வளர்ச்சிக்கு அடிப்படை எது

புதுடெல்லி ஐஐடி பட்டமளிப்பு விழா -
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உரை

நான் படித்த புதுடெல்லி ஐஐடி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு என்னை அழைத்ததுக்கு மிக்க நன்றி. 30 ஆண்டுகளுக்கு முன்பு ‘எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங்’ படிப்பில் பட்டம் பெற்றேன். எனக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கிறதோ என்று பயந்துகொண்டிருந்தேன். ஆனால், எதையும் எதிர்கொள்ளும் திறனை இந்த நிறுவனம் எனக்குள் வளர்த்திருப்பதை நான் அறிந்திருக்கவில்லை.

எனக்குக் கிடைத்த பேராசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புணர்வுள்ள திறமைசாலிகள். எனது சகாக்களும் மிகவும் திறமையானவர்கள். நாங்கள் போட்டிப்போட்டுக்கொண்டே முன்னேறினோம். மிகக் கடுமையான சூழல்களை எதிர்கொள்ள கடும் உழைப்பும் நட்பும் மூட்டை மூட்டையாய் அதிர்ஷ்டமும் உதவின. அப்போது நான் கற்றுக்கொண்டதை இன்றுவரை மறக்கவேயில்லை.

அப்போதிருந்த ஐஐடியில் நாங்கள் கற்றுக்கொண்டது படிப்பை மட்டுமல்ல, கிரிக்கெட், புகைப்படம் எடுப்பதிலிருந்து பதிப்பு முயற்சிகள் வரை எல்லோரும் ஏதோ ஒன்று செய்தோம். நாடக முயற்சிகளிலும் ஈடுபட்டோம். துரதிர்ஷ்டவசமாக, எனக்கு நடிப்பு நன்றாக வரவில்லை. ஆகவே, என் திறமையை வெளிப்படுத்த வேறு திசைகளைப் பார்க்க வேண்டிவந்தது. திறமையை வெளிப்படுத்த ஏராளமான வழிகள் ஐஐடியில் இருந்தன.

வளர்ச்சியும் இயல்பும்

பெரும்பாலான பட்டமளிப்பு விழா உரைகள் எளிதில் மறக்கப்பட்டுவிடும் என்பதை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். இந்தியாவின் விவாத மரபும், திறந்த மனதுடனும் எதையும் ஆய்வுசெய்யும் இந்திய இயல்பும் நமது பொருளாதார வளர்ச்சிக்கு ஏன் மிகவும் முக்கியமானவை என்பதைப் பற்றி நான் பேசப்போகிறேன்.

கருத்துகளின் சந்தையில் பங்கேற்க விடாமல் எந்த ஒரு தரப்பின் மீதும் உடல்ரீதியாகத் தாக்குதல் நிகழ்த்துவதும் வெறுப்பை உமிழ்வதும் நிச்சயமாகத் தடுக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, பாலியல் தொந்தரவு. அது உடல்ரீதியிலானதோ வார்த்தைகள் அளவிலானதோ, அதற்கு சமூகத்தில் இடமே இல்லை. அதேபோல குற்றம்குறை காணும் மனப்பான்மை. எங்கே யார் சறுக்குவார்கள் என்பதை எல்லாக் குழுக்களும் தரப்புகளும் எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் எல்லாவற்றிலுமே குற்றம்குறைகள் கண்டுபிடித்துவிடலாம்.

மிகவும் சாதாரண விஷயங்களிலிருந்துகூட கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் செய்வது என்னைக் கோபப்படுத்துகிறது, ஆனால் அதனால் எனக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை எனும்போது உங்கள் செயலைத் தடைசெய்வதற்கான உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும். ஏனென்றால், ஒரு செயல் எப்படி உங்களுக்குக் கோபமூட்டுகிறதோ அதே போல் அந்தச் செயலுக்கு விதிக்கப்படும் தடையும் ஒருவரைக் கோபப்படுத்து மல்லவா? கட்டுக்கடங்காத நிலையைப் போலவே அதிகமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலையும் முன்னேற்றத்தின் கழுத்தை நெரிக்கிறது.

இதை வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் என் மனதைக் காயப்படுத்தும் விதத்தில் நீங்கள் என்னை எதிர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் என்னை எதிர்க்கிறீர்கள் என்றால் அது தனிப்பட்ட தாக்குதலாக இல்லாமல் ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறையாக இருக்க வேண்டும். சகிப்புத்தன்மை கொண்டிருக்கும் நபர் தனது கருத்துகள் குறித்து உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பார்.

அவற்றுக்கு எதிரான கருத்துகளால் அந்த கருத்துகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற எண்ணம் கொண்டிருப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கருத்துகளுக்கு எதிராகக் கூறப்பட்ட கருத்துகளால் மனம் புண்படாமல் இருக்கும் பற்றற்ற ஒரு மனநிலையைக் கொண்டிருப்பார்.

