ஓர் இறகு சிறகு ஆனதே 1
ஓர் இறகு சிறகு ஆனதே..! (1)
இந்திய -
இளைஞர்களை...
கனவு காண-
வைத்த கௌரவம் ..!
இன்றைய -
பாரதத்தின்
பாமரர்களுக்கும்...
பரிச்சயமான
முன்னாள் -
குடியரசு மேதகு..!
இந்த
மண்ணில் பிறந்த
' ஒவ்வொரு -
குழந்தையும்...
ஒரு விஞ்ஞானி '
எனச் சொன்ன
மானுடம் பயின்ற
டாக்டர்..!
அவூல் பக்கீர் -
ஜெயினுலாபுதீன்...
அப்துல் கலாம்..!
எங்கள் -
தமிழினத்தின்...
மகாகவி -
பாரதி கண்ட...
அக்கினிக் குஞ்சு..!
இவர் -
தன்னிரு
தடந்தோள் தன்னில்...
தன் -
தாய் நிலம் ஏந்தி...
பறந்திடச் சிலிர்த்த
அக்கினிச் சிறகு...!
எம் மாநிலத்து
மாணவர்தம் -
மனவெளியெங்கும்
மலரும் வனமாய்...
புராதனம் பேசி
புலரும் பொழுதின்
விடியலைக் காட்டிய
விஞ்ஞானப் பார்வை..!
இங்கு -
என்றென்றும்...
மெல்லியதோர்
மௌனம் கலந்து
காற்றில் தவழும் ....
அழுக்கைக் களைந்த
கரைந்த சோப்பின்
நறுமணமாய்....
மானுடம் தேடிய
மனிதத் தவம்..!
இவர் -
குரான் ஓதினார்...
திருக் -
குறளை ஏத்தினார்...
நால்வகை -
வேதம் போற்றினார்...
கிருஸ்துவ -
நாதமும் பாடினார்...
எனினும் -
மனித நேயம்...
ஒன்றையே நாடினார்..!
தன் -
தாய் மண்
மடியில் தவழ்ந்த படியே...
நீண்டு விரிந்த
நீலவிண்தனை...
அளந்து பிளந்து
பிழிந்த...
எந் தமிழ் -
மண்ணின் மைந்தர்...!
இவர் -
இளம் மாணவ,
மாணவியர்களின்...
இருதய விழிகளில்
கனவுப் பொறிகளை ...
கருவிழிகலென -
விதைத்த வள்ளல்...!
மக்களின் -
உள்ளம் நுழைந்து ,
உள்ளுணர்வில் கலந்து ,
உயர்ந்து நிற்கும்...
ஒப்புவமையில்லா
ஒல்காப் புகழ்...
உண்மையின் தோழர்..!
சுற்றிச் சுழன்றோடி
நித்தந் நித்தம்...
அண்டச் சூட்சுமம்
சொல்ல வல்ல...
சில செயற்கைகோள்கள்...!
அதனை -
புவியீர்ப்பு
விசையை தாண்டி...
ஏவி -
நிறுவிட வல்ல...
பல ஏவுகணைகள் ...!
யென -
சோதனை
ஆற்றைக் கடந்த...
சரித்திர -
சாதனையாளர்...!
இப் -
புவிப்பந்திடை
உலாவும்...
பொல்லா -
வல்லரசுகளை
பொறிகலங்க வைத்த...
' பொக்ரான் ' -
அணுகுண்டு...
சோதணையின் -
புன்னகை மன்னன்...!
பூமி -
மனிதர்களின்...
உயிர்க் -
கிரகமாயிருக்க...
மரக்கன்றுகள் -
பயிரிடச் சொன்ன
மகாத்மா...!
இவரோ...
எஞ்ஞான்றும் -
மெஞ்ஞானமிற்று...
அஞ்ஞானம் -
அணுகாவொன்னா
விஞ்ஞானி...!
பயில்தொறும் -
நூல் நயம் போன்ற..
கலைமகள் -
கலாமுக்கும்..!
வீணையின் -
ஸ்வர வீடுகளே...
மோனத்தின் -
ஸ்ரிராக முகவரிகள்...!
தன் -
வாழ்வினில்
பரிசுகள் ...
எதையுமே-
ஸ்பரிசித்தறியா...
இந்த -
பரிசுத்த சுவாசம்...!
இந்திய -
இளையோர்
எல்லாம்...
இடையறாப்
பயிற்சிகள் பெற்று...
முயற்சிகள் செய்திட
முழங்கிய மூச்சு...!
நித்தமும் -
எளிமை ...!
இவரின்பாற் -
கற்றது எளிமை.
முகிழ்ந்தெழும் -
வலிமையோ...!
இவரால் பெற்றது
வலிமை.
நனியெனும் -
இனிமைதான்...!
இவரா லுற்றது
இனிமை.
எனவே -
இனியெவரும்
கலாமை...
விஞ்சுவ தென்பது
இங்கு
இயலாமை...!
இவர் -
போற்றி புகழ்ந்த
'திருக்குறள் '
வாழ்த்தும்...
" வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் ".
- இராக. உதயசூரியன்.

