கார்காலம் – 6

6

இத்தனை அழுக்காகவும் ஒழுங்கின்றியும் ஒரு நகரம் இருக்கமுடியுமா? அரவிந்தனால் நம்பவே முடியவில்லை.

பெரிய மழைகூட அவசியமில்லை, சின்னச் சின்ன தூறல்களுக்கே பம்பாயின் தார்ச் சாலைகள் அகலத் திறந்துகொண்டன. சாலையோரம், நடுரோடு, பிளாட்ஃபாரம் என்று வித்தியாசமில்லாமல் எங்கு பார்த்தாலும் சேறும் அழுக்குத் தண்ணீரும்.

பம்பாய் மொத்தமுமே ஒரு பெரிய அழுக்குக் குட்டைபோல்தான் அவனுக்குத் தெரிந்தது. சாலையில் நடப்பதற்கே அருவருப்பாக இருந்தது. எங்கு பார்த்தாலும் அழுத்தமான கறுப்புக் கறை படிந்த சுவர்களும் கூரைகளும் கதவுகளும் நசநசத்த குறுக்கு வீதிகளும் எரிச்சலூட்டின.

பேசாமல் இன்றைக்கும் ஹோட்டல் அறையிலேயே கிடந்திருக்கலாம் என்று தோன்றியது அரவிந்தனுக்கு. வேலை கொஞ்சம் சீக்கிரமாக முடிந்துவிட்டதால் அறைக்குச் சென்று, உடை மாற்றிக்கொண்டு சும்மா நடக்கலாமே என்று வெளியே கிளம்பியது, மழையில் மாட்டிக்கொண்டான்.

இப்போது மழை நின்றுவிட்டது. ஆனால் திரும்பி நடக்கமுடியாதபடி எங்கு பார்த்தாலும் அமீபா அமீபாவாகச் சேற்றுக் குட்டைகள். அவற்றைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் எப்போதும்போன்ற பரபரப்புடன் ஓடுகிற மும்பைவாசிகளைப் பின்பற்ற அவனால் முடியவில்லை. எங்கே கால் வைத்தாலும் வழுக்குகிறது. அழுக்குத் தரையில் தவறி விழுந்துவிடுவோமோ என்று பயமாயிருக்கிறது.

பலவிதமான விநாயகர் சிற்பங்களை விற்றுக்கொண்டிருந்த ஒரு கடையோரத்தில் ஒதுங்கியிருந்த அரவிந்தன் வீதியில் ஆட்டோவோ, டாக்ஸியோ தென்படுகிறதா என்று அங்கிருந்தே எட்டிப்பார்த்தான். ம்ஹும், இத்தனை பரபரப்பாக வியாபாரம் நடந்துகொண்டிருக்கிற தெருவில் நிச்சயமாக வாடகை வண்டிகளை நுழைய விடமாட்டார்கள்.

சிறிது நேரம் காத்திருந்தபின் அந்தக் கடை நிழலிலிருந்து வெளியே வந்தான் அரவிந்தன். சாலையில் எப்போதும்போல் கூட்டம் நிரம்பியிருந்தது. மழைக்குத் தாற்காலிகமாக மூடிய பிளாட்ஃபாரக் கடைகளெல்லாம் ஒன்று மிச்சமில்லாமல் மீண்டும் புத்துயிர் பெற்றாகிவிட்டது.

பெரும்பாலான கடைகள் தரையிலோ அல்லது சின்னஞ்சிறிய மர மேஜையின்மீதோ ஒரு குட்டி ஜமுக்காளத்தை விரித்து, அதில் அடுக்கடுக்காகக் கண்டதையும் நிறைத்திருந்தார்கள். பெரியவர்கள், சிறுவர்களுக்கான ஆடைகள், பள்ளிச் சீருடைகள், காது, மூக்கு, கழுத்து ஆபரணங்கள், கூந்தல் க்ளிப், துணி காய வைக்கிற க்ளிப், நைலான் கயிறு, பொம்மைகள், சீதாப்பழம், மண் விளக்குகள், முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, கல்யாண மொய் எழுதுகிற அலங்காரக் கவர்கள், ஏலக்காய் டீ, மூலிகை மருந்துகள், இன்னும் என்னென்னவோ.

