எனக்குள் ஒருவன்
எனக்குள் ஒருவன்...
15 / 06 / 2024
எனக்குள் ஒருவன் இருக்கின்றான்
உணர்ச்சிப் பிழம்பாய் ஜொலிக்கின்றான்
உண்மையின் சொரூபமாய் நிலைக்கின்றான்
திண்மையாய் எனைவழி நடத்துகின்றான்
குரங்காய் குதியாட்டம் போடுகின்றான்
கும்பிடும் தெய்வமாய் இருக்கின்றான்
வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில்
ஆடாது அசையாது நிற்கின்றான்
குரல் கொடுத்து எப்போதும்
குரல் வளையை நெரிக்கின்றான்
அவன் குரல் கேட்டு நடந்திட்டால்
ஆபத்தில் காப்பாற்ற கைக்கொடுக்கின்றான்
வெளிவேஷம் போட்டு ஏமாற்றினால்
வெட்டவெளிச்சம் ஆக்குகின்றான்.
பிறப்பு முதல் இறப்பு வரை
எனக்குள் இருப்பவன் யாரென்றும்
எங்கிருந்து வந்தான்? இறந்தபின்
எங்கே போவான்? என்பதிங்கே மர்மமே...!
எனக்குள் இருப்பவன் ஒருவன்
அடுத்தவன் உள்ளே வேறொருவன்
இப்படித்தானே கோடி கோடியாய்
ஒவ்வொருவனும் தனி ஒருவனே
ஆச்சரியம்தான் அதிசயம்தான்.
பிறப்புக்கு முன்னும் சொந்தமில்லை
இறப்புக்கு பின்னும் சொந்தமில்லை
உயிரோடு இருக்கும்வரை உறவுதான்
உயிர்போன பின்னே துறவுதான்.