வஞ்சி மன்னன் - சரித்திரத் தொடர்- பாகம் 3 நடுவிலிருந்து போகும் கதை

..........................................................................................................................................................................................

எண்கோண வடிவிலமைந்த கோட்டையது. புறத்தே இரட்டைச் சுவர் கொண்ட அரண்; இரண்டு சுவர்களுக்கிடையில் ஒரு மனிதன் கால் நீட்டி அமரலாம். சில இடங்களில் இரண்டு சுவர்களுக்கும் இடையே இடைவெளி இல்லாதபடி கல் கொண்டு நிரப்பப்பட்டு ஒற்றைச் சுவராகக் காட்சியளிக்கும்.. சில இடங்களில் இந்த இடைவெளிகளில் வீர்ர்களுக்கான ஓய்வறை அமைந்திருக்கும்... நான்கு ஆள் உயரமுள்ள அரணில், மேலே உப்பரிக்கையுடன் கூடிய காலதர்கள் அமைந்திருந்தன. காலதரில் நிரம்பி வழிந்த பறவைகளின் கூடுகள் நெடுங்காலமாகப் போரில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லின..!

அரணின் சுவர்கள் சற்று வளைவாக இருந்தன. இதனால் மதங்கொண்ட யானைகள் மோதும்போது அவைகளின் சக்தி சீராக வெளிப்படாது; அரணில் பாதி உயரத்துக்குப் பச்சைப்பசேல் என்று காட்டுப்பழக் கொடிகள் படர்ந்திருந்தன. இதுவும் யானைகளைச் சாந்தப்படுத்தத்தான். கொடியை மிதித்தும் துவைத்தும் போட்டபின்பு அரணைத் தலையெழுத்தே என்று முட்டிவிட்டுப் பின் வாங்கும் களிறுகள்..! சேரனல்லவா? சேரனுக்குத் தம் படை யானைகள் என்றும் எதிரிப்படை யானைகள் என்றும் பேதமில்லை. எங்கிருப்பினும் யானைகள் சேரர்களின் செல்வங்களே..!

அரணை அடுத்துச் சரேலென்று இறங்கியது அகழி. அரணுக்கும் அகழிக்கும் இடையில், மணல் திட்டில் ராட்சசப் பாகற்காயென படுத்துக் கிடந்தது முதலையொன்று. அகழி ஒரு யானை ஆழமும் நாற்பது யானைச் சுற்றும் கொண்டது. அதாவது அகழிக்குள் நாற்பது யானைகளை இறக்கி, வட்டமாக ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தினால் அகழி சமதரையாகி விடும்..! அகழிக்குள் தளும்பும் நீரின் வேகத்தைக் கொண்டு அமராவதியின் வெள்ளப்பெருக்கை அளந்து விடலாம்...! ஊற்றுக்கண்ணுள்ள அகழி.... அகழி காவலுக்குத்தான் என்றாலும் ஆற்றில் நீர்வரத்து மட்டுப்படும்போது வெட்டுக்கால்வாய் மூலம் மூன்றிலொரு பங்கு நீரை வெளியேற்றி வெள்ளாமை செய்யலாம்..!

கோட்டையின் பாதியில் அரண்மனை, அந்தப்புரம், தானியக்களஞ்சியம், கருவூலம், படைக்கல வைப்பறை ஆகியவை அமைந்திருந்தன. இன்னொரு பாதியில் அரசவை, கலையரங்கம், மக்கள் மன்றம் முதலானவை நிர்மானிக்கப்பட்டிருந்தன. மக்கள் மன்றத்தில் குமரிக்கோட்டமும், மறவர் கோட்டமும் அமைந்திருக்கும்.. அரசவைக்கும், மக்கள் மன்றத்துக்கும் இடையில் பின்புறமாக அந்தப்புரம் அமைந்திருப்பதால் குழந்தையைப் பராமரிக்கும் அரசமாதர் அங்கிருந்தபடி சாளரத்தின் மூலம் சபை நடப்புகளை அறியலாம்..!

அரணுக்கும் மக்கள் மன்றத்துக்குமான மரப்பாலம் எப்போதுமே தூக்கப்பட்டதில்லை..! பழைய அரசர் இருந்தபோது போர்க்காலத்தில் கூட இந்தப் பாலத்தில் மக்கள் போய்க் கொண்டுதான் இருந்தனர்...!