செல்விக்கு எதையாவது வாங்கலாம் என்றுதான் இந்தக் கடைவீதியில் வந்து மாட்டிக்கொண்டிருந்தான் அரவிந்தன். இங்கே தரையெங்கும் சிந்திக்கிடக்கிற அழுக்கைப் பார்த்ததும் அவளுக்கேற்றது எதுவுமே இங்கே கிடைக்கப்போவதில்லை என்று நிச்சயமாகத் தோன்றிவிட்டது.

பொதுவாகவே செல்விக்குப் பரிசுகள் தேர்ந்தெடுப்பது அத்தனை சுலபமான விஷயமில்லை.

‘எனக்கென்ன குறைச்சல்?’ என்பது அவள் அடிக்கடி சொல்கிற வாக்கியம், ‘போதும் போதும்-ன்னு சொல்ற அளவுக்குக் கடவுள் எனக்கு எல்லாமே நல்லதாக் கொடுத்திருக்கான். இதை அப்படியே வெச்சுகிட்டாலே எதேஷ்டம்’ என்பாள் தத்துவஞானிபோல்.

அந்த வார்த்தைகளை அவள் உணர்ந்துதான் சொல்கிறாளா என்று தெரியாது. ஆனால் தனக்கான தனிப்பட்ட தேவைகள் என்று எதுவுமே இல்லை என்பதுபோல்தான் அவள் நடந்துகொண்டாள்.

தீபாவளி, பொங்கல், திருமண நாள் போன்ற விசேஷங்களின்போதுகூட, அரவிந்தனால் அவளுக்குப் பரிசு தர முடிந்ததில்லை. செல்விக்குத் தங்கம் என்றாலே அலர்ஜி. பட்டுச் சேலை தேர்ந்தெடுப்பதானால் ‘இதுக்காக எத்தனை பட்டுப் புழு சாகுது தெரியுமா?’ என்பாள். சரி, சாதாரணச் சேலை பார்க்கலாம் என்றால் ‘இப்போல்லாம் நான் சேலையே கட்றதில்லை!’, என்று பதில் வரும்.

‘ஓகே, நல்லதா ஒரு சுரிதார் வாங்கிக்கோயேன்?’

‘ம்ம், பார்க்கலாம்’ என்று தலையசைப்பாள். ஆனால் எதையும் வாங்கிக்கொள்ளமாட்டாள். அவனாகப் பார்த்து எதையாவது வாங்கிச்சென்றாலும் ‘இதுக்கு இவ்ளோ விலை அதிகம்’ என்பாள் முகத்திலடித்தாற்போல். ‘கண்டபடி செலவு பண்றே நீ !’

‘இருக்கட்டும் செல்வி, கொஞ்சம் காஸ்ட்லியாதான் ஒரு ட்ரெஸ் போடக்கூடாதா?’ கொஞ்சலாகக் கேட்பான் அவன்.

‘அஸ்கு புஸ்கு! சம்பாதிக்கிறது உன் புருஷனா? என் புருஷனா?’, என்று அதற்கும் ஒரு கேலியான பதில் வரும்.

இப்படி அவன் வாங்கித் தந்த, அல்லது வாங்கி வந்த எந்தப் பரிசையும் செல்வி கடைசிவரை வெளிப்படையாக ஏற்று அங்கீகரித்ததே கிடையாது. ஒவ்வொருமுறையும் விலை அதிகம், அல்லது இந்த நிறம் எனக்கு எடுப்பாக இருக்காது, அல்லது இதேமாதிரி டிஸைன் என்னிடம் ஏற்கெனவே இருக்கிறது, அல்லது இது எனக்குப் பொருத்தமாக இல்லை என்றெல்லாம்தான் நொட்டைப் பேச்சு.

உண்மையில் அரவிந்தன் வாங்கிவருவது எதுவானாலும் செல்விக்கு அது பிரியம்தான். பீரோவின் உள் அடுக்கு ஒன்றில் அவன் அவளுக்கு வாங்கித் தந்திருக்கும் பரிசுகள் எல்லாவற்றையும் பத்திரமாகச் சேர்த்துவைத்திருக்கிறாள். எப்போதாவது அதிலிருந்து ஒரு பச்சை சுரிதாரையோ இதய வடிவத்தில் புறாக்கள் பறக்கும் காதணியையோ அவள் எடுத்து அணியும்போது, அதை அவன் கவனிக்கவேண்டும், எப்போது, எந்த சந்தர்ப்பத்தில் அதைப் பரிசளித்தோம் என்று நினைவுகூரவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பாள் செல்வி.

