என்று தீரும் இந்தப் பாடு

அரிசியில்லை பருப்புமில்லை
அடுப்பெரிக்க எதுவுமில்லை
சோத்துப்பானை கொதிக்க வைக்க
சேத்து வைச்சது எதுவுமில்லை!

குளமான கண்களுடன்
குத்த வைச்சு பாக்கையிலே
குப்பையிலே எச்சில் இலை
சோத்துடனே சிரிக்கிறதே!

மிச்சமான உணவுதனை
துச்சமாக எறிபவரே
பசிக்கின்ற வயிற்றுக்கு
பகிர்ந்து தர மாட்டீரோ?

கச்சையாக உடுத்திக் கொள்ள
கந்தை கூட மிச்சமில்லை
மானத்தை மறைத்திடவும்
மாத்திடவும் துணியில்லை!

உள்ளம் நொந்து தூரத்திலே
உத்துப் பார்க்கும் வேளையிலே
பக்கத்து மாளிகையில்
பட்டாடை ஜன்னலிலே!

உயிரில்லா ஜன்னலுக்கு
உடுத்த ஆடை கொடுத்தவரே
உயிருள்ள ஜீவனுக்கு
உடுத்த ஆடை கொடுப்பீரோ?

ஓட்டை வீட்டுக் குடிசையிலே
ஒழுகி விழும் மழையினிலே
ஒதுங்கிடவும் இடமில்லை
ஓடிடவும் மனமில்லை!

பெருக்கெடுக்கும் கண்ணீரைத்
துடைத்துக் கொண்டு பார்க்கையிலே
பக்கத்துக்கு பால்கனியில்
வாலாட்டும் நாய்க்குட்டி!

ஐந்தறிவை ஆதரிக்கும்
ஆறறிவுக்காரர்களே!
ஆறறிவுக்காரரையும்
ஆதரித்தால் தப்பென்ன?

பாலுக்கழும் ஒரு பிள்ளை
சோற்றுக்கழும் மறுபிள்ளை
சேலை ஒர முடிச்சினிலே
சேத்து வச்ச பத்து ரூபா

தண்ணி பாலும் கூழும் ஊற்றி
கதறும் பிள்ளை பசியாற்ற
கண்ணெதிரே நின்றதய்யா
கட்டவுட்டும் பாலாக!

வயிறில்லா கற்சிலைக்கு
பாலும் பழமும் சேர்ப்பவரே
வாடுகின்ற உயிர்ச் சிலையின்
வயிறைக் கொஞ்சம் நினைப்பீரோ?

பத்து வரை படிக்க வைக்க
பணமும் இல்லை நகையும் இல்லை
பத்திரமும் எனக்கு இல்லை
பத்து விரல்தான் உண்டெமக்கு!

பத்தெழுத்து தெரிந்திடத்தான்
பள்ளியிலே சேர்த்து விட்டால்
பள்ளிக்கூடம் ஒழுகுதென்று
பாதியிலே வந்துவிட்டு

ஏக்கத்திலே ஒரு கேள்வி
என் பிள்ளை கேட்டும்விட்டாள்
கல்வியிலே பாகுபாடு
நாட்டுக்கொரு சாபக்கேடுதானே?

நோயென்று பிள்ளை வந்து
நொடிந்து விழும் வேளையிலே
அரசாங்க ஆஸ்பத்திரிக்கு
அவசரமாய்க் கொண்டு சென்றால்

மருத்துவர் யாருமில்லை
மருந்துக்கும் பயனுமில்லை
தவிக்கும் பிள்ளை துடிதுடிக்க
தனியாரிடம் கொண்டு சென்றால்

கட்டுக் கட்டாய் பணம் கேட்க
பாவி நான் கட்டையாய் ஆகிவிட்டேன்
பணம் தின்னும் முதலைகளே
உயிர் விலையை உணர்வீரோ?

ஏழை நாடு என்றுரைப்பார்
எதுவுமில்லை என்றுரைப்பார்
ஏழை வயிற்றுக்கொரு கோடுமிட்டு
வறுமைக்கோடு என்றுரைப்பார்!

கறுப்புப் பணம் சேர்த்து வைப்பார்
கட்டித் தங்கம் மறைத்து வைப்பார்
அம்பானி பலரும் உண்டு
ஆயிரம் டாடாவும் இங்குண்டு

ஆனாலும் ஏழையவன்
அரைக்கஞ்சிக்கே அலைவதுண்டு
என்ன ஒரு முரண்பாடு
ஏனிந்த குறைபாடு?

மனமுடைந்த எங்களுக்கு
மருந்திடவே இங்கு யாரு?
ஏழை மக்கள் எங்களுக்கு
என்று தீரும் இந்த பாடு?

Dr ரத்னமாலா புரூஸ்

எழுதியவர் : முனைவர் ரத்னமாலா புரூஸ் (31-Oct-15, 9:04 pm)
சேர்த்தது : Dr ரத்னமாலா புரூஸ்
பார்வை : 56

மேலே