அந்தக் கால தீபாவளி

தீபாவளி போனசுக்காய்
மில்லில் வேலை நிறுத்தம் –
எங்கிருந்தாவது பணம் புரட்டி
கொண்டாட்டத்துக்கு குறை
வைத்ததில்லை எங்கள் அப்பா...

சீட்டிப்பாவாடை சகோதரிகளுக்கு..
வளரும் பையன் அல்லவா
இறக்கம் கொஞ்சம் கூடுதலாகவே
இருக்கட்டும் என அளவெடுத்துத்
தைத்துத் தரும் ஆறுமுகம்
டைலர் கடையில்தான் கழியும்
தீபாவளியின் முன்தினம்...

நெய்க்கு கட்டுப்படி ஆகாதென
அண்ணாச்சி கடை டால்டாவில்தான்
மைசூர்பாகு முறுக்கு தட்டவடையென
அம்மா அடுப்படியில் தீவிரம்...

அவசரமாய் முடிந்துவிடும்
தீபாவளி எண்ணெய் குளியல்..
பின்தொடரும் சரவெடிகள் மத்தாப்பூ
விர்ரென்று வானத்தில் தீகக்கி புறப்பட்ட
ராக்கெட் போன உயரம் போதாதென்பான்
பக்கத்து வீட்டுப் பழனிச்சாமி..

இருப்பதில் நல்லதென்று
தோன்றும் பனியன் வேட்டியுடன்
அப்பாவின் மேற்ப்பார்வை...

அம்பாள் கொட்டகை மேட்டினி ஷோ
எங்கிருந்தோ வந்தாள் படம்...
போருக்குப்போகும் வீரியத்தோடு
தரை டிக்கட் வாங்குகையில்
போட்டிருக்கும் புதுச் சட்டையில்
ஊரார் வியர்வையெல்லாம்
புழுதியோடு பூசப் பட்டிருக்கும்..

கொண்டாட்டத்தின் மிச்சம்..
பொட்டலமாய் சேகரித்து
குப்பையோடு எரியிடும்
வீதியில் வெடிக்காத
பட்டாசுகளின் கந்தகத்தூள்..

டவுனில் ரிலீஸ் ஆன
சிவாஜியின் சிவந்தமண்
எம்ஜியாரின் நம்நாட்டுக்கு
எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல
ரசிகக் கொழுந்துகள்
புங்கமரத்தின் கீழ்
பட்டிமன்றம் நடத்துகையில்
அப்பா மட்டும்
தீபாவளிச் செலவுக்காய்
வாங்கிய கடனை
அடைப்பதன் யோசனையில்
திண்ணையில் அமர்ந்திருக்க -
எங்கள் தீபாவளி முடிந்து போகும்...
***************************************************
# ஜி ராஜன்

எழுதியவர் : ஜி ராஜன் (6-Nov-15, 12:08 pm)
பார்வை : 85

மேலே