முருங்கை முழுக்க சத்து

முருங்கை மரம் பற்றி நினைக்கும் போது,

"முருங்கை
கிளைகளுக்கு
இல்லை சத்து
ஆனால்
முருங்கை
இலைகளுக்கோ
இரும்புசத்து" என்ற எங்கோ படித்த முரண்பாட்டு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

இக்கவிதை சொல்வது போல் முருங்கை மரத்துக்கு வேண்டுமானால் சத்து இல்லாமல் இருக்கலாம் ஆனால். முருங்கை மரம் இலை, பூ, காய், பிசின் முழுவதும் சத்தாக மட்டுமன்றி, பிரத்யேக மருத்துவ குணம் உள்ளதாக காணப்படுகிறது.

முருங்கை இலைகளுக்கு இரும்புச்சத்து இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்தே இருப்பினும், தற்போது, தமிழ்நாடு தோட்டக்கலை இயக்குனரகத்தின் ஆய்வில் மேலும் பல உண்மைகள் வெளியே வந்துள்ளன.100 கிராம் முருங்கை மற்றும் செடி முருங்கை இலையில்,
புரதச்சத்து 9.4 மி.கி.,
கால்சியம் 185 மி.கி.,
மெக்னீஷியம் 147 மி.கி.,
பொட்டாசியம் 337 மி.கி.,
வைட்டமின் பி 1.2 மி.கி.,
வைட்டமின் ஏ 378 மி.கி., உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே; நாம், முருங்கை இலையை உண்பதால் அதில் உள்ள புரத சத்து தேய்வடைந்த செல்களை புதுப்பிக்கிறது. அதிலுள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்குகிறது. மெக்னீசியம் தசைகளில் ஏற்படும் பிடிப்புகளை சரிசெய்கிறது. பொட்டசியம் இரத்த அழுத்தத்தை சரியாக வைக்கிறது. வைட்டமின் B மூட்டு வலிகளை குணமாக்குகிறது. வைட்டமின் A கண் பார்வை குறைபாடுகளை சரிசெய்கிறது. அதுமட்டுமன்றி, முருங்கை பூவிலும், அதன் பிசினிலும், மனித விந்து செல்கள் அதிகரிக்கும் தன்மை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முருங்கை காய்கள் உடல் செயல்களை சரியாக வைக்கிறது. முருங்கை பட்டை வீக்கம் வற்ற, வதக்கி வீங்கிய பகுதியில் கட்ட குணமாகும். மேலும், முருங்கை இலை உணவில் சேர்ப்போர் ஆரோக்கியம் அதிகரித்து உள்ளது என உலக சுகாதார ஆய்வு மைய அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 மில்லியன் டன் செடி முருங்கை இலை உற்பத்தியாகிறது. இதில் வட மாநிலங்களின் பங்கு 20 சதவீதம். தென்மாநிலங்களில் ஆந்திரா, கர்நாடகம், தமிழகத்தில் 70 சதவீதமும் உற்பத்தியாகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. சத்துக்கள் நிறைந்துள்ளதால் உலகநாடுகளில் முருங்கையின் தேவையும் அதிகரித்துள்ளது. மேலை நாட்டினர் நம் முருங்கை இலையை சத்துள்ளது என உண்ணும்போது நமக்கு எளிதில் கிடைக்கும் அதை நாமும் உண்ணலாமே!

மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்....!

எழுதியவர் : ஆ. க. முருகன் (3-Oct-15, 9:52 pm)
சேர்த்தது : ஆ க முருகன்
பார்வை : 121

மேலே