விடியும் வரை பேய் கனவு

இரத்தம் கசியும் இரவு ஒன்று
அதோ அவள்
அவள் என் அருகே. .மிக அருகே
சிமிட்டாத கண்களே கத்திமுனை போல்
கருமையே உருவமாய் உலவுகின்றாள். .

என் அறையெங்கும் அடங்காமல் வீசும்
சவ ஊர்வலத்தின் ஊதுவர்த்தி வாசமும்
சவ்வாது கலந்த ரோஜாவின் நெடியும்
சரியும்படி தலைசுற்றலை தரும் நேரம்

நேரம் சரியாக மூன்று
இன்னும் அவள் அங்கும் இங்கும்
எதையோ ஆவேசமாய் தேடுகிறாள்
தரையில் தேடியது போதாதென்று
தடதடவென சுவற்றில் பரபரப்பாய் தாவுகின்றாள்

ஒருவேளை இருளின் கலவரமோ இது ??
ஓரமாய் தொங்கிய என்
ஒய்யார புகைப்படம் ஒன்று
ஒரே நொடியில் நொறுங்கிட

மொத்த நடுக்கமும் நெஞ்சில் தெறிக்க
கட்டுண்டதாய் தவித்த கைகளை
நரம்புகள் அறுபட வலிகொண்டு விளக்கி
தட்டுத் தடவி சொடுக்கினேன் மின்விளக்கை

தரையில் சிதறிய கண்ணாடி துண்டுகள் இல்லை
அவளும் இல்லை. . அவள் தடமும் இல்லை. . .
கண்களை கசக்கினேன்
கட்டிலும் கூட வியர்வை வழிய

கண்டிஷனர் குளிர் மெல்ல
காதினுள் கூச்சமூட்ட. . முடிகள் சிலிர்த்தது. .
கண்டிப்பாய் சொல்லிக்கொண்டேன்
கனவே இது. .
இது கனவாக இருத்தலே நன்று

பளிங்கு தரையோ பனிப்பாறையோ
பாதம் தரையில் உறைந்தாலும் சரி
பயம் . . பயம் . . பயம் . .
படபடக்க சென்றேன் கதவருகே
பூட்டாத கதவின் சாவி. .இப்போது
புன்னகையோடு தொங்கிய என்
புகைப்படத்தின் ஆணியில் . .

சிதையில் சிதையாத
ஆன்மாவின் அடையாளமாய்
அதன்மேல்
போட்ட மாலையை தாங்கியபடி. . .

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (27-Oct-15, 4:13 pm)
பார்வை : 688

மேலே