புடவை சூட்டினில் புதைந்த கேள்விகள்

சில நாட்களாகவே காயத்ரி தனக்குள் பல கேள்விகளை கேட்கத் தொடங்கிருந்தாள்.அதற்கான பதில்களும் கூட,சில கேள்விகளாய் வந்து விழுந்து அவளை மேலும்
குழப்பியிருந்தது.இதை எதையும் அவளால் தவிர்க்கமுடியாது என்பது தான் உண்மை.ஏனென்றால்,அவளின் கேள்விகளுக்கு சொந்தமானவள் வேறு யாருமல்ல,தன்னை இரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளே..அவளே தான்.சில மாதங்கள் முன்பிலிருந்தே அத்தனை கேள்விகளும் தனக்கானதாக மாறிவிட்டதும் கூட
ஒரு காரணமாக இருக்கலாம்.

தன்னை தானே ஏன் கேள்விகளுக்குள் புதைத்துக் கொள்ளவேண்டும்?"வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்று குதித்து நீந்த பழகிக் கொள்ளவேண்டியது தானே?-இப்படியாக
தன்னையும்,தன்னுடன் சில மாதங்களாய் அப்பிக் கொண்ட கேள்விகளையும் ஆறுதல் படுத்திக் கொண்டு எழுந்தாள்.சுடச்சுட காப்பி டம்லரை காயத்ரியின் மேசை மீது 'கவனமாய்' வைத்துவிட்டு அவள் அம்மா வேகவேகமாய் நகர்ந்தாள்.பல நேரங்களில் அவள் அம்மாவின் டம்லர்-மேசை 'கவனம்' தான் அவளின் அன்றைய மன நிலையை,காயத்ரி அறிந்து கொள்ளச் செய்யும்.அவளின் உருவம், காப்பியின் புகையினுள் மங்கலாய் நகர்ந்தது.
திடீரென்று தன் கொண்டையில் மறந்து சொருகப்பட்ட சீப்பை கண்ணாடியில் பார்த்து அவள் அம்மா தன் கேசத்தை சரி செய்து கொண்டாள்.பின்னர் தன் காட்டன் சாரியின் முந்தானையை உருவி,ஈரத்தில் அடிக்கப்பட்ட பவுடர் உண்டாக்கிய கோடுகளை, கழுத்தில் தேடித் துடைத்துக் கொண்டிருந்தாள்.சாரியின் மடிப்பை சரி செய்து கொண்டு நகர ஆயத்தமானாள்.
அதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.வீட்டு வேலை செய்யும் நேரத்தைத் தவிர தன்னை அலங்கரித்துக் கொள்ள அவள் அம்மா
எடுத்துக் கொள்ளும் அதிகபட்ச நேரம் இந்த இரண்டு நிமிடங்கள் தான்.அதையும் இப்போதெல்லாம் துரிதமாக்கிக் கொள்ள முயன்று கண்ணாடி முன் தோற்கிறாள்.