இந்த விஷயத்தில் அரவிந்தன் ஒரு மகா மக்கு. அலுவல் விவகாரங்களில் தொடங்கி அடுத்த வீட்டுப் புதுச் சிநேகிதர்வரை எல்லாவற்றையும் சடார்சடாரென்று மறந்துவிடுவான்.

ஆகவே, அவன் வாங்கிக் கொடுத்த புடவையையோ, அல்லது நகையையோ அணிந்துகொண்டு செல்வி அவன்முன்னே வந்தாலும்கூட, கண்டிப்பாக அவனுக்கு அந்தப் பரிசை நினைவிருக்காது. முகத்தில் எந்த விசேஷ உணர்வையும் காண்பிக்காமல் அவன்பாட்டுக்குத் தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பான். இந்த அலட்சியம், அல்லது கவனக்குறைவு செல்விக்கு அரவிந்தனிடம் பிடிக்காத விஷயங்களில் ஒன்று.

சிறிது நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு ‘இந்த ட்ரெஸ் எப்படி இருக்கு?’ என்று நேரடியாகவே கேட்டுவிடுவாள் அவள். அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்தவன்போல் அவளைப் புதிதாகப் பார்த்துவிட்டு ‘ஓ, பிரமாதம்’ என்பதுபோல் ஏதேனும் சம்பிரதாயமாகச் சொல்வான் அரவிந்தன். ‘ஏது? புதுசா வாங்கினியா?’

அவ்வளவுதான். செல்வியின் முகத்தில் மிளகாய் வெடிக்கத் தொடங்கிவிடும். அவனைக் கண்டபடி திட்டிவிட்டுப் போய்விடுவாள். எதற்காக இந்தக் கோபம் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பான் அரவிந்தன்.

மனத்தில் உண்மையான அன்போடு அந்தப் பரிசைத் தேடித் தேர்ந்தெடுத்திருந்தால் கண்டிப்பாக அது மறக்காது என்பது அவளுடைய கட்சி. சும்மா கடமைக்காகக் கண்ணில் படுகிற எதையாவது வாங்கிப் பரிசளித்துவிடுகிற அலட்சியம் பணக் கொழுப்பின் அடையாளம் என்பாள்.

இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டபிறகு செல்விக்கு எது வாங்குவதானாலும் அதீத கவனத்துடன் இருக்கிறான் அரவிந்தன். ஆடைகள், வீட்டு உபகரணங்கள், நகைகள் என்று வழக்கமான பொருள்கள் எதையும் வாங்குவதில்லை, பொதுவாக வீட்டில் நாம் பயன்படுத்தாத, ஷோ கேஸில் வைத்துப் பாதுகாப்பதுபோன்ற, குறிப்பாக, பார்த்ததும் பரிசுப்பொருள் என்று அடையாளம் தெரிகிறமாதிரியான அலங்கார வஸ்துகளைதான் வாங்கவேண்டும், அதில் ஒரு துளி வித்தியாசம் தெரியவேண்டும், அதன்மீது அன்பையோ அக்கறையையோ நிரந்தரமாக ஏற்றிவைத்துக்கொள்ளமுடிகிற தனித்துவம் வேண்டும், இதையெல்லாம்விட முக்கியமாக, அவள் வற்புறுத்திக் கேட்டால்கூட விலையைச் சொல்லக்கூடாது.

கடந்த அரை மணி நேரமாக, அந்தமாதிரியான ஒரு பரிசைதான் இந்த அழுக்கு வீதிகளில் தேடிக்கொண்டிருக்கிறான் அரவிந்தன். சுற்றிச் சுற்றி அதே சிற்சில பொருள்கள்தான் கண்ணில் படுகின்றன. அச்சில் வார்த்தெடுத்த பொம்மைகள்போல் ஒரேமாதிரியான பரபரப்பு வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களிடையே இதுபோன்ற புதுமையான விஷயங்களை எதிர்பார்க்கமுடியாதுபோல.

