எப்படிச் சொல்ல என் கவிதையை
எப்படிச் சொல்ல என் கவிதையை ?
கைலாசமூர்த்தியின் வெள்ளைப் பனிமலையில்
மெல்ல...மிக மெல்ல உருகிவரும்
ஒற்றைப் பனித்துளி ஒற்றி எடுத்து
என் கவிதை சொல்லவா ?
அவன் நெற்றிக் கண்ணில் பற்றிய நெருப்பு
சுடரொளிப் பொறியைப் பற்றிப் பிடித்து
என் கவிதை சொல்லவா ?
அன்னை உமையவள் திருமுலைப் பால்பருகி
இனித்த நாவால்
என் கவிதை சொல்லவா ?
ஆற்றங்கரையில் அமர்ந்த பிள்ளையை
தொட்டுதெறிக்கும் ஒற்றை நீர்த்துளி
ஒற்றி எடுத்து
என் கவிதை சொல்லவா ?
உலகம் சுற்ற முருகன் ஏறிய
மயில் சிறகில் இருந்து விடுபட்ட
இறகு காற்றில் எழுதிய கவிதையை
நான் சொல்லவா ?
கோபம் கோபமாய் மலையில் ஏறிய
முருகனின் மேனியில் கொட்டிய வேர்வையை
தொட்டு எடுத்து
என் கவிதை சொல்லவா ?
வள்ளி தெய்வானைக்கு வழிந்த ஆனந்த
கண்ணீர்த்துளிகளை கையில் எடுத்து
என் கவிதை சொல்லவா ?
பவுர்ணமி நாளில் பால் வெளிச்ச நிலவில்
நட்சத்திர எழுத்துக்கள் கொண்டு
என் கவிதை சொல்லவா ?
நாற்று மடலில் காற்றுத் தடவ
நாணல் தட்ட என் கோணல் வரிசையில்
என் கவிதை சொல்லவா ?
மண்ணைத் தோண்டிய ஊற்றுச் சுரப்பில்
மேல்நோக்கிப் பெய்த மழையின்
துளிகள் எடுத்து
என் கவிதை சொல்லவா ?
கால்பட கால்பட கண்பட சுகம்தரும்
மானகிரி மண்ணை எடுத்து
மந்திரம் தொடுத்து
என் கவிதை சொல்லவா ?
நிலம், நீர், நெருப்பு, வானம், காற்று
ஐந்தும் குழைத்து அழகாய் வளைத்து
நைந்து விடாமல் நனைத்து எடுத்து
பிய்ந்து விடாமல் பிரித்து எடுத்து
என் கவிதை சொல்லவா ?
எப்படிச் சொல்ல என் கவிதையை ?