எங்கடா போயிட்ட

மெஸ்ஸில் சாப்பிட்டவுடன் அக்கவுன்ட் புக்கை எடுக்கும்போதுதான் பார்த்தேன். ரூம் சாவி அங்கே இருந்தது. 'தட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா!' சாவியை எடுத்துக்கொண்டு ரூமை நோக்கி நடந்தேன்.

இவன் இப்படித்தான்... ஏதாவது கம்பெனி சிக்கினால் சிக்கனும் குவாட்டருமாகக் கொண்டாடிவிட்டு, அகால நேரத்தில் வருவான். ரூமைத் திறந்து உள்ளே போய் பாயை விரித்துப் படுத்தேன். 'சே! கெட்ட கனவு!' தூக்கம் சுத்தமாகப் போய்விட்டது. சிகரெட் எடுத்துப் பற்றவைக்கும்போது இரவு மணி மூன்று. 'தட்சிணா இன்னும் வரலையே!'' மொபலை எடுத்து அவன் நம்பரைத் தட்டினேன். வாடிக்கையாளர் வட்டார எல்லைக்குள் இல்லை என்று அர்த்த ராத்திரியில் பொறுப்பாகப் பதில் சொன்னாள் ஒருத்தி. மீண்டும் தூங்கிப் போனேன்.

ஞாயிற்றுக்கிழமைதானே... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்தபோதுதான் அந்த எண்ணம். 'தட்சிணா வாசலில் உட்கார்ந்து பேப்பர் படிப்பானோ!' எழுந்து கதவைத் திறந்தேன். பேப்பர் மட்டும் கிடந்தது. பேப்பரை எடுத்து உள்ளே வைத்துவிட்டு, திரும்பவும் படுக்கையில் சாய்ந்தேன்.

விழித்து எழுந்ததும் தொடர்ந்து செல்லில் முயற்சித்தபோது தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தான். மணி பத்து ஆகியும் தட்சிணா வரவில்லை. நம்பர் பிடித்து அவன் கம்பெனிக்கு போன் செய்தேன். 'அவர் நேத்து எட்டு மணிக்கே போயிட்டாரே!' என்று தகவல் கிடைத் தது. 'எங்கே போயிருப்பான்?'

மணி ஒன்று. இன்னும் தட்சிணா ரூமுக்கு வரவில்லை. 'ஆபீஸில் இருந்து திரும்பி வரும்போது அடிபட்டு விழுந்திருப்பானோ!'-நினைக்கவே பயமாக இருந்தது. யாரைக் கேட்பது? அவனது நண்பர்களின் நம்பர்கள் என்னிடம் நஹி.

மணி நான்கு. பொறுமையாக இருக்க முடியவில்லை. அவனது ஆபீஸில் போய் விசாரித்தேன். ஆபீஸில் வாட்ச்மேனுக்கு தட்சிணாவை சரியாகத் தெரியவில்லை. உருப்படியாக எந்தத் தகவலும் கிடைக்காமல் திரும்பினேன்.

வழியில் போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்தபோது 'ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்துடுவோமா!' என்ற யோசனைகூடப் பளிச்சிட்டது. தட்சிணாவுடனான இனிமையான நினைவுகள் ஆஃப் பிளாக்கில் மனசுக்குள் நிழலாடின. நாளைக்கு ஆபீஸூக்குப் போய் தெளிவாக விசாரித்துக்கொள்ளலாம் என முடிவுசெய்து ரூமை நோக்கி நடந்தேன்.

ரூமுக்கு வெளியே வராண்டா லைட் எரிவது தூரத்திலேயே தெரிந்தது. பூட்டிய கதவுக்கு வெளியே தட்சிணா உட்கார்ந்திருந்தான்.

''பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு மாப்ளே. மணி இப்போ ஏழு. 'எங்கே போயிருக்கே'ன்னுகூடத் தெரியாம நாலரை மணியிலேர்ந்து இங்கேயேஉட்கார்ந் திருக்கிறேன். எங்கடா போயிட்ட?''-தட்சிணா என்னைப் பார்த்துக் கேட்டபோது அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை!

எழுதியவர் : Vikatan EMagazine-சி.முருகேஷ்பாபு (8-Oct-15, 9:22 am)
பார்வை : 128

சிறந்த நகைச்சுவைகள்

மேலே