அம்மாவின் பிறந்தநாள்

கடிகார முள் இன்னும்
பன்னிரெண்டை தொடவில்லை..
நாட்ப்பத்தைந்து வயதினை
எட்ட இருக்கும்
என் அம்மாவின் பிறந்தநாளின்
அந்த முதல் நிமிடத்தை கொண்டாட...,
காத்திருந்தேன் நான்....
வீட்டில் அனைவரும் அயர்ந்து உறங்க..
நான் மட்டும் விழித்திருந்தேன்....
இரவின் நீளம் இன்று தான்
புரிகிறது எனக்கு...
தூங்கி கொண்டே நகர்கின்றன
கடிகார முட்களும்..
பன்னிரண்டு மணியாக
இன்னும் சில மணித்துளிகளே
எஞ்சி இருக்க,
இருட்டில் நகரும் பூனையைபோல
மெல்ல நகர்ந்து சென்று..
என் அண்ணனையும்
அக்காளையும் எழுப்பினேன்..
எந்தவித சத்தமும் இன்றி
ஏற்பாடுகள் நடந்தன...
ஒரு வழியாக,
கடிகாரத்தின் இரு முட்களும்
ஒன்றை ஒன்று தழுவி
மணி பன்னிரண்டு எனக் காட்டியது.
பரபரப்பாய் கேக்கினை
அலங்கரித்தோம் மெழுகுவர்த்திகளால்....
இரவின் இருளில்,
மெழுகுவர்த்தி பிரகாசிக்க,
அதில் தேவதையாய் தெரிந்தால்
என் அம்மா...!
தூக்கத்தில் இருந்தே எழுந்த
அவள் முகத்தில்
இதுவரை நாங்கள் கண்டிராத இன்பம்...
முதல் பிறந்தநாளை கொண்டாடும்
மழழையைப்போல
அவள் மகிழ்வதைக்கண்டு,
பெற்றவள் இன்று சிறுபிள்ளையாய் மாற,
பிள்ளைகள் நாங்கள் தாய்மையை உணர்ந்தோம்...!

எழுதியவர் : காயத்ரிசேகர் (26-Oct-15, 8:08 am)
பார்வை : 133

மேலே