புலி

நாயகனாக நடிகர் விஜய், நாயகிகளாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, அவர்களுடன் இளைய திலகம் பிரபு, வில்லனாக சுதீப் நடிக்க நிறைய வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடித்துள்ள ஸ்ரீதேவி மற்றும் தம்பி ராமையா, கருணாஸ், சத்யன், ரோபோ சங்கர் என ஒரு நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பிலும், நட்டி நடராஜ் ஒளிப்பதிவில் வெளியாகியுள்ளது சிம்பு தேவனின் புலி திரைப்படம்.

வேதாளக்கோட்டையின் ஆட்சிக்குட்பட்ட கிராமங்களில் வேதாளங்கள் செய்யும் அட்டகாசத்தையும் அதனை நாயகன் எதிர்த்து நிற்கும் கதையோட்டத்துடன் திரைப்படம் ஆரம்பமாகின்றது.

வேதாளங்களின் அட்டகாசத்தால் அவற்றுக்காகப் பயந்து வாழ்ந்து வரும் ஒரு சிறு கிராமத்தில் பிரபு வசித்து வருகின்றார். ஆற்றங்கரையில் அமர்ந்துகொண்டு இருக்கும் போது, ஆற்று வெள்ளத்தில்; ஒரு குழந்தை மிதந்து வருகின்றது. அதனை எடுத்து, தனது மகன்போல் வளர்த்து வருகிறார் பிரபு. அந்தக் குழந்தைதான் விஜய்.

இதேவேளை, விஜய் சற்று வளர்ந்து சிறுவனான போது, அதே கிராமத்தில் வசிக்கும் ஸ்ருதிஹாசன் மீது ஈர்ப்பு வருக்கின்றது. இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் படிப்பதற்காக பக்கத்துக் கிராமத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்.

வளர்ந்து பெரியவனாகும் விஜய், தனது நண்பர்களான தம்பி ராமையா, சத்யன் ஆகியோருடன் அந்தக் கிராமத்தில் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி வருகின்றார்.

வேதாளக் கோட்டையின் ராணியாக ஸ்ரீதேவி இருக்க, தளபதியாக சுதீப் உள்ளதுடன் அந்நாட்டு மக்களை எல்லாம் தனது அதிகாரத்தால் கொடுமைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் பிரபு, நாட்டு மக்களை அடிமைத்தனத்தில் விடுவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, வேதாளக்கோட்டையின் ஆட்சிக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊர்ப் பெரியவர்களை அழைத்துக் கொண்டு ராணியிடம் முறையிட செல்கிறார்.

அப்போது, ராணியின் உடையில் இருக்கும் சுதீப்பிடம் எல்லாவற்றையும் கூறிவிட ஆத்திரமடையும் சுதீப், பிரபுவின் கையை -பிரபு எதிர்பாராத நேரத்தில் வெட்டி விடுவதுடன் அவருடன் வந்த அனைவரையும் கொலை செய்து பிரபுவை மாத்திரம் உயிரோடு விட்டுவிடுகின்றார்.

இந்நிலையில், ஒருநாள் வேதாளங்கள்; வரி வசூல் செய்ய இவர்களது கிராமத்துக்கு வருகிறார்கள். அவர்களிடம் அனைவரும் அடிபணிந்து வரி கொடுக்கின்றனர். இந்த விடயம், சொந்த கிராமத்துக்கு வரும் ஸ்ருதிக்கு தெரிந்து விடுகின்றது. இதனால், அனைவர் மீதும் ஸ்ருதி வெறுப்பு கொள்கிறார்.

இந்நிலையில், பிரபு ஏற்பாடு செய்த போலி வேதாளங்களை விஜய் அடித்து விரட்டி விட, ஸ்ருதிக்கு விஜயின் மீது காதல் பிறக்கின்றது. அத்துடன் இருவரும் இரகசியமாக திருமணம் செய்துகொள்கின்றனர்.

இந்நிலையில், சுதீப்பின் படை வீரர்கள் ஊருக்குள் புகுந்து, கிராமத்து மக்களை அடித்து விட்டு, பிரபுவையும் கொன்று விடுவதுடன் ஸ்ருதிஹாசனையும் கடத்திச் சென்று விடுகின்றனர்.

