ஆயிசு 100

இவ்வுலகில் எத்தனையோ பொருட்கள் மனிதர்களின் கைவண்ணத்தில் உருவானது. அதேபோல் என்னையும் படைத்தவர் ஒரு மாமனிதர்தான். எதற்காக என்னை உருவாக்கினர் என்று எனக்கு இன்றளவு வரை கேள்விக்குறிதான்! அதற்கான பதில் தெரிந்ததும் இல்லை. என்னை இந்தோனிசியாவில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் உருவாக்கினார்கள். எனக்கென்ற ஒரு நிறம்; ஒரே பிரசவத்தில் 12 பிள்ளைகள் பெற்றெடுப்பது போல் என்னுடன் பிறந்தவர்கள் 11 பேர். என்னைப் போலவே அவர்களும் வெள்ளை நிறம். எங்களுக்கென்ற ஓர் அரசியல் கட்சி. அந்தக் கட்சியில் தரத்திற்கேற்றவாறு எங்களின் விலை. எப்படி பால் மாவினுள் காற்று புகாமல் இருப்பதற்கு ஒரு கலனில் அடைக்கிறார்களோ, அதேபோல் எங்களையும் மூச்சுவிட முடியாமல் ஒரு பெட்டியில் அடைத்து வைத்தனர். ஒரு பொருளை விற்பதற்கு அமோகமான விளம்பரம் தயார் செய்வார்கள்; ஆனால் எங்களை விற்பதற்கு அந்த அளவிற்கு விளம்பரம் கூட செய்யமாட்டார்கள். எங்களை அடைத்து வைத்துள்ள வர்ண பெட்டியைக் கூட கொடூரமாகவும் பயங்கரமாகவும் வடிவமைத்திருப்பார்கள்.

அன்று அறுவடைக் காலம் போல, எங்களை ஒரு கனவுந்தில் இந்தோனேசியா விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அன்றுதான் முதல் முறையாக உற்றார் உறவினர்களுடன் பிரிந்த முதல் கனம். இதற்குப் பிறகு சந்திப்போமா என்ற அச்சம் எனக்குள் நிறைந்திருந்தது. எங்களுக்கு விளம்பரம் குறைவாக இருந்தாலும், இப்போது நாங்கள் பயனிப்பதோ வானத்தின் மேலே ‘விமானத்தில்’. சுமார் இரண்டு மணி நேரம் உரகத்திற்குப் பிறகு ஏதோ ஒரு நாட்டில் தரையிரங்கினோம். புதிய மொழி, புதிய ஆட்கள் என்றாக இருந்தது எங்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது. மறுபடியும் எங்களை ஒரு மூடுந்தில் ஏற்றினர். பயணம் வெகு தூரமாக இருப்பதால் எனக்கு சற்று களைப்பாகவே இருந்தது. என்னுடைய பயணம் பிறருக்கு நன்மையாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் எனக்குள் வானளவு உயர்ந்திருந்தது, நிலைத்திருந்தது. இறங்கும் இடம் வந்தடைய இரவு காலத்தை எட்டியது. சில பணியாளர்கள் எங்களைப் கைக்குழந்தைப் போன்று தூக்கி கொண்டு கடை வாசலில் இருக்கும் கண்ணாடி பேழைக்குள் வைத்தனர். மற்ற பொருட்கள் கூட ஒதுக்கு புறமாக இருந்தது; ஆனால் எங்களுக்கு தரப்பட்ட சலுகையோ பெரிது. நான் பயனீட்டாளர்களுக்கு பயன்மிக்க பொருளாகத்தான் இருப்பேன், அதனால்தான் இவ்வளவு சலுகை என்று மனத்தில் எண்ணி பூரிப்படைந்தேன்.

அன்றைய பொழுதும் முடிந்த விடியலை தொட்டுவிட்டது. கடையும் திறக்கப்பட்டது. புதிய பயணம் எனக்குள் எப்போது துடங்கும் என்ற அவாவும் எனக்குள் கடல் நீர் போன்று சூழ்ந்திருந்தது. நான் அமர்ந்த இடத்தை சற்று சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னைப் போன்ற நண்பர்கள் பலர் பல நாடுகளிலிருந்து வெவ்வேறு பெயர்களில் வந்திருப்பதைக் உணர்ந்தேன். போட்டி பலமாக இருக்கும் என்ற அச்சம் எனக்குள் புயல் காற்றைப் போல பலமாக வீச ஆரமித்தது. வாடிக்கையாளர்கள் கடைக்கு வர ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிடித்த பெயர்களில் உள்ள என் சக நண்பர்களை வாங்கினார்கள். என்னைப் பார்த்ததும் பிடிப்பவர் எப்போது என்னை கைப்பிடிப்பார் என்ற ஆவல் எனக்கு அதிகமாகவே இருந்தது. இரண்டு நாட்கள் கடந்தன.

