மனச்சிதைவு நோய்க்கும் மரபணுவிற்கும் உள்ள தொடர்பு

மனச்சிதைவு நோய்

Schizophreniaஎன்பது பிரமை, மருட்சி, சித்த கிளர்ச்சி எனப் பலவற்றை குறிக்கக்கூடிய ஒரு கொடிய மனச்சிதைவு நோய். இது நூற்றில் ஒரு அமெரிக்கருக்கு இருக்கக்கூடிய நோய். பெரும்பாலும் 16 வயது முதல் 30 வரையிலுள்ளவர்களுக்கு இருக்கக்கூடிய நோயாகும். இது தலைமுறை தலைமுறையாக வரக்கூடிய நோயாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கலாம் எனக் கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில்தான் இந்நோய் குறித்து ஒரு பெரிய ஆய்வு ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இதில் உடலின் 108 இடங்களில் உள்ள 128 ஜீன் வகைகளை ஆராய்ந்தனர். இந்த ஜீன்களில் அதிகப்படியானவை இந்நோயுடன் தொடர்புடையவையாக இருந்தன. இதன் மூலம் மரபணுவிற்கும் இந்நோயுக்கும் கண்டிப்பாகத் தொடர்புண்டு என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

இதன் பின்னர், இது குறித்த ஆய்வுகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்காக genome-wide association study (GWAS) என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. சுமார் 35 நாடுகளைச் சேர்ந்த, 300 விஞ்ஞானிகள் இந்த அமைப்பில் இருந்தனர். இவர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் இந்த நோய்க்கான பாதிப்பு இருந்த 37,000 மக்களை, நோய் பாதிப்பில்லாத 1,13,000 மக்களுடன் ஒப்பிட்டு வெவ்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதில் முக்கியமாக மரபணு அல்லது தலைமுறை நோய்கள் குறித்து அதிக கவனம் செலுத்தினர். உடலில் மரபணுக்கள் ஒவ்வொன்றும் ஜோடிகளாக அமைந்திருக்கும். இந்த ஜோடிகளில் ஏதேனும் பிறழ்வுகள் இருக்கிறதா என ஒவ்வொரு ஆய்விலும் சோதித்துக்கொண்டே இருந்தனர்.

ஆனால், இந்த இடத்தில் தான் பிரச்சனை என்று தெளிவாக அவர்களால் துல்லியமாகக் கூற முடியவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் இந்நோய் குறித்து ஆய்வு செய்ய போதுமான அளவு தொழில்நுட்பம் வளரவில்லை என்பது இதன் காரணமாகும். அத்துடன் இந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பலதரப்பட்ட மருந்து வகைகள் மூளைக்கு வாங்கிகளாக செயல்படும் பகுதிகளை மந்தமடையச் செய்ததும் மற்றொரு காரணமாகும். இப்படிப்பட்ட நேரங்களில் மூளை அல்லது அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளிவரும் ‘க்ளூட்டமேட்’ போன்ற வேதிப்பொருட்கள் மனச்சிதைவு நோயினை அதிகப்படுத்தும் வேலையினை செய்யும் தன்மையுடையது.

இத்துடன் மற்ற உடல்நலத்தினை பாதிக்கும் காரணிகளான புகைபிடிப்பது போன்றவை இந்நோயில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, நோய் எதிர்ப்புக்காரணிகளும் இதில் கருத்தில்கொள்ளப்பட்டன. ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகைபிடிப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால் அது நோயினை மேலும் வலுவாக்கியது இந்த ஆய்வில் தெரிந்தது.

பலதரப்பட்ட ஆய்வுகளின் முடிவில் GWAS கூறியதாவது : மனச்சிதைவு நோயின் சிக்கலான அமைப்பு மற்றும் மற்ற காரணிகளுடன் அவை தொடர்புகொண்டுள்ள விதம் காரணமாக இது பற்றிய ஆய்வுகளால் தெளிவான முடிவுகளைக் கொடுக்க முடியவில்லை. நாங்கள் இது போன்று நீரிழிவு மற்றும் பல நோய்களுக்கான தெளிவான காரணங்களைக் கண்டறிந்துள்ளோம், அதைப்போல் இந்த நோய்க்கும், மரபணுக்களுக்கும் உள்ள தொடர்புகளை எதிர்காலத்தில் இன்னும் தெளிவாகக் கண்டறிவோம்.

எத்தனைப் பெரிய தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் அதை முறியடிக்கும்படியான நோய்களும் உருவாகும் என்பது உண்மைதான் போலும்!.


Posted by Vivekaero on November 10, 2014 in கட்டுரை

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Oct-15, 10:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 49

மேலே