நெடுநேரம் சுற்றியலைந்தபின், வீட்டுக் கதவில் மாட்டுவதுபோன்ற ஓர் அழகிய பிளாஸ்டிக் தோரணத்தைப் பார்த்தான் அரவிந்தன். ஒரு பக்கம் ஸ்வஸ்திக் சின்னம் மறுபக்கம் சமஸ்க்ருத ‘ஓம்’ என்று பார்ப்பதற்கு ஜோராக இருந்தது. நூற்றைம்பது ரூபாயோ என்னவோ விலை, பேரம் பேசினால் இன்னும்கூடக் குறையலாம்.

அதே கடையில் சின்னச் சின்னதாகச் செருப்புகள் விற்றார்கள். நமது உள்ளங்கையில் பாதியளவுகூட நிரம்பாத குட்டியூண்டு செருப்புகள். நிஜச் செருப்பைப்போலவே அதில் வார் தைத்து ஒரு நுணுக்கமான பூ வடிவம்கூட செய்திருந்தார்கள்.

தோரணம் வாங்கலாமா, குட்டிச் செருப்பு வாங்கலாமா என்று அரவிந்தனால் முடிவுசெய்யமுடியவில்லை. இரண்டையும் வாங்கிவிடலாம் என்றால் அவற்றைச் சேர்த்துப் பார்ப்பதில் ஏதோ அபத்தம் தொனித்தது.

கடைக்காரன் முறைத்துப் பார்க்குமளவு நெடுநேரம் யோசித்தபின், அந்தத் தோரணத்தைமட்டும் பரிசுப் பொட்டலமாகக் கட்டச்சொல்லி வாங்கிக்கொண்டான் அரவிந்தன். பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது நன்கு இருட்டியிருந்தது.

உள்ளே இருக்கிற பொருளைவிட அந்தப் பரிசுப் பார்சல் ரொம்ப அழகாக இருந்தது. பிளாஸ்டிக் தோரணத்தை மடித்து ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் இட்டுச் சுற்றிலும் பளபளப்புக் காகிதம் சுழற்றி சாக்லெட்போல் இருபுறமும் அலங்காரப் பாவாடை விரித்து அற்புதமாகச் செய்திருந்தான் அந்தக் கடைக்காரன். இதற்காகவே அவனுக்குக் கூடுதல் விலை கொடுக்கலாம் என்று தோன்றியது அரவிந்தனுக்கு.

ஆனால், இந்தப் பரிசு செல்விக்குப் பிடிக்குமா என்று அவனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. பிடிக்கலாம், பிடிக்காமலும்போகலாம். யாருக்குத் தெரியும்?

‘பெண்களுக்குப் பிடிக்கும்படி நடந்துகொள்வது ரொம்பக் கஷ்டம்’ என்று அரவிந்தனுடைய முன்னாள் முதலாளி ஒருவர் அடிக்கடி சொல்வார். ‘ஏன்னா, தங்களுக்கு என்ன பிடிக்கும்-ன்னு அவங்களுக்கே உறுதியாத் தெரியாது. வெதர்மாதிரி அவங்க விருப்பங்களும் அப்பப்ப மாறிகிட்டே இருக்கும்!’

அவர் சும்மா நகைச்சுவையாகச் சொன்னாரா அல்லது, நிஜமாகவே ஆழ்ந்து சிந்தித்துச் சொன்ன தத்துவம்தானா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு சிறிய / பெரிய கம்பெனிக் கூட்டத்திலும் இந்தப் புளித்த விஷயத்தைச் சலிக்காமல் சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.

அதன்பின்னர், இணைய அரட்டையில் அறிமுகமான அமெரிக்கத் தோழி ஒருத்தி அரவிந்தனுக்கு ஒரு புதுமையான யோசனை சொன்னாள். ‘உன் மனைவியைப் பிரிஞ்சிருக்கும்போது அடிக்கடி அவளை நினைச்சுப்பியா?’

‘கண்டிப்பா!’

‘நான் கேட்கிறது வெளியூர் போகும்போதுமட்டுமில்லை’ என்று எச்சரித்தாள் அவள். ‘உள்ளூர்லயே, நீ ஆஃபீஸ்ல, செல்வி வீட்லன்னு இருக்கும்போது எப்பவாச்சும் ’அடடா, இப்போ அவ இங்கே இருந்தா நல்லா இருக்குமே’ன்னு யோசிச்சிருக்கியா? உண்மையைச் சொல்லு!’

