தேன்சிட்டு
தேன்சிட்டு !!!!
சிந்திடும் வியர்வையிலே - ஓர்நாள்
சிந்தையில் ஆழ்ந்திரிந்தேன்
சிறகுகள் படபடக்க - கூட்டமாய்
சிட்டுக்கள் பறந்தனவே!
முன்னே சென்றதொன்று - அதன்
பின்னே பலக்குருவி
யார்சொல்லித் தந்தார் - இந்த
பறக்கும் மந்திரத்தை!
கொய்யா மரத்திலொன்று - சில
கோவைக் கொடியின்மேல்
குந்தின குருவியாவும் - எந்தக்
கொள்கைப் பிடிப்புமின்றி!
சங்கேத மொழிகளிலே - பேசி
சாகசம் செய்தனவே
சிறியதும் பெரியதுமாய் - சிட்டுக்கள்
சிதறிபின் சேர்ந்ததுவே!
குருவியின் நாடகத்தில் - எனக்கு
குறிப்பிட்ட வேடமில்லை
பார்வையாளன் போலே - மெல்ல
பார்த்துரசித் திரிந்தேன்!
கொய்யாக் கிளையொன்றில் - குருவி
கூடொன்று அமைத்ததுவே
முத்துக்கள் மின்னுதல்போல் - சில
முட்டைகள் இருந்தனவே!
பள்ளிக்கு செல்லவில்லை - எந்தப்
பாடமும் படிக்கவில்லை
சாதிசண்டை இல்லை - குருவிக்கு
சங்கங்கள் ஏதுமில்லை!
மாடி வீடில்லை - மேனி
மறைக்க ஆடையில்லை
கூடு பறந்திடுமே - சிறு
காற்று அசைந்துவிட்டால்!
வட்டக்கண்கள் உருட்டி - சிறு
வாலை அசைத்ததுவே
அசையும் கிளையோடே - பொன்
ஊஞ்சல் ஆடிற்றுகாண்!!
சிட்டுக்கும் எனக்குமுள்ள - ஒரு
சிநேகத்தை நானுர்ந்தேன்
சிந்தையில் தைப்பதுபோல் - பல
செய்திகள் சொல்லியதே!
சிக்கனம் ஏதுமில்லை - வங்கி
கணக்கு பணமுமில்லை
மரியாதைப் பிச்சைகேட்டு - சிட்டு
மானமிழப் பதில்லை!
சொந்த சிறகினிலே - ஓர்
சொர்கம் அமைத்திடுமே
வாலைத் திருப்பிவிட்டே - அந்த
வானை அளந்திடுமே!
ஒத்திகை சிறிதுமில்லா - தொரு
ஓரங்க நாடகத்தை
ஒற்றைச் சிறுகுருவி - எனக்கோ
ஓசியில் நடத்திடுதே!
சின்ன குழந்தையில் - நான்
சிந்தித்த கேள்விக்கெல்லாம்
குறிப்பால் உணர்த்திடுதே - என்னைக்
குழப்பத்தில் ஆழ்த்திடுதே!
குருவிக்கும் காதலுண்டு - அதன்
குணத்தாலே கண்டுகொண்டேன்
பிஞ்சுக் குழந்ததைகளோடு - கூட்டில்
கொஞ்சிக் குலவிடுதே!
வெட்கி குனிகின்றேன் - சிட்டின்
வாழ்க்கை முறைகண்டு
சிட்டுக் குருவியின்முன் - நானொரு
சிறகொடிந்த கிளியானேன்!
நொடிக்கு நொடிவாழும் - இந்த
நோயிலாப் பறவைபோல்
வாழுங்கலை ஒன்றை - நான்
வாழ்நாளில் கேட்டதில்லை!
குருவிபோல் நான்பறந்து - மெல்ல
கற்பனையில் மிதக்கின்றேன்
கூரியசிறு அலகால் - குருவி
கொத்தியெனை எழுப்பியதே!
பார்த்திபன். ப
07/05/2015