முறையான தர்மத்தால் முற்றிலுமாய் வளம்பெருகும் ---- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தர்மத்தின் வாழ்வுதனை தாழ்த்திடுதல் நன்றன்று தரணி மீதில்
கர்மத்தின் வினைபோக்க காசினியில் நாமெல்லாம் கலந்தே நின்று
சொர்க்கத்தின் நிலைபெறவே சோர்ந்திடாது தர்மத்தால் சோகம் தீர்த்தல்
வர்க்கத்தின் தர்மங்கள் வாரிசுகள் வளமையுடன் வாழ வைக்கும் .
பாரிசெய்த தர்மமது பாரோர்க்குக் காட்டாக பறையும் சாற்ற
காரிசெய்த தர்மமது காண்போர்க்குத் தெளிவானக் காட்சி போல
ஓரிசெய்த தர்மமது ஒவ்வொன்று முள்ளத்தில் ஒன்றி நிற்க
மாரியென உலகுக்கு மங்காத செல்வத்தை மலராய்த் தூவும் .
காலத்தில் செய்கின்ற காரியமே தர்மமென கடவுள் சொல்ல
ஞாலத்தில் நல்லவர்கள் ஞாயிற்றின் கதிரொளியாய் ஞானி யாகி
பாலத்தை தானமைத்து பக்கத்தில் தர்மத்தை பலமாய்க் கொள்ள
சீலத்தில் சிறந்ததுவே சீர்த்தமிகு தர்மத்தை சிந்தை கொள்வோம் .
கர்ணனது தர்மத்தை காப்பியங்கள் சொல்லிடுமே காலம் வென்று
வர்ணனைகள் வேண்டாமே வாய்த்ததொரு வளமையினால் வறுமை நீங்க
கர்ணனென கொடைசெய்வீர் காவியங்கள் உமைவாழ்த்தும் கருத்தும் சொன்னேன் .
மர்மமது தர்மத்தால் மாறிவிடும் சமுதாயம் மனத்தில் கொள்க .
வறியார்க்குத் தர்மத்தை வழங்கிடுதல் ஈதலேன்றே வகையைச் சொல்வேன் .
தெறிக்கின்ற அனலுமிங்கு தெளிவான ஊற்றாகத் தெளிந்து நின்று
நெறியான வழிசொல்லும் நேர்த்தியுடன் போற்றுகின்ற நெறிகள் யாவும்
அறிவான அவ்வழியில் அன்புபொங்க செல்லுதலே அறத்தை தேட .
முறையான தர்மத்தால் முற்றிலுமாய் வளம்பெருகும் முழுமை பெற்றே
நிறைவான போக்கிற்கே நிச்சியமாய் கிடைத்துவிடும் நிம்மதி யாவும்
கறையற்ற வாழ்வுதனை காசினியில் பெற்றிடவே காப்பீர் தர்மம் .
மறையோதும் ஞானியரும் மகத்துவமாம் தர்மத்தை மனத்தில் கொள்க .!!!
வாய்பாடு :-
( காய் காய் காய் காய் மா தேமா )