அஷ்டலட்சுமிகளின் மகிமைகளாகப் புராண நூல்கள் கூறுவதென்ன
தீபாவளியன்று அதிகாலையில் தீபம் ஏற்றி வைத்து, வழிபடுவது விசேஷம். தீபம்+ஆவளி= தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடுவதால் இந்தப் பெயர்.
தீபம் ஏற்றும்போது இரண்டு முகமாகவோ அல்லது இரண்டு தீபங்களாகவோ ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இரண்டில் ஒன்று மகாலட்சுமியையும் மற்றொன்று மகாவிஷ்ணுவையும் குறிக்கும்.
தீபாவளித் திருநாளில் இப்படி தீபமேற்றி, அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். இந்த அஷ்ட லட்சுமிகளின் திரு நாமங்கள் என்னென்ன? அஷ்ட லட்சுமிகளின் மகிமைகளாகப் புராண நூல்கள் கூறுவதென்ன? சுருக்கமாகக் காண்போம்.
1. ஆதிலட்சுமி:
அமுதம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது லட்சுமியும் வந்தாள். அவளே ஆதிலட்சுமி. கருக்களும், உருக்க ளும் தோன்றும் முன்னே கருவும், உருவுமின்றி நிறைந் திருந்தவள் இந்த தேவி. ஆதிலட்சுமி தெற்கு நோக்கி வீற்றிருப்பாள்.
பிறப்பு- இறப்பு இரண்டையும் கட்டுப்படுத்தி ஆள்பவள் ஆதிலட்சுமி.
இவள் பாதத்துக்குக் கீழ் பூர்ண கும்பம், கண்ணாடி, சாமரம், துவஜம், ரிஷபம், பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திக் ஆகிய மங்கலப் பொருட்கள் இருப்பதாக ஞான நூல்கள் கூறுகின்றன.
தன் பொற்பாதம் பற்றியவருக்கு ‘மங்க லம், மங்கலம்’ என்று உணர்த்தவே எட்டு மங்கலச் சின்னங் களையும் தன்னுள் அமைத்துக் காட்டித் திருவருள் புரிகிறாள்.
2. தான்யலட்சுமி:
இந்த உலகின் பசுமைக்கு நாயகி தான்யலட்சுமி. உலக உயிர்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள், தானிய வகைகள் அனைத்தையும் அளிப்பவள் இவள்.
லட்சுமி தந்திரத்தில் தான்யலட்சுமி ‘சதாட்சி’ - ‘சாகம்பரி’ என்றெல்லாம் போற்றப்படுகிறாள். எட்டு திருக்கரங்களுடன் திகழ்கிறாள் தான்யலட்சுமி.
படியளந்து காக்கும் பெருமாளுக்கு இவளே கரம், இவளே காமதேனு, இவளே அமுதம். இந்த அமுதானவளை, அன்னையானவளைத் தொழுதால் தான்ய வளம் கிட்டும்.
3. தைரியலட்சுமி:
வாழ்வில் நம்பிக்கையையும் துணிச்சலை யும் தந்து நம்மை இயக்குபவள் தைரிய லட்சுமி. ராமாயணத்தில் ஒரு சம்ப வம்... ராமச்சந்திர மூர்த்தி, தன் பிள்ளைகளான லவ-குசர்களுடன் மோதிக் கொள்ள நேர்ந்தது. அப்போது லவ-குசர்கள் ஒரே பாணத்தில் தங்கள் தந்தையை வென்று விட்டனர். அவர்கள் ராமர் மீது எய்த பாணம் தாய் சீதா பிராட்டியார் அருள் பெற்ற சீதா பாணம்! அங்கே அந்த லோகநாயகி தைரிய லட்சுமியாகத் திகழ்கிறாள்.
4. கஜலட்சுமி:
கஜலட்சுமியின் மற்றொரு பெயர் ராஜலட்சுமி. இரு புறமும் யானைகள் கலசத் திருமஞ்சனம் செய்வது போல் எழுந்தருளி இருக்கும் இந்த லட்சுமியின் உருவத்தை நமது இல்லங்களின் வாசற்படியில், நிலைப் படிகளில் காணலாம். ராஜ யோக வாழ்க்கை வழங்குபவள் இவள்.
தாமரை நீரில் தோன்றும் மலர் - தூய்மை யின் சின்னம். லட்சுமியும் கலைமகளே. எனவே, தாமரை அவளது இருக்கையாகக் காணப் படுகிறது. வேத காலத்தில் ‘வசுந்தரா பிருத்வி’ என்று குறிக்கப்பட்ட நிலமகளே செல்வத்துக்குரிய நாயகி.
5. சந்தானலட்சுமி:
சிறந்த செல்வமான மக்கட் செல்வத்தை அளிப் பவள் சந்தானலட்சுமி. ஜடையுடன் கிரீடம், ஆபர ணங்கள் தரித்து கரத்தில் குழந்தையை ஏந்தியவளாகக் கன்னிகள் பீடத்தில் கருணையுடன் வீற்றிருக்கிறாள் சந்தானலட்சுமி.
6. விஜயலட்சுமி:
உயர்வான எண்ணங்களை நிறைவேற்றுபவள் விஜயலட்சுமி. கொல்லூர் திருத்தலத்தில் அன்னை மூகாம்பிகை, விஜயலட்சுமியாக அருள்கிறாள். குடசாத்திரி மலைச்சாரலில் கொடுமையே உருவாக விளங்கிய அசுரனின் கொடுமைகளைத் தடுத்து, அவனை ஊமையாக்கியதன் மூலம், உலகைக் காத் தருளும் விஜயலட்சுமியாகத் திகழ்கிறாள்.
7. வித்யாலட்சுமி:
கலைவாணியையும் லட்சுமியையும் இணைத்து நிற்பவளே வித்யாலட்சுமி. ‘ஸ்ரீ ஜயாக்ய ஸம்ஹிதை’யில் வாகீஸ்வரி (நாமகள்) என்ற பெயருடன் வித்யாலட்சுமியின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளது. ‘வெண்மையான உருவத்தில், நான்கு திருக்கரங்களுடன் கூடியவளும், நூல்களை இயற்றிக் கொண்டிருப்பவளும், நாத சொரூபமான பகவானின் சக்தி உருவமானவளுமான வித்யாலட்சுமி’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
8. தனலட்சுமி:
நமக்குச் செல்வ வளத்தை அளிப்பவள் தனலட்சுமி. இவளது அருளால்தான் சாட்சாத் சீனிவாச பெருமாளுக்கே குபேரனால் கடன் கொடுக்க முடிந்தது! ஆதிசங்கரரும் தேசிகரும் முறையே கனகதாரா, ஸ்ரீஸ்துதி பாடி இந்த தேவியின் அருளால் பொன்மழை பெய்வித்ததாக ஞான நூல்கள் கூறுகின்றன. ஸ்ரீப்ரஸ்ந ஸம்ஹிதையில் ‘சங்க- பதும நிதிகளை வைத்திருக்கும் தேவி’ என்று தனலட்சுமி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்க நிறத்தில், ஆபரணங்களுடன் அருள் தரிசனம் தரும் தனலட்சுமியின் கடைக்கண் பார்வை எங்கு படுகிறதோ, அங்கு செல்வங்கள் குவியும்.