பிரித்தலும் சேர்த்தலும்

சமீபத்தில் துருக்கி சென்ற நண்பர் ஒரு பேனா வாங்கி வந்து பரிசளித்தார். அதன் விசேஷம், மேலோட்டமாகப் பார்த்தால் பேனாபோலவே இருக்கும், அழகாக எழுதும், ஆனால் உண்மையில் அது ஒரு பென்சில். அதன் மூடியில் ஒரு தக்கனூண்டு பேனாவைப் பொருத்திவைத்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் புரிந்தபிறகு, அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பென்சிலாகவே தோன்றுகிறது, மிகச் சாதாரணமாக அதைக் கடந்துபோகிறேன், ஆனால் முதன்முறையாக அவர் அந்தப் பேனா முனையைப் பிரித்துப் பென்சிலை வெளிக்காட்டியபோது நான் அடைந்த ஆச்சர்யம் சாதாரணமானது அல்ல.

கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் ’Easter Egg’ ஆச்சர்ய உணர்வு, சில கவிதைகளிலும் ஏற்படும். ஒரு வார்த்தையை மேலோட்டமாகப் பார்த்தால் ஓர் அர்த்தம், கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட இன்னோர் அர்த்தம் என வித்தை காட்டும்.

உதாரணமாக, என் சமீபத்திய கிறுக்கு, கம்ப ராமாயணம், அதில் ஒரு பாட்டு. அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் திருமாலிடம் முறையிடுகிறார்கள். இப்படி:

’ஐ இரு தலையினோன், அனுசர் ஆதி ஆம்
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே
செய்தவம் இழந்தன, திருவினாயக
உய்திறன் இல்லை’யென்று உயிர்ப்பு வீங்கினார்

ஐ இரு தலை = 5 * 2 = 10 தலை கொண்ட ராவணன்
அனுசர் = தம்பிகள்
ஆதி ஆம் = முதலான
மெய் வலி அரக்கரால் = உடல் பலம் கொண்ட அரக்கர்களால்

விண்ணும் மண்ணும் செய் தவம் இழந்தன = வானுலகத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தவம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்

இதுவரை ஓகே, அடுத்து ‘திருவினாயக’ என்று வருகிறது. திருமாலைப்போய் யாராவது ‘பிள்ளையாரே’ என்று அழைப்பார்களோ?

அங்கேதான் நாம் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. அது ‘திரு வினாயகா’ (மரியாதைக்குரிய வினாயகரே) அல்ல, ‘திருவி நாயகா’, அதாவது திருமகளாகிய லட்சுமியின் கணவனே, திருமாலே!

இந்த மேட்டரைச் சினிமாக்காரர்கள் சும்மா விடுவார்களா? கவிஞர் வாலி ஒரு பாட்டில் அட்டகாசமாகப் புகுத்திவிட்டார்:

வராது வந்த நாயகன், ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன், நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன், தரம் தரம் (?) இணைந்தவன்,
இவன் தலை விநாயகன்

இந்தப் பாடலை வீடியோ வடிவமாகப் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும், நாயகனும் நாயகியும் ஒரு விநாயகர் கோயிலில் பாடுவதுபோன்ற காட்சி அமைப்பு. ஆகவே ‘இவன் தலை விநாயகன்’ என்ற வரிக்கு நேரடியான Religious அர்த்தமும் கொள்ளலாம், ‘இவன் தலைவி நாயகன்’ என்று பிரித்து Romantic அர்த்தமும் காணலாம்.

காதல் பாட்டிலேயே ரெட்டை அர்த்தம் வைக்கிற வாலி கலாட்டா பாட்டு என்றால் சும்மா விடுவாரா? எல்லாருக்கும் தெரிந்த ஓர் Easter Egg இது:

கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி
நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி

இங்கே ’காப்பாத்த வந்த வண்டி’ என்று சாதாரணமாக வரும் வரியைக் கொஞ்சம் சேர்த்துப் படித்தால் ‘காப்பாற்ற வந்தவன்-டி, நாலும் தெரிஞ்சவன்-டி, நாகரீகம் அறிஞ்சவன்-டி’ என்று விவகாரமாக மாறிவிடுகிறது.

