ஒரு நதி ஒர் ஓடம் - சந்தோஷ்
ஊருக்கு வெளியே
எல்லையின் விளம்பில்
கானகத்தின் அருகில்
ஓடியது ஒரு நதி
காதலியே.. அது
நமக்கான நதி.
நீயும் நானும்
முதற் பார்வையில்
அந்த குயில்கள் சத்தமிட்ட
அந்தி முகூர்த்த நேரத்தில்
விழி சம்மந்தம்
பேசிய தீராநதி.
நினைவிருக்கிறதா.. ?
அக்கரையிலிருந்து
உன் பார்வையில்
நீ எறிந்த ஓராயிரம்
காதல் கதிர்வீச்சை
இக்கரையில்
நானெனது இதயத்தில்
மொழியாக்கி உயிராக்கி
கவிதையாய் மொழிப்பெயர்த்து
எந்தன் மன்மத விழியிலேற்றி
அதைக் காற்றிலெழுதி
உன் திசையில் பிரசுரம் செய்தேனே
நினைவிருக்கிறதா.. ?
உனக்கும் எனக்குமாய்
காதல் பரிவர்த்தனைக்காக
சுழன்று சுழன்று
நதி தாண்டி தாண்டி
நம் விழிப்புலன் செய்திகளோடு
விளையாடிய
தென்றல் காற்றுக்கு
பின்னொரு நாளில்
அந்நதியின்
அநாதை படகொன்றில்
பயணித்தப்போது
கூடலின்பம் கொள்ளும்
இரு சாரப் பாம்பினைப்போல
நம் கைகளை
பிணைத்து இறுக்கியவாறு
நன்றியுரைத்திட்டோம்
நினைவிருக்கிறதா..?
அந்த நதியின்...
அந்த ஓடத்தில்
உன் கருங்கூந்தல்
என் கழுத்துக்கு
கொடுத்திட்ட குறுகுறு
சில்மிஷ முத்தத்தினால்
சிலிர்த்திட்ட
என் கை ரோமங்கள்.
அதற்கு நீ
வெட்கப் புன்னகையிட்ட
அந்திம நாழிகைகள்
இவையாவும்..
இன்னும் உனக்கு
நினைவிருக்கிறதா...! ?
உனக்குத் தெரியுமா
ரோசி....!?
நீ அந்நதியோரம்
என்னிடம் வாங்கித்தின்ற
மாரியாத்தா பொங்கச்சோறும்
நானுன்னிடம் வாங்கித்தின்ற
கிறிஸ்துமஸ் கேக்கும்
அன்றுப்போல
இன்று ருசியாக இல்லையாம்.
ஹம்ம்ம்ம்
எதுதான்..
அன்றுப்போல்
இன்றுள்ளது... சொல்..?
நீயும் தானே.....?
நம் காதலும் தானே... ??
அன்றுப் போலன்றி
இன்று ருசிமறந்துப் போனது.
ரோசி.. இன்னொன்று
தெரியுமா ?
இன்று நீர் இன்றி
நிர்வாணமாய் கிடக்கிறதாம்.
நாம் காதலித்த நதி.
ம்ம்ம்
இன்று நீயின்றியும்
நொடிந்து ஒடிந்துப்போன
அனாதை ஓடத்துடன் நானும்தான்....
காதல் நிர்வாணமாய்...!
இது யார் செய்த சதி... ?
**
இரா.சந்தோஷ் குமார்