காதலின் பாதையிலே

காதலின் பாதையில்
என் மனம் நிறைந்த கவிக்குயில் நீ...!
இதயத்தின் விளிம்புகளில்
எழிலுறச்சிரித்து எனக்குள் புகுந்த
குளிர் நிலவு நீ.....!
உனது கார்முகில் கூந்தல்
என் கவிச்சொற்கள்
உற்பத்தியாகும் கருப்பு நந்தவனம்...!

எதேச்சையாய் கவிதைக்கொரு
கரு கிடைத்தது போல்
எனக்குள்ளே
திருப்பம் தந்த அருங்கவிதை..!

தினம் தினம் கனவுகளின்
சலனப்படத்தில்
உன் மடியணை தலையணையாகி
இதயத்தோடு இதயம்
காதல் கதை சொல்ல
உனது உடலெனும் வீணையில்
நாண ராகம் பிறக்க
உன் விழி திறவா மெளன மொழி
கண் முன்னே கவியாய் விரிகிறது...

கனவுக்காவியத்தை
காதலியாய் நனவாக்கி
என்னுடன் நீ இணைந்து
புதுச்சரித்திரம் படைத்திட
கண்கள் மொழிபேசி
இதயத்தின் வழி இன்பம் தரட்டும்.

உனது கண்களின்
அர்த்தமுள்ள மெளனமொழிப் புன்னகையில்
தெரியும் தெத்துப் பல் முத்துக்கள்
எனது இதயமாலையாய்
அலங்கரிக்கட்டும்...
அதில் எப்போதும்
உன் முக ஒளி மட்டுமே
தவழட்டும்...!
.
பரஸ்பரம் இதயம் கலந்து
இரு வீட்டார் சம்மதத்தோடு
உன்னோடு நான்
மணத்தோணியில் வலம் வர
ஆசையாய் காத்திருக்கிறேன்.

என் எண்ணச் செறிவுகளின்
பிறப்பிடமே...!
அது சாத்தியம்தானா ?
சிந்தித்துச்சொல்...

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (15-Oct-15, 11:49 pm)
பார்வை : 249

மேலே