கிராமத்துக் காதல் அந்த வேளை இனி வருமோ
கிராமத்துக் காதல் ( அந்த வேளை இனி வருமோ )
*******************************************************************************************
வைகறைத் துயிலெழுந்து வாசலில் கோலமிட்டு
வைகையின் மீனாளை நல நினைத்து விளக்கேற்றி
கா கரையும் முன்வேளை காததூரம் வழிநடந்து
ஏரிக்கரை ஓரத்து நிலந்தன்னில் பயிர்பார்த்து
பார்த்தபயிர் நொந்திருக்க அதுபிழைகும் வழிசெய்ய
ஆர்த்தெழும் களைதன்னை வேரறுத்து நீக்கிவைத்து
அர்த்தமுள்ள அறிவுரைகள் பணியாட்க்கு எடுத்துரைத்து
ஊர்ந்திடும் ஆதவனும் நல்எழ இல்லடைந்து
சட்டியில் இட்டுவைத்த புழுங்கரிசிப் பழஞ்சோற்றில்
கட்டித்தயிர் அதுசேர்த்து கெட்டியாய் நல் பிசைந்து
வட்டில் இட உதவிக்கு வெங்காயம் மிளகாயும்
மட்டற்ற மகிழ்ச்சியில் நிறைவயிறும் பாராட்ட
தரிசுநிலப் புல்வெளியில் ஆடுமாடு மேயவிட்டு
இருசனாம் பணியாளை உதவிக்கு கூப்பிட்டு
பரிசாம் பயிர்தனக்கு வரப்புயர நீர்பாய்ச்சி
அரசாம் மரநிழலில் ஊர்க்கதை பலபேசி
ஆதவனும் உச்சிஎழ ஆகுநேரம் நிழல்கணிக்க
காதவழி கால்நடந்து பகல்வேளைச் சோற்றுக்காய்
சாதமிடும் நோக்கத்தில் புகலிடமாம் இல்புகுந்து
தீதில்லாச் சுள்ளியிட்டு மண் அடுப்பு பற்றவைத்து
பானையில் சோறாக்கி கடல்மீனைக் குழம்பாக்கி
இணையாக கறிவடகம் நேர்த்தியாய் வறுத்தெடுத்து
அணைகட்டிய சோற்றினை சுவைத்திடும் தருணத்தில்
ஏனைய குடும்பத்தார் உடன்சேர்ந்து தரையமர்ந்து
கூடிஉண்ட களிப்பினில் சேடிதனைப் பாராட்டி
செடிகண்ட வெற்றிலையை பாக்கோடு மென்றுமிழ்ந்து
ஆடும் இலை வேம்புமர நிழலினிலே கட்டிலிட்டு
நாடிவந்த உறக்கத்தில் சிறுநேரம் கிடந்தெழுந்து
ஓயாது வறுத்தெடுத்த பகலவனும் கீழிறங்க
மேயவிட்ட ஆடுமாடு அவைதன்னை ஒருங்கிணைத்து
ஆயத்தில் நல் அடைத்து அவைகட்கும் உணவிட்டு
சாயங்காலம் அதுநேர சிறுபொழுது காத்திருந்து
பக்கத்து டூரிங்கில் எம் ஜி ஆர் படம் ஓட
ஊக்கமாய் நடையிட்டு சுவரில்லாத் திரையரங்கில்
ஏக்கமாய் அமர்ந்திருக்கும் மறுமனைப் பெண்ணுடனே -- திரையில்
பாக்கள் வரும்வேளை பலபேசி மகிழ்ந்திருந்து
வணக்கம் போட்டவுடன் வெளிச்சங்கள் நல் பரவ
சுணக்கம் இல்லாத தாக்கங்கள் வெளியேற
உனக்கும் எனக்கும் இருக்கமினி இலையென
இணக்கமாய் வரவேற்கும் வாய்த்திட்ட இல் புகுந்து
ஆட்டுக்கறி பிரியாணி பாந்தமாய் ஆக்கிவைத்து
நாட்டுச் சரக்கதனை நயமாய் ஊற்றிவைத்து
இட்டமாய் இல்லாளும் பாசமாய் பரிமாற
ஏட்டடங்கா இன்பங்கள் ஓட்டமிடும் சாமங்கள் !!!
*********************