தீப்பந்தமும் மான்தோல் பையுமாக அணிமா அந்தப்புரம் புறப்படும் நேரம்..! காவல் நிறைந்த திட்டி வாசலைக் கடந்தாள்..! புற வாசல் வழியாக தோட்டிப் பெண்கள் சாம்பலும் சுண்ணாம்பும் பரத்திய மலக்கலயங்களை அப்புறப்படுத்தி விட்டு புதுக் கலயங்களை வைத்துக் கொண்டிருந்தனர். சில பணிப்பெண்கள் முன்னிரவில் பிரகாசித்துக் கொண்டிருந்த சரவிளக்குகள், ஆடி அகல்கள் மற்றும் தேவையற்ற தீப்பந்தங்களை அணைத்துக் கொண்டிருந்தனர். மேலும் அணையா விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றியும், திரியிட்டும் சில விளக்குகளை துடைத்துக் கொண்டும் பணியிலிருந்தனர்.

மகாராணியார் உட்கூடத்திலிருக்கலாம். அந்தப்புரத்தின் வெட்டிவேர் தட்டிகளுக்கு ஒருத்தி மருக்கொழுந்து சாறு தெளித்துக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி மகாராணியின் கட்டில் மேல் வாச மலர்களால் வேலைப்பாடு செய்து கொண்டிருந்தாள்.

உட்கூடத்திலிருந்து வெளி வந்த பணிப்பெண்ணின் கையில் சில அரச நகைகள் இருந்தன. உறங்கும் நேரமல்லவா? உடலை உறுத்தும் நகைகளையும் அலங்காரத்தையும் களைந்து கொண்டிருப்பார் மகாராணி.

மகாராணியின் அறையிலிருந்த தூபக்கடிகையின் ஊதுபத்தி அணைய இன்னும் இரண்டு நாழிகை மீதமிருந்தது. அணிமா தன்னிடமிருந்த ஊதுபத்தியை எடுத்தாள். இரண்டு நாழிகை உயரம் விட்டு பிசிறின்றி கத்தரிக்கோலால் அறுத்தாள். அதனை ஆடிக்குள்ளிருந்த இன்னொரு தூபத்தண்டின் மேல் செருகினாள். அந்த இரண்டு நாழிகை உயரம் அளவீடுகளுக்கு மேல் நின்றது. பயன்படாத உயரம்..! முதலில் இருந்த ஊதுபத்தி அணைந்து முடியும்போது இந்த ஊதுபத்தி சரியான அளவீட்டுக்கு வந்து விடும்..!

இது எரியும் ஊதுபத்தியைக் கொண்டு நேரத்தை கணிக்கும் முறை....! நல்ல பருமனும் தகுந்த உயரமும் கொண்ட ஊதுபத்தி ஒரு ஆடிக்குள் பொருத்தப்படும். ஆடியின் பக்கவாட்டில் நாழிகை அளவீடுகள் குறிக்கப்பட்டிருக்கும். முப்பது நாழிகை கொண்டது ஒரு பொழுது; இரு பொழுதுகள் கொண்டது ஒரு நாள். ஊதுபத்தியின் எரியும் முனை மிகச் சீராக எரிந்து நாழிகையைக் காட்டும்.

இதில் ஏழரை நாழிகை கொண்டது ஒரு சாமம். எட்டு சாமம் அல்லது அறுபது நாழிகை கொண்டது ஒரு நாள். ஒவ்வொரு சாமத்திற்கும் ஒவ்வொரு வாசனை வீசும் ஊதுபத்தி அது. வாசனை மாறுவதைக் கொண்டு சாமம் கடந்து விட்டதை தூரத்திலிருந்தும் உணர முடியும்..!

அரண்மனை வாயிலில் மணிக் கோபுரம் இருந்தது. அங்கே பல்வேறு நீர்க்கடிகைகள் வைக்கப்பட்டிருந்தன. நீர்க்கடிகை என்றால் திரவம் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு சிறிய பாத்திரம் மிதந்தபடி இருக்கும். சிறிய பாத்திரத்திலுள்ள துளை வழியாக கொஞ்சம் கொஞ்சமாக திரவம் சிறிய பாத்திரத்தில் சேகரமாகும். இதனால் சிறிய பாத்திரம் திரவத்துக்குள் அமிழும். சிறிய பாத்திரம் முழுதும் நிறைந்து விட்டால் அது பெரிய பாத்திரத்தின் அடியில் போய்விடும். பெரிய பாத்திரத்தின் அடி, வேறு வகை உலோக முலாம் பூசி சற்றுக் குறுகலாக இருப்பதால் சிறிய பாத்திரம் அடியில் தங்கும்போது நங்கென்ற ஓசை எழுப்பும். இப்படி, மிதக்க விட்ட பாத்திரம் அடியில் சென்று ஒலியெழுப்ப, ஒரு மணி நேரம் அதாவது இரண்டரை நாழிகையாகும்.

இதன்பிறகு அடுத்த பாத்திரம்...

மூன்று பாத்திரங்கள் அடுத்தடுத்து நிரம்ப மூன்று மணி நேரம் - அதாவது ஒரு சாமமாகும்.

ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அந்த எண்ணிக்கைக்கேற்ப கோட்டை முரசு அதிரும். இருப்பினும் பின்னிரவு, நடுநிசி, வைகறை வேளைகளில் முரசு ஒலிப்பதில்லை. அதற்குப் பதில் அந்த வேலையை இயற்கையும் இறைவன் கோயில்களும் செய்தன. கோட்டை முரசு ஒலிக்கத் தொடங்கிய உடனே நகரத்தைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் உள்ள எட்டு மணிக்கோளங்கள் முழங்க ஆரம்பிக்கும். இந்த முழக்கத்தைப் பின்பற்றி முப்பத்திரெண்டு மணிக்கூண்டுகள் ராஜ்ஜியமெங்கும் முழங்கும்..!

இதில் மூன்றே முக்கால் நாழிகை கொண்டது ஒரு முகூர்த்தம்..! சுப முகூர்த்தம் தொடங்கும் வேளையை மங்கள வாத்தியம் முழக்கி அறிவிப்பதும், அதுவும் சங்கிலித் தொடர் போல எடுத்துச் செல்லப்படுவதும் உண்டு.

நீர்க்கடிகை மனித சக்தியை நம்பியிருக்கிற ஒன்று. எட்டு சாமத்துக்கு எட்டு வேலையாட்கள் தேவைப்படுவார்கள்...

அணிமா தன்னிடமிருந்த காந்தக்கடிகையை எடுத்தாள்.

இரண்டு நிலைக்காந்தங்களின் நடுவில் சுழலும் நட்சத்திர வடிவிலான மற்றொரு காந்தம் அமைந்திருந்தது. இரு காந்தங்களின் ஈர்ப்பு மற்றும் விலக்கு விசையால் மூன்றாவது காந்தம் சுழல்கிறது. இதைப் பின்பற்றி பாக்ஷாண தகட்டின் மேல் பொருத்தப்பட்ட இரும்பு ஊசி சுழன்று நாழிகையைக் காட்டுகிறது..!

இரும்பு ஊசியின் பிளவையில் பதிந்திருக்கும் ரத்தின இழை இரவிலும் ஒளிரும்.!

இந்தப் பாக்ஷாண தகட்டுக்கு யட்சினித் தகடு என்று பெயர். புண்ணியம் செய்த ஆத்மாக்கள் புண்ணியப் பலன்களை அனுபவிப்பதற்கு முன் இறந்து விட்டால் யட்சினியாக அவதாரம் எடுப்பார்களாம். அவர்கள் மேனி அடிக்கடி நிறம் மாறும்..! உச்சிவெயில் வரும்போது பச்சை நிறமாகும்.. நடுநிசியில் பால் வெள்ளையாகும்..! காலையில் இளஞ்சிவப்பாகவும் மாலையில் இளம் ஊதாவாகவும் மாறும். இந்தத் தகடும் நிறம் மாறும்..! இரவு பகல் அறிய இயலாப் பாதாள அறையிலும் பயன்படுத்த வல்ல கடிகை இது – பராமரிப்பு தேவைப்படாதது.

இவை தவிர குறித்த காலத்தில் பணியை முடிக்க பல்வேறு மணற்கடிகைகள் பயனில் இருந்தன.

காந்தக் கடிகையோடு நீர்க்கடிகையை ஒப்பிட்டாள் அணிமா... பெரியவர் முகிலனை நலம் விசாரித்தாள். முந்தைய சாமத்துப் பணியாளர்..! ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறார்?

“அந்த தீர்த்தக்கோனை கண்டித்து வையம்மா..! அவன் முறை- ஆனாலும் வரவில்லை..! இரு சாமத்துக்கும் பார்ப்பது சிரமமல்லவா? “

பெரியவர் முறையிட அணிமா சலித்தாள்.

“ காவலரே..! தீர்த்தக்கோனை என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்..! “

மௌனமாகத் தலையாட்டினான் அந்தக் காவலன்..!

அணிமா போன பிறகு அந்தக் காவலன் தன் தோழனிடம் கேட்டான், “என்ன ராஜ மிடுக்கு? வெறும் பணிப்பெண்தானே இவள்? “

தோழன் வாய் திறக்கும் முன்னே சாமத்துப் பணியாளரான பெரியவர் குறுக்கிட்டார்..

“அணிமாதேவி யாரென்று தெரியுமா? இந்த வஞ்சி நாட்டு அரியணைக்கு ஒரு வகையில் சொந்தக்காரி..! “

காவலர்கள் திகைத்தனர்..!


தொடரும்

....................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (10-Nov-15, 3:29 pm)
பார்வை : 135

மேலே