இதுவும் ஒரு ராமர் பாட்டிலிருந்து வந்த Inspirationதான் என்று நினைக்கிறேன். அருணாசலக் கவிராயர் எழுதிய ‘ராமனுக்கு மன்னன் முடி’ என்ற பாடலில் இப்படிச் சில வரிகள் வரும்:

பட்டம் கட்ட ஏற்றவன்-டி,
நாலு பேரில் மூத்தவன்-டி,

’கட்ட வண்டி’ பாட்டைப் பிரித்துக் கேட்டபிறகு, எனக்கு இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ‘பட்டம் கட்டுவதற்குச் சிறந்த வண்டி இது, நாலு வண்டிகளில் மிக மூத்தது’ என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. ராமர் மன்னிப்பாராக.

இந்த ‘வாடி போடி’ உத்தியை வாலி இன்னொரு பாட்டிலும் மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதையும் பாடியது கமலஹாசன்தான், ஆனால் பெண் குரலில்:

தூணுக்குள்ளும் இருப்பான்-டி,
திரும்பிலும் இருப்பான்-டி,
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்-டி

இப்படி இந்தப் பாட்டின் பல்லவி முழுவதும் பல ‘டி’யில் முடியும் வரிகள் இருக்கும். இவை மரியாதைக்குறைவாக எழுதப்பட்டவை அல்ல. அப்படியே இருந்தாலும், கதைப்படி இவற்றைப் பாடுவது வயதான ஒரு பெண்மணி என்பதால் ஒன்றும் தவறில்லை.

ஆனால் உண்மையில் இத்தனை ’டி’களுக்குக் காரணம், அந்தப் படத்து ஹீரோவின் பெயர் பாண்டியன். கதாநாயகி அவனுடைய மனைவி, ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.

ஆகவே, அந்தப் பாண்டியனை அவளுக்கு நினைவுபடுத்தும்விதமாக, ஒவ்வொரு வரியின் கடைசிப் பகுதியிலும் ‘பாண்டி’, ‘பாண்டி’ என்று வருவதுபோல் எழுதியிருப்பார் வாலி.

இதுபோன்ற விஷயங்களை ஒருமுறை தெரிந்துகொண்டுவிட்டால், அப்புறம் ஆச்சர்யம் இருக்காது, ’ச்சே, இவ்ளோதானா?’ என்று தோன்றும், ஆனால் இந்த மேட்டர் புரியாமல் பாட்டின் நேரடிப் பொருளைமட்டுமே பலர் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு இந்த ’உள் குத்து’ விளங்கும்போது, ‘அட’ என்று ஒரு திகைப்பு தோன்றும், அதற்காகவே இதுமாதிரி சமத்காரப் பாடல்கள் எழுதப்படுகின்றன.

நிறைவாக, இன்னொரு Easter Egg. இதுவும் வாலிதான். என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.

படம் ‘மெல்லத் திறந்தது கதவு’. முகம் காட்டாமலே காதலிக்கும் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கிறான் நாயகன். அப்போது அவன் பாடும் வரிகள்:

தேடும் கண் பார்வை தவிக்க, துடிக்க,
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ,
வெறும் மாயமானதோ!

நேரடியான, எளிய வரிகள்தான். காட்சிக்குப் பொருத்தமான பொருளைத் தருகின்றன.

ஆனால் அந்த மூன்றாவது வரி, ‘வெறும் மாயமானதோ’ என்பதைக் கொஞ்சம் மாற்றிப் பிரித்தால்? ‘வெறும் மாய மான் அதோ!’ … முகம் காட்டாமல் மறைந்து மறைந்து போகிறாளே, இவள் நிஜமாகவே பெண்தானா? அல்லது வெறும் மாயமானா?’

தூக்கிவாரிப்போடுகிறதில்லையா? அவ்ளோதான் மேட்டர்!

***

என். சொக்கன் …

30 05 2012

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி மூலம்:என (3-Nov-15, 11:30 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 113

மேலே