பிட்சாவும் பர்கரும்

இன்று, அறிவியலின் அசுர வளர்ச்சியினால் மனிதனின் மனமும், வாழ்வியலும் பாழாகி விட்டது. துரித வாழ்வின் துயரத்தில், பாரம்பரியம் இழந்து, பண்பாட்டின் வேர்களை களைந்து, நாம் உயிர்தரும் உணவுகளுக்கு பதிலாக ஊனம் தரும் உணவுகளை உண்டு வாழ்ந்து வருகிறோம். அப்படி நாம் இழந்தவையும், தொலைத்தவையும் தான், இன்று நம்மைச் சூழ்ந்த பல நோய்களுக்கு காரணம்.

அவசர யுகம் என்றாலும், உணவு விஷயத்தில், சில ஒழுக்கங்களை கடைபிடித்தாக வேண்டும். உணவுக்காக சமையலறையில் செலவிடும் நேரத்தை, நல்வாழ்விற்காக செலவிடும் நேரம் என நினைக்க வேண்டும். அவசர வாழ்விற்கு விலக்கு, 'உணவு' அல்ல. நம் உணவுப்பழக்கத்தில் பன்னாட்டு வணிகம் புகுந்தது, மட்டுமன்றி, சவுகரியம் வேண்டும் என்று கருதியதால், நம் உணவை பன்னாட்டு வணிகம் நிர்ணயிக்கும் அளவுக்கு வந்துவிட்டோம். "அமெரிக்கர்கள் உப்பை குறைவாகதான் உண்ண எண்ணுகிறார்கள் ஆனால் அதை அந்த நாட்டு சிப்ஸ் கம்பெனிகள் அல்லவா முடிவு செய்கிறது" என அமெரிக்காவில் என் நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். நமக்கு இன்னும் அந்த நிலைமை வரவில்லை. மேலும் நாம், உணவு விஷயத்தை பொதுமைப்படுத்த கூடாது. சைபீரிய உணவும், அமெரிக்க உணவும், ஆஸ்திரேலிய உணவும், நமது உணவும் ஒன்றாக வராது. நமது காற்று, நமது மண், நம் சூழல் வேறு. நாம் எந்த மரபை ஒட்டி வாழ்கிறோம் என்பது முக்கியம். சோறு, இட்லி, போன்றவைகள் நமது மரபணுவில் ஊறிப்போனது. அதனை சாப்பிடும் போது, மரபணுக்கள் உணர்ந்து கொள்ளும். நாம் ஒரு வேளை மட்டும் சாப்பிடும் சப்பாத்தி கூட, மூன்று வேளையும் நம்மால் சாப்பிட முடியாது. இந்நிலையில், மயோனைஸ் தடவிய பர்கரை சாப்பிட்டால், அதனை உடல் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.தொழில், பணம் என நாம் அக்கறை கொள்வது போல, மரபை மறக்காமல் உணவு, மற்றும் வாழ்வியல் மீது அக்கறை காட்ட வேண்டும். முடிந்தவரை பன்னாட்டு உணவுகளை தவிர்த்து, நம் அருகாமையில்கிடைக்கும் பழம், காய்கறிகளை சாப்பிட வேண்டும். பிரச்சனைகளுக்கு பிறகு, நுாடுல்ஸ் பாதுகாப்பானது என்று இப்போது கூறுகிறார்கள். பாதுகாப்பா என்பது கேள்வி அல்ல, அது அவசியமா என கேட்க தோன்றுகிறது . பாரம்பரிய மருத்துவத்தில், நம் நோய் தீர்க்கும் அத்தனை மூலி கைகளும்தான் நம் அன்றாட உணவு முறைகள். அவைகளில் சிலவற்றை மாடியில் கூட வளர்க்கலாம். முதலில் நமக்கு குறுந்தானியங்களை உணவில் சேர்க்கும் பழக்கம் வர வேண்டும். நமக்கு அதற்கான விழிப்புணர்வு தேவை.

பொதுவாக, நமது உடல் வேறு, மேற்கத்திய மனிதர்களின் உடல் கட்டமைப்பு வேறு, மேலும் அவர்களின் வாழ்கை முறையும் வேறு. உதாரணமாக, நம் உடல் மரபியல் அமைப்பு, கொழுப்பு சத்து அதிகமாகும்போது இரத்த குழல்களில் சேமிக்கிறது..மேற்கத்தியர்களுக்கோ அவர்களின் உடல் தசைகளில் சேமிக்கிறது. பீசாவும், பர்கரும் இருவரும் சேர்ந்து சாப்பிட்டால் 100 மடங்கு, மாரடைப்பு வரும் வாய்ப்பு அவர்களை விட நமக்கு அதிகம் .... மேற்கத்திய உணவு முறைக்கு மாறிய பிறகுதான் நம் நாட்டில் 100ல் ஒருவருக்கு வந்த கேன்சர் இப்போது 15ல் ஒருவருக்கு என்று அதிகரித்திருக்கிறது. பர்கர் தான் மார்பக புற்று நோயின் முக்கிய காரணி என்று பலருக்கு தெரிவதில்லை! பிட்சா மாரடைப்புக்கு ஒரு முக்கிய முக்கிய காரணி என்பது மற்றொரு செய்தி ..... !!

மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்....

எழுதியவர் : ஆ. க. முருகன் (3-Oct-15, 1:22 am)
சேர்த்தது : ஆ க முருகன்
பார்வை : 295

மேலே