அரவிந்தன் கொஞ்சம் யோசித்துவிட்டு ‘அடிக்கடி-ன்னு சொல்லமுடியாது. ஆனா அப்பப்போ நினைச்சுப்பேன். உடனே செல்வி இங்கே இருக்கணும்-ன்னெல்லாம் தோணாது. ஆனா அவகிட்டே பேசணும்போல இருக்கும். முடிஞ்சா ஃபோன் செய்வேன்.’

‘நல்ல விஷயம். ஆனா நீ அப்படி ஃபோன் செய்யும்போது அவ எதுனா வேலையில பிஸியா இருக்கலாம். இல்லையா? அப்போ உன்னோட ஃபோன் அழைப்பு அவளுக்கு எரிச்சலூட்டலாம்தானே?’

அவள் எங்கே வருகிறாள் என்று புரியவில்லை. ஆனால் அவளுடைய வாதங்களில் நியாயம் இருப்பது தெரிந்தது. ஆகவே ‘ஆமாம்’, என்று பொறுமையாகப் பதில் தட்டினான் அரவிந்தன். ‘அது சரி, இதெல்லாம் எதுக்கு விசாரிக்கறீங்க?’

‘உன் மனைவி பிறந்த நாளுக்கு ஒரு நல்ல கிஃப்ட் தரணும், அதுக்கு ஒரு ஐடியா கொடு-ன்னு கேட்டியே?’

‘ஆமாம், அதுக்கென்ன இப்போ?’

‘அதுக்காகதான் இதையெல்லாம் விசாரிச்சேன்’ என்றாள் அவள். ‘இனிமே ஆஃபீஸ்லயோ, வெளியவோ இருக்கும்போது செல்வி ஞாபகம் வந்தா, ஃபோனை எடுக்காதே, ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து மேலே தேதி, நேரம் எழுதிக்கோ. அப்புறம் இந்தச் சமயத்தில செல்வியை ஏன் நினைச்சே, எப்படி நினைச்சே, என்ன நினைச்சே, என்ன கற்பனை செஞ்சே-ன்னெல்லாம் எழுதிவெச்சுக்கோ. கூச்சப்படாதே, அநாவசியமாப் பாசாங்கு செய்யாதே, செல்விகிட்டே நேர்ல பேசறதா நினைச்சுகிட்டு உன் மனசில தோணறது எல்லாத்தையும் பளிச்ன்னு எழுதிடு.’

‘அட, இதென்ன புது விளையாட்டா இருக்கு?’ சிரிப்புடன் கேட்டான் அரவிந்தன். ‘இதெல்லாம் என்னத்துக்கு?’

‘மக்கு, இதுதான் நீ செல்விக்குத் தரப்போற பரிசு’ என்றாள் அவள். ‘இப்படி ஒரு வாரத்துக்குத் துண்டு துண்டா நிறைய குறிப்பு எழுதி வை, அப்புறம் அதையெல்லாம் தொகுத்து அவ பர்த்டே அன்னிக்கு அவளுக்குக் கொடு. டெய்லி நீ அவளை எவ்ளோ மிஸ் பண்றே-ன்னு புரிஞ்சுப்பா.’

அவள் சொன்னதைக் கேட்டதும் அரவிந்தனுக்கு நெகிழ்ச்சி வரவில்லை, சிரிப்புதான் அடக்கமாட்டாமல் பொங்கிவந்தது. ‘ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு ஜோக் அடிக்கறீங்க’ என்று அவளைக் கிண்டலடித்தான். அவள் பதில் பேசவில்லை.

அடுத்து வந்த செல்வியின் பிறந்த நாளைக்கு அரவிந்தன் என்ன பரிசு வாங்கினான் என்று சரியாக நினைவில்லை. ஆனால் அப்போது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றிய அந்தக் குறிப்பெழுதும் யோசனையை ஒருமுறை நிஜமாகவே செயல்படுத்திப் பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றியது. ஒருவேளை, செல்வி அவனிடம் எதிர்பார்க்கிற பரிசு அதுதானா?

இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. இன்றைக்குத் தொடங்கி, செல்விக்கு அதுபோன்ற நினைவுக் குறிப்புகள் எழுத ஆரம்பித்தால் என்ன?

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (25-Oct-15, 10:21 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 30

மேலே