ஜாலியா ஒரு கதை
அந்தக் காலத்திலே – அதாகப்பட்டது 1920கள் 1930களில் என்று வச்சுக்கிடலாமே !
கிராமங்களில் மக்கள் கதை பேசிக்களித்தார்கள். பொழுது போக்குவதற்காகக் கதைகள் சொன்னார்கள். கவலைகளை மறக்கக் கதை பேசினார்கள். மற்றவங்களை மட்டம் தட்டவும், பரிகாசம் பண்ணவும், சும்மா கேலிபேசிச் சிரிக்கவும் கதைகள் சொன்னார்கள். நோக்கம் எதுவும் இல்லாமலே கூட கதை அளந்தார்கள்.
அவர்கள் கதை சொன்னதும் கேட்டதும் எதுக்காகவும் இருந்த போதிலும் கூட, அவர்கள் சொன்ன கதைகள் மனித இயல்புகளை எடுத்துக் காட்டுவதாக இருந்தன. ஆண்கள் பெண்களின் பலவீனங்களை சுட்டிக்காட்டின. வெறுமனே சிரிப்பாணிக் கதை என்று சொன்னதிலே கூட அடிப்படை உண்மை ஒன்று இருக்கத்தான் செய்தது.
வாழ்க்கை பற்றிய ஆதார உண்மையாக அது இருக்கும்.
ஒரு சமயம், சும்மா சிரிக்கிறதுக்காக ஜாலியான ஒரு கதை என்று ஒருவர் சொன்னார். சுவாரசியமான கதை அது.
இதிலே இன்னொரு முக்கிய விஷயத்தை குறிப்பிடணும். கிராமங்களிலே கதைகள் பேசினாலும் சரி, சும்மா வெறும் பேச்சு பேசினாலும் சரி, அவர்கள் பச்சையாகவும் கொச்சையாகவும் பேசத் தயங்கியதில்லை. எதையும் அசிங்கம், ஆபாசம்னு சாதாரண ஜனங்க கருதலே. எல்லாத்தையும் வெளிப்படையாப் பேசினாங்க. அனைத்துமே இயல்பானது, இயற்கையின்னு அவங்க நினைச்சாங்க.
ஜாலி பிரதர் சொன்ன கதையிலே விரசம்னு சொல்லக்கூடிய சமாச்சாரம் உண்டு. இதை எல்லாமா வெளிப்படையாய் பேசுவாங்க என்று முகம் சுளிக்கக் கூடியவர்களும் இருப்பார்கள். பேச்சுக்குப் பொருள் உலகத்திலே உள்ள எல்லாம் தான் என்பதுதான் சாதாரண மக்களின் எண்ணம் ஆகும். ஜாலி அண்ணாச்சி சொன்ன கதையிலே அவர் கொச்சையான வழக்கச் சொல்லை தாராளமாகவே உதிர்த்தார். நான் பெரும்பாலும் அதை தவிர்த்திருக்கிறேன். இனி கதை விசயம் -
ஒரு ஊரிலே ஒரு ராசா இருந்தான். அவனுக்கு அவன் பெண்டாட்டி பேரிலே – அவதான் ராணி, அவ பேரிலே – வெறுப்பு வளர்ந்து வந்தது.
காரணம் என்னன்னு கேட்டா, அந்த ராணிக்கு வாயுக் கோளாறு உள்ள சரீரம். எப்ப பார்த்தாலும் கீழே குடி காத்து பிரிஞ்சுகிட்டே இருக்கும் அவளுக்கு. அதிலும் வாயு சம்பந்தமுள்ள கிழங்கு மாதிரி சமாச்சாரங்களே தின்னுட்டான்னு சொன்னா, டார்-பிர்னு காத்து போய்க்கிட்டே இருக்கும்.
அது ராசாவுக்கு பிடிக்கலே. ‘குசுவினிமுண்டே ! எப்ப பார்த்தாலும் குசு விட்டுக்கிட்டு நாறக் கழுதை’ ன்னு முணமுணப்பான்.
அதுக்கு நான் என்ன பண்ணுவேன். என் உடம்பு வாகு அது. இயற்கைக் கோளாறுக்கு மருந்து உண்டுமா, மாத்து உண்டுமா?’ன்னு வாயடி அடிச்சுப் போடுவா அந்த ராணி. அதை அடிச்சுச் சொல்ற மாதிரி படார்னு ஒரு வேட்டும் விடுவா கீழேகுடி.
இந்த முண்டையை ஒழிச்சுக் கட்ட வேண்டியதுதான்னு அவன் முடிவு செஞ்சு போட்டான். அதனாலே காத்துப் பிரியாத (குசுவே விடாத என்பது கொச்சை) ஒரு பொண்ணைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கலியாணம் செய்து கொள்ளணும்னு ஆசைப் பட்டான். யாரு? அந்த ராசா.
ஆகவே, எட்டுத் திசைக்கும் பதினாறு கோணத்துக்கும் ஆளுகளை அனுப்பினான். கீழே குடி காத்தே விடாத பொண்ணு உண்டான்னு தேடிக் கண்டுபிடிச்சுக் கொண்டாரும்படி.
ஆளுக போனானுக. காடா செடியா மலையா மடுவான்னு அலைஞ்சு திரிஞ்சாங்க. ஊர் ஊரா, நாடு நாடாச் சுத்தினாங்க. கடைசியிலே மூஞ்சியை தொங்கப் போட்டுக் கிட்டு வந்து சேர்ந்தாங்க.
