பாரதிதாசன்

1891 ல்
இலட்சனமாய்ப் பிறந்து
இலக்கோடு
இலட்சங்கள் சேர்க்கவந்த
இலட்சாதிபதி அல்ல நீ

இலட்சுமிக்குப்பிறந்து
இலக்கோடு
இலக்கணத்தைக் கோர்க்கவந்த
இலட்சியவாதி நீ

பாண்டியன் பரிசை
நீ படைத்தாய்
பாண்டிச்சேரிக்குப் பரிசாக
நீ கிடைத்தாய்

பாரதிதாசனாக மண்ணில் பிறந்தாய்
பார் அறி நேசனாக விண்ணில் பறந்தாய்

பாரதி, பெரியார், அண்ணா
என மும்முகம்
கொண்டது உன்அகம்

கவிதை , கதை , அரசியல்
எனப் பன்முகம்
கொண்டது உன்முகம்

இந்தத் தமிழ்க் ( க )விதை
விதைக்கப்பட்டது 1891 சித்திரையில்
புதைக்கப்பட்டது 1964 சித்திரையில்
அது முத்திரையானதும்
நித்திரையானதும் சித்திரையில்

அவரைத் தழுவிய மரணம்
அரண்டு கண்டது ஆற்றமுடியா ரணம்
அவர் தமிழை தழுவ நினைத்தபோது

இந்தக் கவிதை முத்துரத்தினத்தின்
இயற்பெயர்தான் கனக சுப்புரத்தினம்

பூமியிலிருந்து தமிழ் அகத்திற்கு
கிடைத்த அறிவுப் புதையல் நீ
புதுவையிலிருந்து தமிழகத்திற்கு
கிடைத்த அமுதப் படையல் நீ

ஹிட்லர் மீசையைக் குறைத்தான்
தரைக்களத்தை சமர்க்களமாக்கி
உயிர் எடுக்க
ஆசை நிறைத்தான்

நீயோ மீசை குறைத்தாய்
தமிழ்க்களத்தை அமர்க்களமாக்கிப்
பெயர் எடுக்கவல்லவா
ஆசை நிறைத்தாய்

பாரதியின் நேசனானாய்
அன்பினாலே பார்போற்றும்
பாரதிதாசனானாய்

மக்கள் மன்றம் சென்று
மக்கள் மனம் வென்று
சட்டமன்றம் சென்று
சாதித்த சாகித்ய அகாடமி நீ

உன் தமிழ்ச் சொல்வீட்டிற்குள்
அமரமுடியாத நான்
மகிழ்ச்சி கொண்டேன்
உன் கல்வீட்டிற்குள்
அமர்ந்தபோது ..

நீ பேனாவில் மை ஊற்றி எழுதவில்லை
பொய் ஊற்றி எழுதவில்லை
நெய் ஊற்றி எழுதினாயோ ?
இன்னும் மணக்க வாழ்கிறது
உன் எழுத்து
புரட்சிக்கவியே
உன்னை நினைக்கத் தாழ்கிறது
என் கழுத்து ...

எழுதியவர் : குமார் (25-Oct-15, 10:27 pm)
Tanglish : bharathidasan
பார்வை : 451

மேலே