மன்மதச் சிலை

’சிறைச்சாலை’ படத்தில் வருகிற ‘செம்பூவே பூவே’ பாட்டைக் கேட்டிருப்பீர்கள். அதில் அறிவுமதி எழுதிய ஒரு வரி:

படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ

இந்த வரிக்கு நேரடி அர்த்தம் எல்லோருக்கும் தெரியும். மன்மதன் வடித்த சிலை இந்தப் பெண், அவளது உடலையே படையாகக் கொண்டு நடக்கிறாள், ஒவ்வோர் அசைவாலும் தன் காதலனைத் ’தாக்கு’கிறாள்.

ஆனால், இந்த வரிகளுக்கு வேறோர் அர்த்தமும் இருக்கக்கூடுமோ என்று இன்றைய #365paa பதிவு எழுதும்போது தோன்றியது.

தமிழில் ’சிலை’ என்ற சொல்லுக்கு ‘வில்’ என்ற பொருளும் உள்ளது. மன்மதன் சிலை என்றால், மன்மதன் கையில் உள்ள கரும்பு வில்.

மன்மதனும் அவனுடைய கரும்பு வில்லும் தமிழ்த் திரையுலகில் ரொம்பப் பிரபலம். ஹீரோவும் ஹீரோயினும் சந்திக்கிறபோது மன்மதன் தன்னுடைய கரும்பு வில்லில் மலர் அம்புகளை (’மலர்க் கணைகளை’ என்று சொன்னால் இலக்கியத்துவம் :>) வீசுவான். அவர்களும் காதல் வயப்பட்டு, தயாரிப்பாளரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப உள்ளூரிலோ வெளியூரிலோ வெளிநாட்டில் டூயட் பாடச் செல்வார்கள்.

’சிலை’க்கு வில் என்கிற அர்த்தத்தை இங்கே பொருத்தி யோசித்தால், இந்த வரி இன்னும் அழகாகிவிடுகிறது: மன்மதனின் ஆயுதமாக அவன் கையில் உள்ள வில், இந்தப் பெண்ணாக உருவம் எடுத்து நடக்கிறது!

இந்தச் சுவாரஸ்யமான கோணம் தோன்றியபின், ‘மன்மதச் சிலை’ என்ற வார்த்தையை இதற்குமுன் வேறு யாரேனும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்று இணையத்தில் தேடினேன். கச்சிதமாக இதே அர்த்தத்தில் திருப்புகழ் பாட்டு ஒன்று கிடைத்தது:

மன்மத சிலை அதுவென, மகபதி தனுவென மதி திலதமும் வதி நுதன் மேலும்…

ஆக, அருணகிரிநாதரின் ‘மன்மத சிலை’ வில்லைதான் குறிக்கிறது என்று புரிகிறது. அறிவுமதி எழுதியது எந்த அர்த்தத்தில்? அவருக்கு அணுக்கமானவர்கள் யாராவது இங்கே இருந்தால் கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள் :)

அப்புறம், இன்னொரு விஷயம். அருணகிரிநாதர் ‘மன்மத சிலை’ என்று எழுதுகிறார், அறிவுமதி ‘மன்மதச் சிலை’ என்கிறார். புணர்ச்சி விதிப்படி இவற்றில் எது சரி?

யோசித்தபோது ‘மன்மதச் சிலை’தான் சரியாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. மன்மதன் விஷயத்தில் ‘இச்’ இல்லாவிட்டால் எப்படி? ;)

***

என். சொக்கன் …

22 11 2011

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன் (1-Nov-15, 11:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 94

மேலே