பிரியமான தோழி ரேணுகா அவர்களுக்கு பிரிவு உபசார மடல்

பிரியமான தோழி ரேணுகா அவர்களுக்கு பிரிவு உபசார மடல்...

தேன் கூட்டு வாழ்க்கையிலே
சேகரித்த தேன் துளியாய்
ஆண் ஒன்று பெண்ணொன்று
இனிமை கூட்டிய உந்தன் வாழ்வில்
இன்னல்கள் தொலைந்தே போக...!!

வாழ்ந்த வாழ்க்கையெல்லாம்
வரலாறன்றி வேறே என்ன??

துடுப்பின்றி** படகு செலுத்தி
கரைசேர்ந்த இலாவகத்தில்
நின் திறமையோடு நெஞ்சுறுதி
தெள்ளத் தெளிவாய் விளங்கும்...!!

தேனீயும் சிற்றெறும்பும்
தோற்காதோ உம் சுறுசுறுப்பில்
தலைநிமிரா உந்தன் பணியில்
தலை நிமிர்ந்த உந்தன் வாழ்வு...!!

விடைபெறும் இறுதிவரையில்
விடுப்பேதும் எடுக்கவில்லையே
கடைசிமணித் துளியில் கூட
கடமையே கண்ணானது உமக்கு..!!

கவிதையினை இரசிக்கும் உமது
வாழ்வும் ஒரு கவிதைதானே
உம் விழியினில் நான் படித்ததிலே
சுகத்தைவிட சோகந்தானே மிகுதி..!!

இளகிய மனதினிலே
கசிந்துருகும் அன்பின் ஈரம்
அதில் நனைந்திருந்தேன்
நான் பல காலம்..!!

மழை மறைவு ஆகும் நாளில்
மனதினிலே ஏதோ பாரம்
என் விழிகள் இரண்டின் ஓரம்
கசிகிறதே வலியில் ஈரம்..!!

விடைபெறும் இந்நாளதனில்
நீர் வணங்கிதொழும் தெய்வமெல்லாம்
வந்திருந்து வாழ்த்துரைக்க
உம் ஆயுள் நீண்டிருக்கும்
நலமதுவும் கைகோர்த்தே சிரிக்கும்..!!

இறைவனது வாழ்த்தின் ஊடே
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும்...

அன்புடன்,
சொ.சாந்தி

(குறிப்பு: 30-09-2015 அன்று எனது அலுவலக தோழி பணி மூப்பில் விடை பெற்றபோது பிரிவு உபசார விழாவில் நான் எழுதி
வாசித்த கவிதை. நான் எழுதும்போது அழுதேன். இதை நான் வாசிக்கும்போது என் தோழி அழுதார்கள். எந்த கவிதை எழுதினாலும்
எடுத்துக் கொண்டு ஓடுவேன் அவர்களிடம் காண்பிக்க. அவர்களின் கருத்தில் மகிழ்வேன். நான் எழுத நிறைய ஊக்கம் அளித்தவர்களின்
பிரிவு எனக்கு நிறையவே மன வருத்தத்தை அளித்திருக்கிறது)

**கணவர்

எழுதியவர் : சொ. சாந்தி (2-Oct-15, 10:57 pm)
பார்வை : 1469

மேலே