கிராமிய இசை
மண்ணோடும் மண்ணின் மணத்தோடும்
விதையோடும் விதையின் துளிர்ப்போடும்
வரப்போடும் வரப்பின் ஈரப்பதத்தோடும்
பயிரோடும் பயிரின் வாசத்தோடும்
இழையோடி விளையாடும் எங்கள் இசை..
இசைக்கு மூத்த இசை எங்கள் கிராமியத் தேனிசை..!
வண்டியோடும் தாளத்திலும்
காளைகளின் கொம்பு மணி ஓசையிலும்
லாடக் குளம்புகளின் லயத்தினிலும்
பால் வேண்டி கத்துகின்ற
பசுக்கன்றின் நா அசைவிலும்
பிறந்து வரும் பிறவி இசை எங்கள் கிராமியத் தேனிசை...!
அசை இல்லை ஆனாலும் இசையிருக்கும்
நா அசையும் அசைவில் வரும் குலவைச் சத்தம்
சீரில்லை எங்கள் வாழ்க்கை ஆனாலும் சீர் இருக்கும்
பாசம், குணம், நேசம் என்று வேசமில்லா சீர்வரிசை
தளை இல்லை ஆனாலும் தளை இருக்கும்
பசி இருந்தும் பசி அறியா ஏழ்மைத் தளை...!
எழுத்தறியா எங்களுக்கு இலக்கணங்கள் ஏதுமில்லை
பொருளறியா எங்களுக்கு இலக்குகளும் ஏதுமில்லை
சேற்றோடு உழன்றாலும் இலக்கியங்கள் எடுத்தாளும்
இலக்கு உள்ள இனிய இசை எங்கள் கிராமியத் தேனிசை
நாகரீகம் பெருகி வந்து இசைகள் பல மலர்ந்தாலும்
அழும்மழலை கண்ணயரும் ஆதி இசை கிராமியத் தேனிசையே !