மாற்று ச் சிந்தனை
மாற்று(ச்) சிந்தனை
எப்போதும் யார் தயவையும் எதிர்பார்க்காமல் வாழ்பவள் பங்கஜம்.. கொஞ்சம் வைராக்கியம்... கொஞ்சமென்ன நிறைய... அவளுக்கென்று கணவன் வாங்கிப்போட்ட நிலத்தில் தனியாளாக நின்று விவசாயம் பார்த்து, இதோ இந்த ஊரில் வேலை இல்லை என்று யார் வந்தாலும் அவர்களுக்கு வேலை தருபவள்.
தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைத்தாள்..
அவன் இங்கிருந்து விவசாயம் பார்க்க முடியாது என்று சொல்லி, இதோ வேறொரு நாட்டில் கை நீட்டி சம்பளம் வாங்கிக்கொண்டு, இங்கு படித்த படிப்பை வைத்து அங்கு அவர்களுக்கு சலவை செய்துகொண்டு இருக்கிறான்...
காலை எழுந்த பங்கஜம், வேகவேகமாக வேலைகளை முடித்து... தோட்டம் துறவெல்லாம் சுத்தப்படுத்தி... அழகாக்கிக்கொண்டிருந்தாள்..
வீட்டில் ஒரு பகுதியில் மகன் மருமகள் பேரப்பிள்ளைகளுக்கென்று அதி நவீன வசதியும் செய்துவைத்திருந்தாள்...
எப்போதும் விடுமுறைக்கு வந்து மருமகளையும் பேரனையும் விட்டுவிட்டு
செல்வான் மகன். பிறகு விடுமுறை முடிந்து இவளே அழைத்துச்சென்று விட்டு விட்டு வருவது வழக்கம்...
எவ்வளவோ மகன் அழைத்தும், பங்கஜம் அங்கே அதிகமாக தங்கியது இல்லை. அங்கேயே தங்கிவிட்டால், நம்மை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கிறது... என்று அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு வந்துவிடுவது வழக்கம்...
இதோ கார் வந்துவிட்டது எழுந்து சென்று கதவை திறக்கிறாள் ...பேரன் நன்றாக வளர்ந்துவிட்டான்...
பாட்டி உச்சி குளிர்ந்து மூவரையும் உள்ளே அழைத்துச்செல்கிறாள்...
தடபுடலான விருந்து ...
மகனும் மருமகளும் வீட்டில் இருக்க.. பாட்டியும் பேரனும் வயலுக்கு செல்கின்றனர்... தான் புதிதாக வாங்கிய நிலத்தை பேரனுக்கு காண்பித்து.... இதில் துவரை போடவேண்டும் என்று சொல்லி வந்தாள் பாட்டி...
"பாட்டி நான் போனமுறை வந்தப்போ கடலை போட்டதாக சொன்னீர்களே...!"
"ம்...ஆமாம்பா..."
.....எந்த எந்த சீசனில் என்ன போட்டால், எப்படி விளையும்... அதை பராமரிப்பது எப்படி... என்று தெளிவாக விளக்கிக்கொண்டு வந்தாள் பாட்டி...
அனைத்தையும் சரியாக நல்லா தெரிஞ்சிகிட்டு நிதானமா வேலை பார்த்தா நாம தானே முதலாளி என்றாள்...
அந்த ஊரில் பாட்டிக்கு இருக்கும் மரியாதை அவரின் செயல்கள் தனித்து நின்று இப்போதும் உழைக்கும் பாங்கு அவனுக்குள் ஏதோசெய்தது....
வீட்டுக்கு வந்தவன்... அம்மாவிடமும் அப்பாவிடமும்,
"நான் இங்கேயே இருந்து விவசாயத்தை பற்றி நன்கு தெரிந்துகொண்டு பாட்டிக்கு துணையாக இருக்கப்போகிறேன்", என்றான்..
பாட்டி ஓடி வந்து, "என்னப்பா சொல்ற... இந்த வாழ்க்கையெல்லாம் உனக்கு ஒத்துவராது... நீ அப்பா அம்மா கூடவே இருந்து அவங்க சொல்றத கேளு... அவங்க உம்மேல எவ்வளோ ஆசை வச்சிருக்காங்க... நீ பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கணுன்னு நினைச்சிருக்காங்கப்பா...."
"அய்யோ பாட்டி! அப்பா இங்க படிச்ச படிப்ப வச்சிதானே.. அங்க வேலை பாக்குறாங்க... நேரத்துக்கு ஓடி நேரத்துக்கு வந்து... எப்பவும் மிஷின் போல ஓடிக்கிட்டே இருக்கணும்... ஆனா நான் இங்க இருந்து... நல்லா படிச்சி.. நம்ம விவசாயத்தை பத்தி, என்னை மாதிரி இருக்குற இளைஞர்களுக்கு புரியவைத்து, விவசாயத்தோட நிலைமையை உயர்த்தி நல்லா கொண்டு வரப்போறேன்", என்றான்...
அவனின் அப்பா ஒன்றும் பேசவில்லை தான் செய்ய வேண்டிய செயலை மகன் செய்யப்போவதை நினைத்து தலை ஆட்டினார்....