அன்றைய வேலைகள் முடித்திருந்தால்,அப்பா மதிய சாப்பாட்டுக்கு வரும் வரை எந்த புத்தகத்தையாவது மேய்ந்துக் கொண்டிருப்பாள்.அதை முழுதும் முடித்துவிட
வேண்டும் என்ற வைராக்கியம்,சிரத்தை,ஆர்வம் எதுவும் இருந்ததில்லை.அப்பா வருகைக்கான அந்த கால இடைவெளியை பூர்த்தி செய்ய அவளுக்கு தேவை ஏதோ ஒரு புத்தகம்.அவ்வளவு தான்!
அவளின் மொத்த பெருமிதமும் தன்னையும்,தன் அப்பாவையும் கவனித்துக் கொள்வதில் தான் இருக்கும்.போன மாதம் அப்பாவின் ஆபீசில் இருந்து வந்த
மானேஜர் அம்மாவின் சமையலை அப்பாவிடம் பெருமையாக சொன்னதாய்,அப்பா சொன்னவுடன் எப்படி பூரித்து போய்விட்டாள்?அது மட்டுமா என்ன? நேற்று கூட
பக்கத்து வீட்டு முதலியாரம்மா என்னை பார்த்து அழகா, லட்சணமாக இருப்பதாய் சொன்னவுடன் அம்மா முகத்தில்தான் எவ்வளவு பெருமிதம்?அவளுக்கான
உலகத்தில் நாங்கள் இருவரும் முழுவதுமாய் ஆட்கொண்டதில் சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும்,ஏதோவொரு குற்றவுணர்வு ஏன் என்னை இப்போதெல்லாம்
பற்றிக் கொள்கிறது?இது எனக்கு மட்டும் தானா?இதை அப்பாவும் உணர்ந்திருப்பாரா?"தெய்வம் தொழாஅள் கொழுநனை தொழுவாளை,தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்.." என்ற சமூக கட்டமைப்பினால் இதை உணர்ந்திருக்க மாட்டாரோ?ஏன் இப்படி இவளின் உலகை சுருக்கிக் கொண்டாள்?இதை விதி,தேவைகளின் கோட்பாடு,பேமிலி ஆர்க்கி,சொசியல் ஃப்லாஸ் என்றெல்லாம் முற்றிலுமாய் சொல்லிவிட முடியாது.ஏனென்றால் இதை தானே இவளும் ரசிக்கிறாள்..அந்த ரசனை தானே அவளின் சிறுவுலகத்தின் உயிர்ப்பியலை தினம் தினம் முடிவி செய்கிறது!அந்த உலகத்தின் களைப்பில்,பெருமையில்,கோபத்தில்,சலிப்பில்,சிரிப்பில் தானே
அவளின் நகர்தலை அமைத்துக் கொண்டிருக்கிறாள்.இப்படியாக யோசித்துக் கொண்டிருந்ததில் காயத்ரி காப்பியை மறந்தே போனாள்.அதை ஓரே மொடக்கில்
எடுத்துக் குடித்துவிட்டு மீண்டும் முகத்தை தன் தலையணைக்கு கொடுத்தாள்.

