ஆசிய பசிபிக் வர்த்தகம், முதலீடு வரத்தில் சீனாவுக்கு வெகு பின்னால் இந்தியா ஐநா

தி ஹிந்து - வணிகம் - ஐநா - Published: November 3, 2015 19:35
--------------------------------------------------------------------------------------------
ஆசிய பசிபிக் வர்த்தகம் மற்றும் முதலீடு வரத்தில் சீனாவை எட்டிப் பிடிக்க இந்தியா இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது என்று ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய-பசிபிக் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அறிக்கை, 2015-ல், திட்ட அனுமதியில் தாமதம், இலக்கு தவறிய மானியங்கள், உற்பத்திக் குறைவான அடிப்படைக் கட்டுமானம், குறைவான வேளான் உற்பத்தி, நிலம் கையகப்படுத்தலில் கடினப்பாடு, பலவீனமான போக்குவரத்து மற்றும் மின்சார இணைப்புகள், கண்டிப்பான தொழிலாளர் கட்டுப்பாடுகள் மற்றும் திறன் பொருத்தமின்மை ஆகிய அமைப்பு ரீதியான பிரச்சினைகளை இந்தியா சந்தித்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்தப் பிரிவுகளில் இந்தியா வேகமாக முன்னேறினால் மட்டுமே முதலீட்டுக்கான சாதக சூழ்நிலைகள் ஏற்படும் என்று கூறுகிறது அந்த அறிக்கை.

நல்ல அன்னிய முதலீடு வரத்து... ஆனாலும்...

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2014-ம் ஆண்டு இந்தியா 34 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது 22% அதிகமாகும்.

வளர்ச்சி ஊக்கமளிப்பதாக இருந்தாலும், இதே காலக்கட்டத்தில் சீனா ஈர்த்த அன்னிய முதலீட்டை ஒப்பு நோக்கும் போது இது கால்பங்குக்கு சற்று கூடுதல் அவ்வளவே.

நரேந்திர மோடி தலைமையிலான் அரசு, பாதுகாப்பு, ரயில்வே, கட்டுமான வளர்ச்சி, மருத்துவ உபகரணங்கள், மற்றும் காப்பீடு ஆகிய துறைகளில் அன்னிய முதலீட்டை தாராளமயப்படுத்தியுள்ளது. மேலும், அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தகச் சூழலை இன்னும் எளிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா திட்டம் இன்னும் சில துறைகளிலும் கூட அன்னிய நேரடி முதலிட்டை வரவேற்க முடியும். தெற்கு மற்றும் தென் - மேற்கு ஆசியப் பகுதி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு 50% என்கிறது ஐ.நா. அறிக்கை.

2015-ல் வேக வளர்ச்சியில் சீனாவை இந்தியா முந்தி விடும் என்று சர்வதேச அன்னியச் செலாவணி நிதியம் எதிர்பார்க்கிறது. மேலும் நீடித்த வளர்ச்சிக்கு இன்னும் பொருளாதார சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது.

தன்னம்பிக்கை அளிக்கும் எண்கள்:

மக்கள் தொகை பெருக்கமும் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. 2030-ல் இந்தியாவில்தான் அதிக உழைப்புச் சக்தி இருக்கும் என்று ஐ.எம்.எஃப் கணித்திருந்ததை இந்த ஐ.நா. அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. அதாவது இந்த ஆண்டு வாக்கில் சுமார் 100 கோடி மக்கள் உழைக்கும் வயதில் இருப்பார்கள் என்கிறது ஐ.எம்.எஃப்.

இந்தியப் பொருளாதாரம் பெரும்பாலும் உள்நாட்டு உற்பத்தித் துறைகளை நம்பியே உள்ளது. நாட்டின் தொழிற்துறையின் பகிர்வு மிகவும் சிறியதாகவே உள்ளது. ஆகவே இந்தியா உற்பத்தித் துறையை கடுமையாக வலுப்பெறச் செய்தல் அவசியம்.

2005 முதல் 2014 வரை சீனாவின் ஏற்றுமதி இப்பகுதியின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளில் 15%-லிருந்து 17% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் பங்களிப்பு 9% லிருந்து 11% ஆக அதிகரித்துள்ளது.

ஆசிய பசிபிக் பகுதிகளில் புதிய வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அளவு 108 மாறாக தாராளவாத நடவடிக்கைகள் 80 என்று கூறுகிறது இந்த அறிக்கை.

இந்தியாவும் இந்தோனேசியாவும் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளில் இப்பகுதியில் முன்னிலை வகிக்கிறது. அதாவது தாராளமய கொள்கை நடவடிக்கைகளை விட வர்த்தக கட்டுப்பாடுகள் அதிகமிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (3-Nov-15, 9:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 208

மேலே