இப்பிறவி போதாது

தனது வாகனத்தை
எனது பேரனின் மிதிவண்டியருகே நிறுத்திவிட்டு
எனக்கு மட்டும் கேட்கும்படி
மிக சத்தமாய்
கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறான்
கையில் கயிற்றோடு எமன்.

அழுகையை ஒலிபரப்ப
காற்று தன்னை
திடப்படுத்திக்கொண்டிருக்கிறது.

என் கடைசி சுவாசத்திற்கான ஆக்சிசன்
என் அறையை வந்தடைந்துவிட்டது.

இந்த விதவையின்
இறுதி ஊர்வலத்தில் தூவ
பூக்கள் பறிக்கப்பட்டு - ஒரு
பூச்செடி விதவை ஆக்கப்பட்டிருக்கும்.

இதுவே தருணம் வந்துவிடுவென
செவியோரம் இருகுரல்.
ஓட்டம் பழகிய
மகள்வழி பேரன் முகமும்
மறைந்த என் கணவன் முகமும்
வந்து வந்து மறைகிறது.

இதோ தயாராகிவிட்டது என் உயிர்
வேறொரு பயணத்திற்கு.
என் கணவனது நினைவுகளை மட்டும்
பெரிய பொதியாய் கட்டிக்கொண்டு.

சத்தமிடாமல்
சற்று பொறு எமனே

அடுத்த அறையில் உறவிலிருக்கும்
என் மகனது
உச்சத்தில் என் உயிர் பறி.

நினைவுப் பொதியோடு
நீந்திக் கரு சேர்வதே என் மறுவிதி

போதவில்லை இவ்வோர்பிறவி
என்னவனது அன்பில் திளைக்க ...
வேண்டும் இன்னோர்பிறவி
அவனது காதலில் என் உயிர் கரைக்க..

எழுதியவர் : மு.ஜெகன் (3-Nov-15, 4:11 am)
Tanglish : ippravi pothaathu
பார்வை : 137

மேலே