'தான் பிறக்கும் வரை வேலைக்கு சென்று கொண்டிருந்தவள்,அவளாகவே நிறுத்திக் கொண்டாள்.ஏன்?தன் உலகத்தை பெரிதாக வைத்துக் கொண்டதிலும்,அதில் வந்து போன
மனிதர்கள் ஏற்படுத்திய காயங்களும்,சலிப்பும் கூட காரணமாக இருக்கலாம்.அவள் மட்டுமே இதன் காரணியை அறிவாள். இப்படியான உலகத்தை அமைத்துக் கொண்டதில் என்ன சௌகரியத்தை கண்டுவிட்டாள்?இதில் என்ன பிடித்து போனது அவளுக்கு?
எங்களுக்கான சந்தோசம்,துக்கம்,ஏமாற்றம்,கோபம்,ஆச்சரியம்...தனதாக எடுத்துக் கொள்வதனால்,தனக்கான இந்த உணர்வுகளை எளிதாக்கிக் கொள்கிறாளா?
யோசித்துப் பார்த்தால்,அவளின் உலகம் கூட ஒரு மாய பிம்பம் தான்.எங்களின் உலகில் வந்து தங்கிக் கொள்வதையே பாதுகாப்பாய் எண்ணுகிறாள் போலும்.
அது அவளின் பாதுகாப்பிற்கானது மட்டுமல்ல..எங்களின் பாதுகாப்பிற்கானதும் தான்.
உடம்பு சரியில்லாத நேரங்களிலும் கூட யாரின் வற்புறுத்தலும் இன்றி,வேலைகளை செய்கிறாள்.பேணுந்திறன்,அன்பு,இரக்கம் இவை எல்லாம் தனக்கானதாக
எடுத்துக் கொள்கிறாள்.கோபம்,வன்மம்,குரோதம் எல்லாம் அவள் உலகிற்கு ஒவ்வாததாய் எண்ணுகிறாள்.இதற்கு முரணான உலகினை அமைத்துக் கொண்ட பெண்களை
எத்தனை முறை எனக்கு முன்பே தவறாக பேசியிருக்கிறாள்.
ஏன்?போன தடவைக்கூட ஏதோ கல்யாணத்திற்கு போய் வந்தவள்,"பொம்பள இல்லாத வீடும்,ஆம்பள இல்லாத வீடும் எதயும் பெருசா எடுத்து நடத்திட முடியாது.."
என்று பாரு மாமிட்ட கூட சொல்லிக் கொண்டிருந்தாளே?ஏன் இப்படி கடமைகளை பிரித்துக் கொள்வதிலும்,கொடுப்பதிலும் மெனக்கெடுகிறாள்?அப்படியாக
எல்லோரது பாதுகாப்பையும் அதிகப்படுத்துகிறாளா?வேலைகளை எளிதாக்கிவிட முடியும் என்று எண்ணுகிறாளா?அவளின் சூழல்தான் இப்படி இவளை
யோசிக்க வைத்திருக்குமோ?
இல்லை..அப்படி இருக்க முடியாது..கரூரிலிருந்து சென்னைக்கு ட்ரான்ச்ஃபெர் வாங்கி வந்த இந்த 10 வருடங்களில் குமுக பழக்கவழக்கம்,வெஸ்டெர்ன் கலப்படம்,
காஸ்மோபொலிடிகன் நாகரீகம் என எதுவும் இவள் உலகத்தை மாற்றி அமைத்துவிட முடியவில்லையே?அப்படியாய் இந்த மாய உலகத்தை களைப்பதில்
இவளுக்கு என்ன பயம்?என்ன பாதுகாப்பற்ற நிலை?-காயத்ரி குழம்பித்தான் போயிருந்தாள்.
தன் கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு, தானே கல்லெரியும் நிலைதான் அவளான உலகத்தில் இருந்து கொண்டு,அவளுக்கு எதிரான இப்படியான
கேள்விகளும் கூட..' என்று ஆறுதல் படுத்திக் கொண்டாள்.
'இப்படி இவளுக்காக பல கேள்விகளை நான் சுமக்கும் போது,அதை அனைத்தும் எனக்கான கேள்விகளாய் மாற்றிவிட எப்படி சிரமப்படுகிறாள்?
ஆம்..சில மாதங்களாகவே எனக்கான மாய உலகத்தை உருவாக்க என்னை ஆயத்தப்படுத்துகிறாள்.உடைகளின் நீளத்தில் தொடங்கி,பேச்சின் நீளத்தை
குறைத்ததிலிருந்து என் உலகிற்கான உயிர்ப்பியலை தொடங்கி வைத்துவிட்டாள்.இவளின் அம்மாவும் இப்படித்தானோ???இங்கு எல்லோருக்குமான
அன்பு,பரவு,சிரிப்பு,வன்மம்,வாத விரோத குரோதம்,அழுகை என இருக்கையில்,எனக்கானதை தொலைத்துவிட்டு,மற்றவர்களுக்கானதை எனதாக்கிக் கொண்டு
இவளை போல மாய வலைக்குள்ளே மங்கிட்டு மடிந்திடும் மானிட பிரவி ஆவேனோ??இப்படி என்னிடம் எதையோ கள்வாடப்பட்டதாய் ஏன்
உணர்கிறேன்?'-ஒன்றும் புரியவில்லை காயத்ரிக்கு!
"இமைத் தீப்பன்ன கண்ணீர்த் தாங்கி" என்பார்களே,அப்படியாக படுக்கையில் இருந்தவள் விறுவிறுவென ஓடிப்போய்,சமையலறையில்
இருந்த தன் அம்மாவை கட்டிக் கொண்டு,அவள் புடவை சூட்டினில் புதைந்து கொண்டாள்.அதே கருவறை இருட்டு!!

-வ.பாரி இளஞ் செழியன்
10/10/2014

எழுதியவர் : பாரி (14-Oct-15, 1:17 pm)
பார்வை : 411

மேலே