உரிமைகள் பறிக்கப்படும்
நள்ளிரவு தாண்டிக்கூட
நசிந்துபோகாத நம்பிக்கையுடன்
உடல் மனம் நோக உழலும்
உழைப்பாளனே !
பன்னாட்டு நிறுவனத்திற்கு
பங்காளன் ஆகிப்போனாய் .
பணம் அது ஒன்றே குறியென
பயணிக்கின்றாய் உன் வழியில்..
ஆடம்பர வாழ்வுக்கு
அடிமை ஆகிப்போன பின்
அத்துனை ஆற்றலையும்
அடமானம் வைக்கத் துணிந்தாய்.
உன் காற்றுப்புகா
கண்ணாடி அறை வெளியிலோ,
இளைத்தோர் பிழைக்க
உழைத்தோர் உண்டு களிக்க
சமன் செய்யப்படாத
சங்கடங்கள் நிறைந்த
சமுதாய நிலையதனை
சட்டை செய்ய மறவாதே !
பக்குவமாய் பறிக்கப்படும்
உன் உரிமை வாழ்வதனை
அயலவன் நாட்டிற்கு
அதிகாரப்பூர்வமாய்
அர்ப்பணிக்க துணியாதே !