எனக்கு தீடிரென பேரதிர்ச்சி; எப்பொழுதும் ஆண்கள்தான் என்னை வைக்கப்பட்டிருக்கும் பேழைக்கு முன் வந்து நின்று அவர்களுக்கு வேண்டியதைக் கடை முதலாளியிடம் கேட்பார்கள். ஆனால் ஒரு பெண் என்னையு என் நண்பர்களையும் வைத்த கண் நகர்தாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடையோ எனக்கு புதியதாக இருந்தது. அவள் உடம்பில் பின் புறத்தில் ஒரு சிறிய மூட்டை. பார்ப்பதற்கு 16 – 17 வயது நிரம்பிய பெண் போல் காட்சியளித்தாள். ஒரு பெண் எங்கே என்னை வாங்கப் போகிறாள் என்று அலட்சியமாக மற்றொரு வாடிக்கையாளரை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். யாரோ என் பெயரைக் கூப்பிட்டது போல் விளங்கியது. மறுபடியும் எனக்கு ஒரு பேரதிர்ச்சி; யார் என்னை வாங்கமாட்டார் என்ற அலட்சியத்தில் இருந்தேனோ, அந்த பெண்தான் என்னை கைவசம் பெற்றாள். முதல் முறையாக ஒரு பெண்ணின் கை என் மேனியில் பட்டதும் சிலிர்ந்து போனேன். என்னை அவள் முதுகில் சமந்து கொண்டிருந்த மூட்டையில் தூக்கிப் போட்டாள்.

என் புதிய பயணம் தொடங்கியது. வெகுநேரமாக இருட்டு அறையில்தான் இருந்தேன். அந்த மூட்டையில் என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் புத்தகம் போல் இருந்தனர். இந்த பெண் அநேகமாக பள்ளிப் பருவ மாணவியாகத்தான் இருக்க வேண்டும். வெகுதூரமாக நடந்து வந்து ஒரு வீட்டிற்குள் நுழைந்தது போல தெரிந்தது. அங்கே மற்றொரு பெண்ணின் குரல் கேட்டது. “குமுதா வந்தவுடன் குளித்துவிட்டு வந்து சாப்பிடுமா” என்றவாறு அழைத்தார் பாசமிகு அம்மா. “எனக்கு பசிக்கலமா, நான் தூங்க போறேன், ரொம்ப களைப்பா இருக்கு” என்றுக் கூறிவிட்டு என்னை சுமந்துக் கொண்டு மேல் மாடியில் உள்ள அவள் அறைக்குக் கொண்டுச் சென்றாள்.

என்னை மறந்துவிட்டாள் போலும்; வெகு நேரமாகியும் அவளுக்கு என் நினைவு வரவில்லை. இவ்வாறு என் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்த கனமே அந்த மூட்டையைத் திறந்து எடுத்தாள். அவளுக்கு ‘ஆயிசு 100’. ஆனால் அவள் முகத்தில் ஒரு பதற்றம். யாருக்கும் தெரியாமல் சாப்பிட போவதனால் வந்த பதற்றம் போல் தெரிந்தது. பெட்டியைத் திறந்தாள்; நான் மூன்றாவதாக நின்றுக் கொண்டிருந்தேன். எனக்கு முன் என் உடன் பிறந்தவர்கள் இருவர் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் முதலில் நின்றவரைக் கையில் எடுத்தாள்; வாயில் வைத்தாள். கடித்து மென்று சாப்பிடாமல் உதட்டில் பிடித்துக் கொண்டிருந்தாள். தன் படுக்கை அறையிலிருந்து ஒரு சிறியதாக ஒரு பெட்டியை எடுத்தாள்.
அந்தப் பெட்டியை அவளின் உதட்டில் இருக்கும் என் அண்ணணின் பக்கத்தில் எடுத்துச் சென்றாள். எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. எங்களை கடித்து மென்று சாப்பிட்டு ருசிக்காமல் ஏதேதோ செய்கிறாள் என்ற கேள்வி எனக்குள் எழும்பியது. ஆனால் அவள் செய்த காரியம் எனக்குள் ஒரு புயலையே உண்டாக்கியது. அவள் என்னுடன் பிறந்த என் அண்ணணை கையில் எடுத்த பெட்டியைத் துணைக்கொண்டு தீ வைத்தாள். நான் கத்தினேன், கதறினேன். அவள் என் அண்ணணை தீயில் இட்டு வாயில் இழுத்தாள். உடன் பிறந்த அண்ணணைத் தீயில் இட்டுக் கொல்ல முயன்ற அந்தப் பெண்ணை என்னால் எதுவும் செய்ய முடியாமல் தவித்தேன். அப்போதுதான் தெரிந்தது; நான் சாப்பிடுவதற்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள் அல்ல; மனிதர்களே மனிதர்களைக் தற்கொலைச் செய்துக் கொள்ள தயாரித்த ‘சிகரெட் துண்டுகள்’ என்று.........

எழுதியவர் : மூ.கணேஷ் (1-Oct-15, 4:38 pm)
சேர்த்தது : கணேஷ் மூக்கையா
பார்வை : 159

மேலே