‘பெர் ஆத்தி ஆத்தி டி ஜாலான் ராயா’ Berhati-hati di jalan raya

“பகல் நேரத்தில் இவ்வளவு தூக்கமா, அளவுக்கு அதிகமாகத் தூக்கமாகவும் மயக்கமாகவும் இருக்கிறதே” என்று அரசு மயக்கத்தில் உலறினான். அரசு ஆறாம் ஆண்டில் படிக்கும் மாணவன். அவனுக்கு மலாய் மொழி பாடம் என்றால் அதிக விருப்பம். அதைவிட அந்தப் பாடத்தைப் பயிற்றுக் கொடுக்கும் பச்சையப்பன் சார் மீது அதிக அன்பு. அவர் எதைக் கூறினாலும் தெய்வ வாக்காகவே கருதுவான். அன்றைய நாள், ஒய்வு நேரம் முடிந்தப் பிறகு மலாய் மொழி பாடம். விரைவாகச் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று ‘நாசி லெமாக்’ ஒன்றினை வாங்கிச் சாப்பிட்டு, வகுப்பு அறையில் வந்து ஆவலுடன் அமர்ந்தான். மணி ஒலிப்பதற்கு முன் 3 நிமிடம் முன்பே வந்து வகுப்பு முன் நிற்கும் ஒரே ஆசிரியர் அவர்தான். அதனால் இவனும் மணி ஒலிப்பதற்கு முன் வந்து காத்திருப்பான்.
ஆசிரியர் வந்தார்; எப்பொதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் அவரின் முகம், மகிழ்ச்சிக் குன்றி இருப்பதைக் கண்ணம் காட்டிக் கொடுத்தது. என்னமோ? ஏதோ? அவருக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும் என்று நினைத்தான். பாடத்தைத் தொடங்கினார், அன்றைய தலைப்பு ‘பெர் ஆத்தி ஆத்தி டி ஜாலான் ராயா’ என்ற தலைப்பில் கற்றுக் கொடுத்தார். சாலையைக் கடக்கும் போது வலமும் இடமும் ஒரு முறைக்கு இரு முறை பார்த்துதான் சாலையைக் கடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தினமும் சாலையைக், கடப்பதற்குப் பயன்படுத்தினாலும் இம்மாதிரியான அடிப்படை விசயங்களில் தவறு செய்வதனால்தான் சாலை விபத்து ஏற்படுகின்றது என்று பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். அரசும் சாலைக் கடக்கும் போது விளையாட்டு தனமாகவே இருப்பான்; சாலையையும் கடப்பான்.
அன்று அவன் ஆசிரியர் கூறிய தகவல்கள் அனைத்தும் தெய்வ வாக்காகவே மனத்தில் பசுமரத்தாணிப்போல் பதித்தான். இதற்குப் பிறகு, சாலையைக் கடக்கும் போது மிகவும் கவனத்துடன்தான் கடப்பேன் என்று மனத்தில் உறுதிக் கொண்டான். வகுப்பினை ஒரு சாலையாகக் மையப்படுத்தி சாலையைக் கடக்கும் முறையினையும் நடித்துக் காட்டியும் மாணவர்களை நடிக்க வைத்தும் சாலையை கடக்கும் முறையினை கற்றுக் கொடுத்தார் பச்சையப்பன். மேலும் சாலையை கடப்பதற்கான சமிஞ்சை விளக்கு இருந்தால் அதனைப் பயன்படுத்தும் முறையினையும் விளக்கினார். அன்றையப் பாடம் இறுதியில் அரசுவின் தூக்கம் களைந்தாற் போல் ‘பெர் ஆத்தி ஆத்தி டி ஜாலான் ராயா’ என்ற பாடலைப் பாடச் செய்தார். தூக்கம் களைந்தாலும் மயக்கம் குறையவில்லையே என்று அரசு மனத்தில் நினைத்தான்.
பள்ளி முடிந்தது; அரசு வீடு திரும்பினான். எப்பொழுதும் கவனக் குறைவாக சாலையைக் கடப்பவன் அன்று முறையாக சாலையைக் கடந்தான். சாலையோரத்தில் நடப்பதற்காக ஒதுக்கப்பட்ட நடை பாதையாளர்களுக்கானப் பாதையில் நடந்துச் சென்றான். அவன் வீட்டை அடைவதற்கு முன் இருக்கும் சாலையைக் கடப்பதற்குச் சமிஞ்சை விளக்கினை அழுத்தினான். அதில் சற்று நேரத்தில் நடப்பதற்கானப் பச்சை நிறம் காட்டியது. நடக்க ஆரம்பித்தான்.
‘நாசி லெமாக்’ சாப்பிட்டது தூக்கமாக இருப்பதற்குக் காரணம், அதில் அதிகமாக தேங்காய் பால் பயன்படுத்தியிருப்பதால் தூக்கம் வரும் என்று அம்மா கூறுவாள். ஆனால், இன்று தூக்கத்துடன் கால் கைகள் உடம்பே வழிக்கிறதே! அரசு! அரசு! அவன் அம்மா கண்ணத்தை தட்டுவதைப் உணர்ந்தான். ஐயோ! இனிமேல் ‘நாசி லெமாக்’ சாப்பிடக்கூடாது. பள்ளிக்கூடத்திலே தூங்கிட்டேனோ. அம்மா பள்ளிக்கூடம் வரை என்னைத் தேடி வந்துடாங்களே!. ஆனால் புதிய இடமாக இருக்கிறதே குளிர்ச்சியாகவும் அதிகமான விளக்குகள் கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு எரிகின்றதே. ஒரு வேளை இரவாகிவிட்டதோ. தன்னுடைய பழைய நினைவுக்கு திரும்பினான் அரசு.
மெதுவாக கண்களை திறந்தேன். அங்கே அம்மா கண்ணிருடன் நின்று கொண்டிருந்தார். என் கால்களில் வெள்ளை நிறத்தில் பெரிய கட்டுகள் போடப்பட்டிருந்தன. சாலையைக் கடக்கும் போது விபத்துக்குள்ளானதை அவன் அம்மா அவனிடம் கூறினார். அம்மா இன்றுதான் பச்சையப்பன் சார் சாலையை எப்படிக் கடப்பது என்று கற்றுக் கொடுத்தார். நான் முறையாகத்தான் சாலையை கடந்தேன் என்று கூறினான். அவன் அம்மா எதுவும் கூறாமல் அவனையே பார்தார். உன்னை இங்கு அழைத்து வந்தது அவர்தான் என்று அவன் அம்மா கூறினாள். அவனுக்கு என்ன நடந்தது என்ற குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் என்னை மன்னித்துவிடு அரசு என்று அவனுக்குப் பிடித்தமானப் பச்சையப்பன் சார் குரல் கேட்டது. அவனை மோதியது வேறு யாரும் இல்லை பச்சையப்பன் சார் தான்...

எழுதியவர் : மூ.கணேஷ் (1-Oct-15, 4:41 pm)
பார்வை : 119

மேலே