொத்த மொழிகளுக்கும்
முத்தம் கொடுத்தது!
ஒருவர் வார்த்தையை
ஒருவர் மறைத்தபடி
ஊமைக் கனவுகளை
இரைத்தபடி
நெருஞ்சி முள்ளின்மீது
நடப்போமா!
நீ சென்னையில்
சிந்து நடை போட்டபோது
உன்னைக் காண்பவனுக் கெல்லாம்
கண்வலி வந்தது
நீதான் மெட்ராஸ் ஐயோ!
நீ சாமி கும்பிட்டபோது
அந்தக் கற்பூரத்தில்
கை வைத்து எடுப்பது
தெரிந்திருந்தால்
அதில் வீழ்ந்து நான்
எரிந்திருப்பேன்!
என் இதயக் கிண்ணத்தை எடுத்து
உன் கைகளில் கொடுத்தேன்
இன்பத்தை நிரப்பித் தா என்று!
அதற்குள் நீ
அதையே குடித்துவிட்டாய்!
நம் சந்திப்பின் முடிவில்
எப்படி நாம் விடைபெறுவது
அதுதான் நமக்குள்
கேள்விக்குறி!