கண்ணதாசன்
கண்ணதாசன்
கண்ணதாசன்
வண்ணத்து மயிற்கூட்ட ஆட்டத்திற் கோர்பாடல்
மனமீர்க்கப் படைத்த ளிப்பாய்;
மால்வண்ணன் வாயரும்பி மலர்கின்ற குழலிசைக்குள்
வசமாக்கும் பாட்ட ளிப்பாய்;
எண்ணத்துள் நுழைந்தாடும் காதலர்க்கோர் இணைப்பாடல்
இன்பமுறத் தொடுத்த ளிப்பாய்;
இலக்கியத்தின் பிழிவாகத் தொடர்களினைத் தொட்டெடுத்தே
இன்மணத்து மாலை யீவாய்;
கிண்ணத்துள் மதுவுக்கும் கிறக்கங்கள் வரும்வண்ணம்
கடும்போதைச் சொற்கள் பெய்வாய்;
கிறங்கிப்போய்த் திரைக்கூட்ட அலையுன்னைத் தாலாட்டத்
திரையுலகை ஆட்சி செய்தாய்;
வண்ணப்பொன் உடலழகா! உன்பாட்டைக் கேட்டுள்ளம்
மயங்காதார் யாரு மில்லை;
வளமான திரையுலகை வலங்கொண்டும் வளங்காணா
மாமன்ன! கண்ண தாச!
யார்யாரை எங்கெங்கே வைப்பதென யாருக்கும்
புரியவில்லை எனஉ ரைத்தாய்;
யார்யாரோ எங்கெங்கோ அமர்கின்றார்; தன்முனைப்பாய்
என்னென்ன வோசெய் கின்றார்;
சீருடைய குயில்கட்கும் காக்கைக்கும் வேறுபாடு
தெரியவில்லை என்று ரைத்தாய்;
சிக்கலிங்கே அதுதானே! தீர்வெதுவும் தெரியவில்லை;
திருந்துவோரைக் காண வில்லை;
பார்வாழ நீசொன்ன கருத்துக்கள் தத்துவங்கள்
பார்வாழ்வோர் கொள்ள வில்லை;
பாவங்கள் கொடிகட்டிப் பறக்கின்ற விந்தையேதான்
பக்குவமாய் விளங்கி நிற்கும்;
பேர்வாங்கிப் புகழ்வாங்கிப் பெரியமுத லாளியெல்லாம்
படையெடுக்க வைத்த மன்னா!
பாட்டாலே திரையுலகை ஆண்டபெரு மன்னனேஉன்
பேரெங்கள் மனமி ருக்கும்.
மதுவைநீ குடித்தாயோ மதுவுன்னைக் குடித்ததுவோ
மயங்கியது நாங்க ளன்றோ!
மயக்கத்தில் அளித்தாலும் மயக்குகின்ற பாட்டளித்தாய்!
மகிழ்ந்திட்டார் மக்க ளெல்லாம்;
மதுக்கோப்பைக் குள்ளுனது குடியிருப்பென் றுரைத்தாலும்
மக்களுள்ள மெலாமி ருந்தாய்!
வசமாகா உள்ளத்தின் வசப்பட்டு மயங்கினுமுன்
வசப்பட்டார் உலக மக்கள்;
மதிமயக்கும் கவிவரிசை மட்டுமல்ல உன்னுரையும்
மயக்கியது நெஞ்ச மெல்லாம்;
வனவாசம் போல்மனசைத் திறந்துரைத்தா ரிவ்வுலகில்
யாருமில்லை உண்மை தானே!
நிதியுன்னைத் தினந்தோறும் தேடிவந்து குவிந்தாலும்
நிற்பதில்லை உன்னி டத்தில்;
நிதிகொழிக்கும் திரையுலகில் கொழித்தாலும் செல்வத்தில்
நீகொழிக்க வில்லை மன்னா!
அருத்தமுள்ள இந்துமதம் படித்தவர்க ளெல்லோரும்
அடடாவென் றதிச யிப்பார்;
அன்றாட உண்மையுடன் ஆண்டவனின் உண்மையினை
அணைத்தொன்றாய்ச் சொல்லி வைத்தாய்;
பொருத்தமுடன் நம்வாழ்வில் பொருந்திவரும் செய்திகளில்
பொருத்திவைத்தாய் ஆன்மீ கத்தை;
புவிவாழ்க்கைப் போதிமரம் போதித்த பிழிவினைநீ
பொறித்துவைத்தாய் மற்ற வர்க்காய்;
இருக்குமிந்தப் பேருலக இன்பத்தின் துன்பத்தின்
எல்லைகளைத் தொட்ட வன்நீ!
இருந்துகொண்டே செத்தவனாய் இரங்கற்பாப் பாடியேயோர்
எழுச்சியினைத் தந்த வன்நீ!
கருக்கொண்ட போதிலேயே கவிதையினைக் கற்றதுபோல்
கவிச்சுவையின் சிகரம் தொட்டாய்!
கவியரசாய்ப் புவியாண்டு கலையுலகை ஆட்டுவித்த
கண்ணதாச! நீச காப்தம்.