2013 – சித்திரைப்புத்தாண்டு”

நெஞ்சில் பதிந்த என் கவிதை!
மாண்டவர் தொகையோ இன்னும் வரவில்லை
அதற்குள் மீண்டும் ஒரு புது வருடம்
எத்தனை வருடங்களாகும் அத்தொகை வெளிச்சத்திற்குவர?
காணாமல் போன பிள்ளைகள் நினைவாகத்
தென்னம்பிள்ளைகளாம் - இது என்ன பண்டமாற்றா?
ஒன்றுக்கு நூறாகத் தென்னம்பிள்ளைகள் தருகிறோம்
உன் பிள்ளைகளைத் தருவாயா? யுத்தம் சரணம் கச்சாமியோ?
மரணம் சரணம் கச்சாமியோ? இது யார் போதித்த சீலமோ?
எங்களுக்காகவே எழுதிய சீலமோ?
காலம் இதை மாற்றுமோ? கல்லும் கரையுமோ?
மயில் தானாக இறகு போடுமோ?
உதயனை எரிக்கலாம் உண்மையை எரிக்கலாமோ?
உண்மைக்கு அழிவில்லையே! காலம் மாறுமோ? மாறாதோ?
வருடம் ஒரு புத்தாண்டு வரும்
ஆனாலும் கொண்ட கோலம் மாறுமோ?
வல்லரசுகளின் "வீட்டோ" வலுவோ
நந்தி போல் நடுவில் – தீர்வு எப்படி வரும்?
பள்ளி வாசல் செல்பவர்களையும் கிள்ளி விடும் எண்ணமோ?
முள்ளி வாய்க்காலில் கொள்ளி வைத்தது போல்
இது "விஜய" வருடமாம்! விஜயன் - ஆம் அன்று தன் தாய்
தந்தையராலேயே நாடு கடத்தப்பட்ட அரச குமாரனவன்
ஏன் எனக்கு இவன் நினைவு வருகிறதோ?
நந்தன வருடம் வந்த போதும் என் நெஞ்சில்
நந்திக் கடலே ஆர்ப்பரித்தது இது ஏன்? ஏன்? ஏன்?
ஏனெனில் இது பெருவெள்ளம் - சுதந்திர வேட்கை
என் உள்ளத்தில் பிறந்த எண்ணங்கள் என்னும்
வெள்ளத்தின் காட்டாற்றுப் பிரவாகம்
எழுத்துருவில் பாய்ந்து வரும் என் கவிதைப் பிரவாகம்
மூப்படையேன் நானோ யாப்பறியேன் பாப்புனைந்தேன் – இது
மலர் பறியாமல் நான் கோர்த்த வார்த்தை மாலை
“விஜய வருடம்” பெயருக்கேற்ப வெற்றி தருமா?

எழுதியவர் : பொன் அருள் (8-Nov-15, 8:47 am)
சேர்த்தது : பொன் அருள்
பார்வை : 65

மேலே