காகிதத்திலா கோட்டை கட்டுகிறாய் மகளே.....?

ஞாபகம் இருக்கிறதா....?
கைகளை நீட்டிக்கொண்டு
சுற்றி,சுழன்று
சட்டென உட்காருகையில்
உப்பிப்பெருக்கும்
உன் பாவடை
உன் கன்னங்களைப்போலவே....
மிதக்கும் என் மனது....
உன்னைப்பற்றிய
என் கனவுகளைப்போலவே...

மண்ணைக்கிளறி
ரோஜாச்செடியை
பதியனிட்டு
ஒவ்வொரு நாளும்
குட்டி வாளியினால்
என் மிரட்டலுக்கும்
செவிசாய்க்காமல்
மூழ்கிப்போகுமளவும் நீருற்றி.....
சின்னதாய்
ஒரு மொட்டு
எழும்புகையில்
உன் பொம்மை நண்பியோடு
கைதட்டி ஆரவாரிப்பாயே..
உற்சாகமாய்
கலந்துகொள்வேன்
நானும்....
வயசு உதிர்ந்துகிடக்கும்
சருகாக....

கருத்தரித்ததற்காய்
கர்வப்பட்டேன் ....

பெரியவளானாய்..
அமிர்தக்கடலில்
மறைந்திருந்த புதையல்களெல்லாம்
மீண்டெழுந்தன
அற்புதங்களாய்...
கண்ணேறு கழித்தேன்
கண் நீரால்... !!

வானம்பாடியே
வானம்முழுதும்
வலம்வரும் ஆசையில்
பறக்கத்தயாராகிறாய் நீ..
வெளியே
காத்திருக்கும்
வல்லூறுகள்
காதல்
கானம்பாடியே
கவர்ந்துபோகும்
கவனமாய் இரு....!!


கண நேரத்தில்
வருகிற
காதல்
உன்
கண் ஓரங்களில்
குளவியாய்
கூடு கட்டிக்கொண்டுவிடுமோவென்று
பயந்துகிடக்கிறேன் நான்..


ஆகார்சிக்கும்
நிலவில்
சிறு சந்தன தீற்றாய்
அழகாய் இருக்கிறது மகளே
பருக்கள் கூட....
எழும்புகிற
பருக்களை
எச்சிலைதொட்டு
தணிவிக்க முயல்கிறாய்....
ஏதாவது சொன்னால்
எரிச்சலாகிறாய் நீ
எச்சில் விழுங்கிக்கொள்கிறேன்
நான்

கர்வமானதொரு
சந்தோசத்தில்
மிதக்கிறாய் நீ..
உனது பருவ காலங்கள்
என்னைச்சுற்றி
நீ இட்டிருக்கிற
நெருப்பு கோலங்கள்....


நம்பிக்கை உன்மீது
நிச்சயமாகவே உண்டு...
உரசிப்போகும்வரை
நீ சிக்கிமுக்கி கல்தான்..

உன் பருவத்தின் மீதுதான்
நம்பிக்கை இல்லை..
பற்றிக்கொள்ளும்
பார்வைப்பொறியிலும்கூட ..



கல்லூரியில்
சிறப்பு வகுப்பென்று
தாமதத்திற்கு
காரணம் சொல்கையில்
தந்தையின்
மரபின்வேர்கள்
உன்னுள்ளும்
ஊடுறுவியிருப்பதை
உணர்கிறேன் நான்..
விதையொன்று போட
சுரையொன்றா முளைக்கும்....?

ஜன்னல் தாண்டி
விரிந்திருக்கும்
ஆகாயத்தை காட்டித்தான்
உணவு ஊட்டினேன் அன்று
மறக்கவில்லை நான்....
அடிக்கடி
ஜன்னல் தாண்டி
போகுமுன்
சந்தேகமான பார்வைகளால்
சுருங்கிப்போயிருக்கிறது
என் வானம்..
மறுக்கமுடியுமா உன்னால்... ??

எது உனக்கு பிடிக்கும்
என்பதிலிருந்து
எது உனக்கு பிடிக்காது
என்பதுவரை...
எனக்கு பிறகுதான்
உனக்கே தெரியும்....
என்ன தெரியும் அவனுக்கு....?


சிடு,சிடுவென்று
நீ
வார்த்தைகளில்
வசவுகையில்
அந்த
மூன்று நாட்களின்
ரணம் புரியும்
எனக்கு...
உனக்குபிடித்த
மெளனத்தின் பாக்ஷையில்
உனது அதிகாரத்தை
அங்கீகரிப்பேன் நான்...
மிதிபடுவதொன்றும்
புதிதில்லையே...
அன்று கால்களால்..
இன்று வார்த்தைகளால்
என் மகளல்லவா நீ....?
அறிந்திருக்கிறானா அவன்..?

கைகளை சுரண்டினால்
கணப்பொழுதில்
கன்னத்தில் அறைவாயே
யாராயிருந்தாலும்....
தெரியுமா அவனுக்கு....?

கண்ணை ஈர்க்கிற
அழகு
அவனிடத்தில் மாயம் செய்யும்....
உன்
கண்ணுக்குள் புதைந்திருக்கிற
நம் ரணங்களின்
காயம் தெரியுமா....?


யாரென்று கேட்கிறேன்
காதலன் என்கிறாய்..
என்ன தெரியும் என்கிறேன்..
வேறென்ன தெரிய வேண்டுமென்கிறாய்..
முன் ஒருநாள்
தெருவிலே
உன் அப்பாவின்
பழைய நண்பரோடு
பேசிக்கொண்டிருக்கையில்
முகம் சுளித்துப்போனாயே
ஞாபகம் வருகிறதா... ?
பார்ப்பதற்கே பிடிக்கவில்லை
பேச்சுமே நம்பகமாயில்லை.......
ஒரு நிமிட சந்திப்பிற்கு
கேட்காமலே
சான்றிதழ் அளிக்கிறாய்...
மெளனமாகவே தலையசைக்கிறேன்
இதோ
ஒரு
வாழ்க்கை
முழுவதுமான
இணைவிற்கு
சான்றிதழ் கேட்கிறேன்
ஏன் மறுதலிக்கிறாய்....??


உனக்கான முகவரியையே
நீ தேடிக்கொண்டிருக்கிறபொழுது
இன்னொருவருக்குமான
விலாசத்தை
எப்படீயடி
காண்பிக்க முடியும்...?


காதல் தவறில்லை...மகளே
காதலுக்கு நான் எதிரியுமில்லை...
காதல் வருகிற காலம்தான் தவறு....
உனக்கான கனவுகள்
என் கண்ணோரம் மீந்திருக்க
உணர்வுகளின் கனத்தில்
கண்ணீரில் தொலைந்துவிடாதே...

ஒற்றை இலக்கை
நோக்கி
போனால்தான் அம்பு...
மர நிழலில்
இளைப்பாறுபவனுக்கு
அறுவடை சாத்தியமில்லை....
கல்விக்கான நேரம் இது...
கலவியென்பதேன்
குளவியாய் நுழைந்தது...?


வாழ்க்கையை
உன் வசப்படுத்து
நிஜத்தில்...
காதல்
உன் வசப்படும்
நிழலாய்....
வருங்கால தாய்மைக்கு
வசந்தகால
தென்றலாய்...
என் வாழ்த்துக்கள்..
வாழ்த்துகிறேன் மகளே.....!!!!!

எழுதியவர் : muruganandan (1-Jun-11, 9:38 pm)
பார்வை : 345

மேலே