பிறைசூடும் வானங்கள்

ஒவ்வொரு ம(னி)த நம்பிக்கைகளும் பிறை சூடுகின்றன
இந்தப் பிறை எல்லா ஊர்களிலும் தென்னங்கீற்றிலிருந்து ஒரு புறாவைப்போல விடுபடுகிறது.
எல்லா வானங்களிலும் எழிலாய் வளர்கிறது.
எல்லா தனிமைகளிலும் துணையாய் வருகிறது
எல்லா விழிகளிலும் கனவாய், எல்லா இருளிலும் ஓர் ஒளி அரும்பாய் பூக்கிறது இந்தப் பிறை ....!

மரபு சார்ந்த என் சந்தக்கவிதைகளின் தொகுப்பு வடிவமைப்பில் உள்ளது.
நூல் :
"பிறைசூடும் வானங்கள் "

நூலின் முன்விளக்கக் கவிதையே இது .
***************************************************


இவை

பிறைசூடி விரியும்
வானங்கள்
பச்சைமலைக் காடுகளின்
தானங்கள்

பனிப்பூவின் மனம் இசைக்கும்
நாதங்கள்
மனப்பூவின் பனி கசியும்
வேதங்கள்

கள்வடியும் மரக்கிளையின்
பானைகளில்
காட்டுவாசி கட்டிவைத்த
தாகங்கள்

கண்டெடுக்க முடியாத
மூலிகைகள்
கரைத்துக் குடித்துவரும்
காட்டு நதிகள்

பா வகைகள் பூணாத
புதிய மரபுகள்
உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் கவிதைகள்

வழி நெடுக பூத்துவரும்
வேதனைகளின் நிறங்கள்
வாழ்க்கையின் தோள்களிலே
தொத்தும் கிளிகள்

சந்தங்களின் மேடைகளில்
சதுராடும் மொழிகள்
தாகங்களையே தியானித்து
தவமிருக்கும் விழிகள்

தளை தட்டினாலும்
களை கட்டுவதாலோ
இவை
அழகிய பிழைகள் ?

_கவித்தாசபாபதி

எழுதியவர் : கவித்தாசபாபதி (13-Nov-15, 1:25 pm)
பார்வை : 103

மேலே