நடத்தைக்கான பொன்விதி

சகிப்புத்தன்மை என்பது ஒரு விவாதத்தை விவாதமாகப் பார்க்கவே கற்றுத்தருமேயொழிய தாக்குதலாகப் பார்க்காது. எதிர்த் தரப்புடன் விவாதிக்கும் அதே சமயம் மிகுந்த மரியாதையை எதிர்த் தரப்பு மீது செலுத்தும். எனக்கு எதிராக ஏதாவது சொல்லப்பட்டாலோ செய்யப்பட்டாலோ நான் பதற்றமடைவேன் என்றால் எனக்கு எதிராக ஏதாவது தொடர்ந்து செய்வதற்கே எனது எதிர்ப்பாளர்கள் தூண்டப்படுவார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த விதத்தில் நான் நடந்துகொள்ளவில்லையென்றால் எதிர்ப்பாளர்கள் அந்த விவாதத்தை எதிர்கொள்ளக் கடின உழைப்பைச் செலுத்த நிர்பந்திக்கப்படுவார்கள். இதனால் தேவையே இல்லாமல் உங்கள் எதிர்ப்பாளர்கள் உங்களுக்கெதிராகக் கொடிபிடிக்கும் நிலைக்கு அவசியம் இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட நிலையில் சகிப்புத்தன்மைக்கும் மதிப்புக்கும் ஒரு இணக்கம் ஏற்படும்; இந்த இரண்டும் பரஸ்பரம் தங்களை வலுப்படுத்திக்கொள்ளும்.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் இளைஞர்கள் முன்பெல்லாம் அமெரிக்கக் கொடியை அடிக்கடிக் கொளுத்துவது வழக்கம். அமெரிக்காவுக்காகப் பல போர்களில் கலந்துகொண்டு போரிட்ட முந்தைய தலைமுறையினரைக் கோபப்படுத்துவதற்கான வழிமுறை அது. ஏனெனில், அந்தக் கொடியைக் காக்கத்தான் முந்தைய தலைமுறையினர் போரிட்டனர். இளைஞர்கள் அப்படிக் கொடியை எரிக்கும்போதெல்லாம் காவல்துறையினர் அந்த இளைஞர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நிகழ்த்துவார்கள்.

காவல்துறையினரில் பலரும் அமெரிக்காவுக்காகப் போரிட்டவர்கள்தானே. தங்கள் மீது வன்முறை ஏவப்படுவதைத்தான் இளைஞர்களும் எதிர்பார்த்தார்கள். அதைக் கொண்டு தங்கள் நோக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான் அவர்கள் திட்டம். போகப்போக, கொடி எரிப்பைச் சகித்துக் கொள்ளும் ஒரு சமூகமாக அமெரிக்கா மாறிவிட்டது. முன்பு கோபத்தைத் தூண்டிய அளவுக்கு இப்போது அந்தச் செயல் அவர்களிடையே கோபத்தைத் தூண்டுவ தில்லை. அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதும் இல்லை. தெளிவாகச் சொல்வதென்றால் ஒரு சமூகத்தின் உணர்வுநிலை மிகவும் சகிப்புத்தன்மை கொண்டதாக ஆகுமென்றால் அந்தச் சமூகத்தைப் புண்படுத்த நினைக்கும் செயல்கள் குறைந்துகொண்டே வரும்.

மகாத்மா காந்தி சொல்வதுபோல், “நம்மில் யாருமே மற்றவர்களைப் போல் சிந்திப்பதில்லை என்பதையும், உண்மையைத் துண்டுதுண்டுகளாக, வெவ்வேறு கோணங்களிலிருந்துதான் நாம் பார்க்கிறோம்” என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது பரஸ்பர சகிப்புத்தன்மைதான் நம் நடத்தைக்கான பொன்விதி.’

ஐஐடி மாணவர்களாகிய நீங்கள் கருத்துக்களுக்கான இந்தியாவின் ஓட்டப்பந்தயத்தில் முன் வரிசையில் இருக்க வேண்டும். நாங்கள் பட்டம் பெற்ற காலத்தில் எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட இந்தியாவை விட நீங்கள் பட்டம் பெறப்போகும் இந்தியா உங்களின் தொழில்நுட்பத் திறமையை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ளக் கூடியது.

எல்லையற்ற லட்சியத்தை நீங்கள் உங்கள் வாழ்வில் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களில், சிந்திப்பதை விடாமல் செய்பவர்களுக்கு நிச்சயம் மாபெரும் வெற்றி இருக்கிறது. உலகை நோக்கி நீங்கள் செல்வீர்கள். அப்போது, மரியாதை, சகிப்புத்தன்மை இரண்டும் நிரம்பிய சூழலில் விவாதங்களைத் தொடர்ந்து ஆரோக்கியமாக நிகழ்த்திய இந்திய மரபை நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்த மரபை நிலைநாட்டுவதன் மூலமும், அதற்காகப் போராடுவதன் மூலமும்தான் இந்த நிறுவனத்தில் உங்களுக்கு போதித்த ஆசிரியர்களுக்கும், உங்களை இங்கே அனுப்பிய பெற்றோர்களுக்கும் உங்களால் நன்றிக்கடன் செலுத்த முடியும். அதுதான் நம் தேசத்துக்கு நீங்கள் ஆற்றப்போகும் பெரும் சேவை.

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (3-Nov-15, 9:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 261

மேலே