அதைவிட சிறந்த பெயர் இருக்க முடியாதுதானே
மரண விலாஸ் ஓட்டல்கள்.
-----------------------------
திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு
அரசு போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். இரவு உணவகம் ஒன்றில் பேருந்தை நிறுத்தினார்கள்.
காலி பிளாஸ்டிக் பாட்டிலால் ஒருவன் பஸ்ஸை டமால் டமால்னு தட்றான்.குழந்தைகள் முதல் அனைவரும் தூக்கம் கலைந்து விடுகிறார்கள்.இவர்களுக்கு இந்த அதிகாரம் யார் தந்தது?.
திறந்தவெளி கழிப்பறை, அருகிலே கொசு மொய்க்கும் சமையல்கூடம், அழுக்கான சாம்பார் வாளி, கழுவப்படாத டம்ளர்கள், காது கிழியும் குத்துப் பாடல்… சாப்பிட உட்காரவே தயக்கமாக இருந்தது.
பரோட்டா, சப்பாத்தி, தோசை மூன்று மட்டுமே இருப்பதாகச் சொன்னார்கள். தோசைக்கு சட்னி, சாம்பார் கிடையாது. குருமா வாங்கிக்கொள்ள வேண்டும். அது 75 ரூபாய். தோசை 100 ரூபாய். ‘தோசைக்கு யார் குருமா வைத்து சாப்பிடுவார்கள்?’ என்றேன். ‘இஷ்டம் இருந்தா சாப்பிடுங்கள்’ என்றார்கள்.
ஓசியில் சாப்பிடுவதற்காக டிரைவர்,கண்டக்டர்கள் இங்குதான் பஸ்ஸை நிறுத்துவார்கள்.அவர்களுக்கு அங்கு கவனிப்பே தனி.
உணவு,வாட்டர் பாட்டில்,சிகரெட் பாக்கெட்,பீடா,பிஸ்கட் அனைத்தும் இலவசம்.
மதுவிருந்தும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பசிக்கு ஏதாவது பழம் வாங்கி சாப்பிடலாம் என நினைத்து வெளியே வந்தால், பழக்கடையில் ஒரு வாழைப்பழம் 15 ரூபாய். பெயர் தெரியாத ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலை 50 ரூபாய். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் 80 ரூபாய்.
ஹோட்டல் வாசலில் ஒரு கிராமத்துப் பெண் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். ‘ஒத்தை தோசை 100 ரூபாயா? பகல் கொள்ளையா இருக்கு. ஒரு கிலோ இட்லி அரிசி 25 ரூபாய். ஒரு கிலோ உளுந்து 61 ரூபாய். மாவு ஆட்டுற செலவு, எண்ணெய் எல்லாம் சேர்த்தாகூட ஒரு தோசை விலை 20 ரூபாய்க்கு மேல வராது. வியாபாரம் பண்ணுறவன் 30 ரூவான்னு வித்துட்டு போ. 100 ரூபாய்னு அநியாயம் பண்ணாதப்பா. இந்த துட்டு உடம்புல ஒட்டாது’ என்று சாபமிட்டார்.
அந்த அம்மாவின் கோபத்தை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஒருவர், ‘தோசை ஒரே புளிப்பு. ரப்பர் மாதிரி இருக்கு. கிழங்கு மாவு கலந்து இருக்காங்க’ என்றார். ‘ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்ய வேண்டியதுதானே?’ என்றதும், ‘இது கட்சிக்காரங்க கடை’ என சுவரில் மாட்டப்பட்ட புகைப்படத்தைக் காட்டினார். இதிலுமா கட்சி?
‘சாப்பாட்டு விஷயத்துலகூட கட்சி வெச்சிருக்கிறது தமிழர்கள்தான்’ என்று ஒரு சொற்பொழிவில் எம்.ஆர்.ராதா கேலி செய்வார். தோசை வரை கட்சி ஆக்ரமித்திருக்கிறது.
ஒரு நாளைக்கு நெடுஞ்சாலையில் ஆயிரமாயிரம் கார்கள் போய்வருகின்றன. எங்கும் முறையான கழிப்பறை கிடையாது. குடிநீர் கிடையாது. உணவகம் கிடையாது. முதலுதவி மருத்துவமனைகள் கிடையாது. ஆனால், டோல்கேட் வசூல் மட்டும் முறையாக நடக்கிறது. அடிப்படை வசதிகள் பற்றி யாரும் எந்தப் புகாரும் தெரிவிப்பது இல்லை… தெரிவித்தால் கண்டுகொள்வதும் இல்லை.
சாலையோர கடைகளில் மாமிசம் சுவையாக இருப்பதற்காகவும் உடனடியாக வேக வேண்டும் என்பதற்காகவும் பாரசிடமால் மாத்திரைகளைக் கலக்குகிறார்கள் என்கிறார்கள். சாலையோர உணவகங்களில் தொடர்ந்து சாப்பிட்டால், இரைப்பை மற்றும் சிறுகுடலில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது.
இந்தக் கொடுமை போதாது என்று சமீப காலமாக நெடுஞ்சாலை எங்கும் கும்பகோணம் காபி கடைகள் பத்து அடிக்கு ஒன்றாக முளைத்திருக்கின்றன. இந்தக் கடைகளுக்கும் கும்பகோணத்தின் ஃபில்டர் காபிக்கும் ஒரு ஸ்நானப்பிராப்தியும் கிடையாது. ஏமாற்றுவதற்கு ஒரு பெயர்தானே வேண்டும். எல்லா கடைகளிலும் சொல்லிவைத்தாற்போல செம்பு டபரா, டம்ளர் செட், அதில் பாயசத்தில் காபி தூளைப் போட்டுக் கலக்கியதுபோல ஒரு காபி. பாவம் மக்கள்… இந்தக் கண்றாவியைக் குடித்துவிட்டு வாயை மூடிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.
நெடுஞ்சாலை உணவுக் கொள்ளையைப் போல ஊர் அறிந்த மோசடி எதுவுமே இல்லை. ஸ்குவாட் அமைத்து எதை எதையோ அதிரடியாக சோதனை செய்கிறார்களே… அப்படி ஒரு பறக்கும் படை அமைத்து உணவகங்களை சோதனை செய்து தரமற்ற கடைகளை மூடலாம்.
சமீபத்தில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சாலையோர உணவு விடுதி ஒன்றில் எதிர்பாராமல் நுழைந்து, வரிசையில் நின்று தனக்குத் தேவையான உணவை வாங்கிக்கொண்டு மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார். உணவுக்கு அவர் தந்த கட்டணம் வெறும் 21 யுவான். அந்தப் பணத்தில் பெரிய ஹோட்டலில் ஒரு பாட்டில் தண்ணீர்கூட வாங்க முடியாது. நாட்டின் ஜனாதிபதி உணவகத்துக்கு வந்தபோதும், கடையில் ஒரு பரபரப்பும் இல்லை. மக்கள் இயல்பாக அவரோடு இணைந்து சாப்பிட்டுப் போனார்கள்.
நமது அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களை ஒருமுறை ஹைவே மோட்டலுக்குச் சென்று மக்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும்… அது எவ்வளவு பெரிய கொடுமை என்று.
சாலையோர மோட்டல்களை
'மரண விலாஸ்'
என்றுதான் அழைக்க வேண்டும் . அதைவிட சிறந்த பெயர் இருக்க முடியாதுதானே?