அப்படி ஒரு பொம்பிளை – ஏன், மனுசப்பிறவி, அது ஏன், எந்த உசிருப் பிராணியும் – இருக்க முடியுமா என்ன? மாடுக கூடத்தான் காத்து விடுதுக. (கொச்சை வார்த்தையை ஞாபகத்திலே வச்சுக்கிடுங்க) வண்டி இழுத்திட்டுப் போகும் போதே, மாடு டார்னு காத்து விடுறதை கேட்டதில்லையா? பின்னனே என்ன !
ஆனா ஒரே ஒருத்தன் மட்டும் ஓங்கிக் குரல் கொடுத்தான் ; ராசா ராசா, நீங்க தேடுற மாதிரி பொண்ணாப் பிறந்தவ எவளுமே கிடையாது. இந்த நாட்டிலே மட்டுமில்லே ; உலகத்திலேயே இருக்க முடியாதுன்னு தான் தோணுது. ஆனா ஒரு அதிசயம் இருக்கு. என்னன்னு கேட்கணும். அது அபூர்வமான, அற்புதமான பிறப்பு தான். ஒரு இடத்திலே ஒரு பொண்ணு இருக்கு. அவளுக்கு, சாதாப் பிறப்புக மாதிரி அடிக்கடி – ஏன் ஒரு நாளைக்கு ஒரு தடவை கூட, கீழே குடி காத்துப் பிரியாதாம். மாசத்திலே ஒரு தடவை கூட – ஊகூங் – மாசக் கணக்கிலே கூட அவ உடம்பு காத்தை வெளியேத்தாது. வருசத்துக்கு ஒரு தடவை தான் அவ குசு விடுவாளாம்!
இப்படி நீட்டி இழுத்து அவன் அறிந்த மகா அதிசயத்தை வெளிப்படுத்தினான் அந்த ஆளு.
ஆகான்னு கைகளை தட்டிக் கொண்டு குதியாட்டம் போட்டான் ராசா. எப்ப பார்த்தாலும் குசுவிக்கிட்டு கிடக்கிற மூதேவியை விட, வருசத்துக்கு ஒரு தடவை குசுவுகிற சீதேவி தெய்வப்பிறப்புன்னு தான் சொல்லணும் ! (கதையினுடைய எபெக்டுக்காக இங்கே கொச்சையை உபயோகித்தே தீர வேண்டியிருக்கு !) அம்சமான அந்தப் பொண்ணை அழைச்சுவாங்கன்னு ஆக்கினைகள் பண்ணினான்.
அப்படியே எல்லாம் நடந்தது. பொண்ணு வந்தாச்சு. கலியாணத்துக்கும் நாளும் குறித்தாச்சு.
ராசா வீட்டுக் கல்யாணமின்னு சொன்னா சும்மாவா? ஒரே ஆர்ப்பாட்டம் – அமர்க்களம் தான் போங்க.
முகூர்த்த வேளை. இங்கேதான் விதிநாதன் அவனோட வேலையைக் காட்டினான்னு சொல்லணும். பாருங்க, அன்னையப் பாத்து தான் அந்தப் பொண்ணுக்கு கீழே குடி காத்து வெளியேற வேண்டிய (கொச்சை வார்த்தையை மனசுக்குள் உபயோகித்துக் கொள்க!) நாளாக வந்து சேர்ந்தது.
ராசா தாலியை எடுத்து பொண்ணு கழுத்திலே கட்டப் போகிற சுபவேளை. எல்லாரையும் எல்லாத்தையும் தூக்கிப் போடக்கூடிய மாதிரி ஒரு பேரோசை வெடிச்சது. ஆனை வெடி குதிரை வெடி அவுட்டு பெரிய வேட்டு இதெல்லாம் எந்த மூலைக்கு ! ஏதோ ராசா பக்கத்திலே இடி விழுந்த மாதிரி ஒரு பெருஞ்சத்தம். ராசா ஐயோன்னு பூட்டான் !
புதுப் பொண்ணுவோட உடம்பிலேயிருந்து காத்து பிரிஞ்ச சத்தம் தான் அது. அதினாலே தாக்குண்டு அதிர்ச்சி அடைந்த ராசா உடம்பிலே இருந்த காத்து அவன் மூக்கு வழியா ஒரே அடியா அவுட் ஆயிட்டுது. வேறொண்ணுமில்லே. மாரடைப்பால் மாண்டான்கிறாகள்ளே! அது மாதிரி, அதிர்ச்சியினாலே ஆசாமி செத்துப் போனான்.
மணவீடு பிணவீடாப் போச்சு. ராணி அம்மா ஓடி வந்தா. செத்த ராசா உடலை எடுத்து மடியிலே கிடத்திக்கிட்டு ஒப்பாரி வச்சு அழலானாள்.
நித்தக் குசுவி நானிருந்து
நிலத்தோட வாழயிலே,
வயிரக் குசுவி வந்து
வண்ணமுடி சாய்ச்சாளே !
உகூங் உகூங் …
(கதை சொல்லியே ராணியா ஆக்டு பண்ண ஆரம்பிச்சிட்டாரு இந்த இடத்திலே. பக்கத்திலே இருக்கிறவனை கட்டிப் புடிச்சுக்கிட்டு, மூக்கைச் சிந்திப் போட்டபடி, ஒப்பாரி வச்சாரு – செத்த வீட்டிலே அழுகிற பொம்பிளை கெட்டா போங்க ! அவ்வளவு தத்ரூபம்.) கதை கேட்டுக்கிட்டிருந்தவங்க விழுந்து விழுந்து சிரிச்சாங்க. சிரிக்காம இருக்க முடியுமா பின்னே !