ஏழைகள் - ஆனந்தி

நான் மட்டும்
இப்படியே
இருந்திடுகிறேனே
என்ற வார்த்தைக்குள்
அடங்கிடுகிறது
இவர்கள் வாழ்வு
மொத்தமும்....
இருப்பதை விட்டு
பறப்பதை பிடிக்கவும்
ஆசையின்றி இல்லை....
நிகழ்கால நெரிசலில்
மூர்ச்சையுற்று
எதிர்கால பலனுக்காய்
காத்திருக்கையிலும்,
யாரும்
கையேந்திடுகையில்
கர்ணன்கள் தான்
இவர்களும்....
பிடித்ததை வாங்கிட
ஓர் நாள் விடிந்திடும்
திகட்டா வாழ்வு
கண்டிடலாம்
என்ற எண்ணம்,
(அ)தனில் ஒவ்வொரு
நாளும்....
இவர்கள் வாழ்க்கையை
அனுபவிப்பவர் அல்லர்
அனுமானிப்பவர்கள்....
வளைந்து நெளிந்து
போகையிலும்
தடுக்கிடா தந்திரம்
தெரியாதவர்கள் தான்....
வாழ்வில்
ஏக்கம் தாக்கமுற்று
இனிப்போடு கசப்பும்
சேர்ந்ததனால்
குறைமனிதர்கள் அல்லர்
இவர்கள்.
நிறை மனிதர்கள் தான்
நிலை மனிதர்கள் தான்.....