அவள் என்னைக் குறை கூறுகிறாளா

31. அவள் என்னைக் குறை கூறுகிறாளா?


உப்புச் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கு முன், வழக்கம் போல் காந்திஜீ தேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இந்த யாத்திரையின் போது காசிக்குச் சென்று ஸ்ரீ பிரகாசாவின் வீட்டில் தங்கினார். அங்கிருந்து கிளம்பும்போது அக்குடும்பத்திலுள்ள எல்லோரும் காந்திஜியை வழியனுப்ப ஒன்று கூடினர். அவர்களில் ஸ்ரீ பிரகாசாவின் தாயாரும் ஒருவர். திடீரென்று அவள் காந்திஜியிடம் ‘மஹாத்மாஜீ, தாங்கள் ‘பா’விடம் மனம் நோகும்படி நடந்து கொள்ளுகிறீர்கள்’ என்றாள்.

சில நாட்களுக்கு முன் கஸ்தூரிபா செய்த சிறு தவறுக்காக ‘என் வருத்தம்; என் வெட்கம்’ என்ற உணர்ச்சி மிக்க கட்டுரையைக் காந்திஜி எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடுமையான வார்த்தைகளால் கஸ்தூரிபாவைக் கண்டனம் செய்திருந்தார். யாரோ ஒருவர் கஸ்தூரிபாவிடம் ரூபாய் நான்கு நன்கொடையாக்க் கொடுத்திருக்கிறார். அதை உரிய நேரத்தில் ஆசிரமத்தின் கஜானாவில் ‘பா’ சேர்க்க முடியாமற் போயிருந்தது. இந்தக் கட்டுரையைப் படித்த பலருக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது. இதனை மனதில் எண்ணிக்கொண்டுதான் ஸ்ரீ பிரகாசாவின் தாயார் காந்திஜியிடம் மேற்சொன்ன சொற்களைக் கூறினாள். ஆனால் காந்திஜியோ முற்றும் துறந்த முனிவராயிற்றே; சிரித்துக்கொண்டே, ‘பா’வுக்கு நான் சாப்பாடு போடுகிறேன், உடுக்க துணிமணி கொடுக்கிறேன். அவளை நான் கவனித்துக் கொள்கிறேன். மீண்டும் அவள் குறை கூறுகிறாளா? என்று கேட்டார்.

‘நான் ‘பா’வுக்குக் கொஞ்சம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் அவள் வாங்கிக்கொள்வதில்லை. வாங்க அனுமதியுங்கள்’ என்றார் அம்மையார்.

மகாத்மாஜி இதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லை, இல்லை, ரூபாய் ‘பா’வுக்குக் கொடுக்கவேண்டாம், ஸ்ரீபிரகாசாவிடம் கொடுங்கள். ஏனென்றால் அவர் எனக்காக்க் கஷ்டப்பட்டு நிதிசேர்த்துக் கொண்டிருக்கிறார். தாங்கள் கொடுக்கவிரும்பும் பணத்தை அந்த நிதிக்கே கொடுத்துவிடுங்கள்’

கடைசியில் அம்மையார் ‘பா’வுக்கு கொண்டுவந்திருந்த காசை அந்த நிதிக்கே கொடுத்துவிட்டார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:45 pm)
பார்வை : 99

சிறந்த கட்டுரைகள்

மேலே