இதனையடுத்து, ஸ்ருதியை மீட்கவும் மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கவும் விஜய், வேதாள கோட்டையை நோக்கிச் செல்கின்றார். இந்நிலையில், 8 நிமிடங்கள் வரை வேதாளமாக மாற்றக்கூடிய மருந்தை அந்தக் கிராமத்து வைத்தியர், விஜயிடம் கொடுகின்றார்.

வேதாளக் கோட்டையை நோக்கி செல்லும் வழியில் ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கும் விஜய், அந்த பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, வேதாளக் கோட்டையை அடைந்து ஸ்ருதியை மீட்டாரா? 8 நிமிட வேதாள மருந்தால் ஆபத்தில் சிக்கினாரா? ஹன்சிகாவை சந்தித்தாரா? யார் இந்த விஜய், என்பதுதான் மிகுதிக் கதை.

இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய், ராஜா காலத்து உடையில் மிகவும் இளமையாக காட்சியளிக்கிறார்.
வழக்கம்போல பாடல் காட்சிகளில் அதிரடியான நடனங்களை ஆடி இரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். சண்டைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் விஜய்.

திரைப்படம் முழுவதும் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கும் ஸ்ருதி, அழும் காட்சிகளில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளவரசியாக வரும் ஹன்சிகா, அசர வைக்கும் அழகுடன் அனைவரையும் கவர்கிறார். அளவான கவர்ச்சி இரசிக்க வைக்கிறது.

ஸ்ரீதேவிக்கு வயதானாலும் அவருடைய நடிப்பில் இளமை இன்னும் குறையவில்லை. சிம்மாசனத்திலிருந்து இறங்கி வரும் காட்சிகளில்; ராணியாகவே தெரிகின்றார். ஆனாலும், மேக்கப்பை கொஞ்சம் குறைத்திருக்கலாம். சில காட்சிகளில் பேயைப் போல காட்சியளிக்கின்றார்.

வில்லனாக மிரட்டும்படி நடித்துள்ளார் சுதீப். தளபதி வேடம் சிறப்பாக பொருந்தியுள்ளது. நிச்சயம் இந்தத் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுக்கும்.

பிரமாண்டமான கிரபிக்ஸ் காட்சிகள் அருமையாக இருக்கின்றன (சில இடங்களைத் தவிர). மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களைக் கொண்டு சிறப்பாக இந்தத் திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

சித்திரக்குள்ளர்களை உருவாக்கிய விதமும் அது தொடர்பான காட்சிகளும் அருமை. தம்பி ராமையா- சத்யன் இடையிலான நகைச்சுவைக் காட்சிகள் அருமை. அதிலும், தம்பி ராமையாவை விஜய் கலாய்ப்பது சிரிப்பால் திரையரங்கை அதிர வைக்கின்றது.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஆஹா ஹோஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் விஜய்யின் நடனத்தால் பாடல்கள் இரசிக்க வைக்கின்றன. புலி புலி, ஜிங்கிலியா ஜிங்கிலியா பாடல்கள் ஆட்டம் போட வைப்பதுடன் ஏண்டி ஏண்டி பாடல் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ் அழகாக அந்தக் கால அரண்மனைக் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்துள்ளார்.

சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் அருமையாக உள்ளது. கதையில் சற்றுக் கவனம் செலுத்தியிருக்கலாம். சில காட்சிகளில் அடுத்து என்ன என்பது தெரியவந்து விடுகின்றது. அதிகளவில் சிறுவர்கள் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கும் நிலையில், சிறுவர்களுக்கு நிச்சயமாக திரைப்படம் பெரிய கொண்டாட்டம் தான்.

விஜயின் ஒவ்வொரு வசனத்துக்கும் திரையரங்கில் விசில் பறக்கின்றது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம். விஜய் ரசிகர்களுக்கு இது மற்றுமொரு விருந்து என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் புலி, சிறுவருக்கு செம ஆட்டம்.

எழுதியவர் : ஜார்ஜ் தமிழா (5-Oct-15, 12:31 pm)
சேர்த்தது : ஜார்ஜ் தமிழா
Tanglish : pili
பார்வை : 432

சிறந்த கட்டுரைகள்

மேலே